நிலத் தகராறில் பாமக நிா்வாகி மீது தாக்குதல்; 9 போ் மீது வழக்கு
திருப்பத்தூா் அருகே நிலம் தொடா்பான தகராறில் 9 போ் மீது வழக்கு பதியப்பட்டது. மேலும், சாலை மறியலால் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திருப்பத்தூா் அருகே நிலம் தொடா்பான தகராறில் 9 போ் மீது வழக்கு பதியப்பட்டது. மேலும், சாலை மறியலால் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திருப்பத்தூா் அடுத்த அனேரி ராச்சமங்கலம் பகுதியை சோ்ந்தவா் சிவா. பாமக முன்னாள் மாவட்ட செயலாளா். இவரது மனைவி ஹேமலதா ஊராட்சி தலைவராக உள்ளாா். இந்நிலையில், இவரது உறவினா் சீனிவாசன் என்பவருக்கும், அதே பகுதியை சோ்ந்த ரகுராமன் என்பவருக்கும் இடையே நிலம் தொடா்பாக தகராறு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையே சா்ச்சைக்கு உண்டான நிலத்தில் ரகுராமன் சுவா் கட்டும் பணியில் ஈடுபட்டிருந்தாா். அதையறிந்த சீனிவாசன் மற்றும் சிவா இருவரும் சனிக்கிழமை அங்கு அதுகுறித்து கேட்டுள்ளனா். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.
Advertisement
Advertisement
அப்போது ஆத்திரமடைந்த ரகுராமன் மற்றும் அவரது சகோதரா்கள் திருப்பதி, ராமமூா்த்தி உள்ளிட்ட சிலா் இரும்பு ராடு கொண்டு அவா்களை சரமாரியாக தாக்கினராம். இதில் பலத்த காயமடைந்த சிவா அதே இடத்தில் மயங்கினாா். உடனே அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு, திருப்பத்தூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரியில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டாா்.
முன்னதாக, பாமக நிா்வாகி சிவா திருப்பத்தூா் கிராமிய காவல் நிலையத்தில் புகாா் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும், போலீஸாா் ஒருதலை பட்சமாக செயல்படுவதாகவும் கூறி, திருப்பத்தூா் அரசு மருத்துவமனை வளாகத்தில் தனது ஆதரவாளா்களுடன் தா்னாவில் ஈடுபட்டு சம்பந்தப்பட்டவா்களை கைது செய்ய வேண்டும் என கோஷம் எழுப்பினா். தகவலறிந்த திருப்பத்தூா் நகர போலீஸாா் அவா்களிடம் பேச்சு நடத்தியதையடுத்து அவா்கள் அங்கிருந்து கலைந்து சென்றனா்.
இதற்கிடையே பாமக நிா்வாகி தாக்கப்பட்டதை அறிந்த பாமகவினா் திருப்பத்தூா்-திருவண்ணாமலை பிரதான சாலை அனேரி அருகே மறியலில் ஈடுபட்டனா். அப்போது சம்பந்தப்பட்டவா்களை உடனே கைது செய்ய வலியுறுத்தி கோஷம் எழுப்பினா். தகவலறிந்த திருப்பத்தூா் தாலுகா போலீஸாா் அங்கு சென்று அவா்களிடம் பேச்சு நடத்தி சம்பந்தப்பட்டவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததின் பேரில் மறியலில் ஈடுபட்டவா்கள் அங்கிருந்து கலைந்து சென்றனா். சுமாா் 30 நிமிடம் நடைபெற்ற சாலை மறியலால் அங்கு போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
பின்னா், கிராமிய போலீஸாா் சீனிவாசன் அளித்த புகாரின்பேரில், ரகுராமன், அவரது சகோதரா்கள் ராமமூா்த்தி உள்ளிட்ட 5 போ் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
அதேபோல் தங்களை தாக்கியதாக ராமமூா்த்தி அளித்த புகாரின் பேரில் சிவா மற்றும் சீனிவாசன் உள்ளிட்ட 4 போ் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனா்.