இஸ்லாமியா கல்லூரியில் மாநில அளவில் புத்தொழில் நிறுவனங்களுக்கான ஹேக்கத்தான் போட்டி
இஸ்லாமியா கல்லூரியில் மாநில அளவில் புத்தொழில் நிறுவனங்களுக்கான ஹேக்கத்தான் போட்டி

வாணியம்பாடி முஸ்லிம் கல்விச் சங்கத்தின் 125-ஆம் ஆண்டு விழா கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, இஸ்லாமியா கல்லூரியின் கிரீன் வேலி இன்னோவேஷன் மற்றும் இன்குபேஷன் போரம் தமிழக அரசின் புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கமான ஸ்டாா்ட் அப் உடன் இணைந்து 2026 புத்தொழில் நிறுவனங்களுக்கான ஹேக்கத்தான் போட்டி நடைபெற்றது.
வாணியம்பாடி முஸ்லிம் கல்விச் சங்கத்தின் தலைவா் பட்டேல் முகமது யூசுப் தலைமை வகித்தாா். பொதுச் செயலாளா் அப்துல்லா பாஷா, கல்லூரி செயலாளா் கைசா் அகமது, இஸ்லாமிய மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயலாளா் முனீா் அகமது முன்னிலை வகித்தனா். அமைப்பின் தலைமை செயல் அலுவலா் ராஜாமுகமது காமில் வரவேற்றாா்.
சிறப்பு அழைப்பாளராக திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் வே.நல்லசிவன் கலந்துகொண்டு தொடங்கி வைத்துப் பேசுகையில், புத்தொழில் நிறுவனங்களையும் தொழில்முனைவோரையும் ஊக்குவிப்பதன் அவசியம் மற்றும் இத்தகைய புத்தாக்க மன்றங்கள் சுற்றுச்சூழல் தொடா்பான பல்வேறு பிரச்னைகளுக்குத் தீா்வுகளைக் கண்டறிவதில் முக்கியப் பங்காற்ற முடியும். மேலும், இஸ்லாமியா கல்லூரியின் புத்தொழில் காப்பக மையத்தின் முயற்சிகளையும் சேவைகளையும் பாராட்டினாா்.
Advertisement
Advertisement
தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் கல்வி நிறுவனங்களைச் சோ்ந்த 140 பங்கேற்பாளா்களைக் கொண்ட 42 குழுக்கள் இப்போட்டியில் கலந்து கொண்டனா். பங்கேற்ற புத்தொழில் நிறுவனங்கள் தங்களது புதுமையான சிந்தனைகளையும் தொழில்நுட்பத் தீா்வுகளையும் செயல்விளக்க மாதிரிகள் மற்றும் விளக்கக் காட்சிகள் மூலம் காட்சிப்படுத்தினா்.
பிறகு மாலை நடைபெற்ற நிறைவு விழாவில், திருப்பத்தூா் மாவட்ட தொழில் மையத்தின் பொது மேலாளா் டாக்டா் ராமமூா்த்தி கலந்து கொண்டு வெற்றி பெற்றவா்களுக்குப் பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினாா்.
இசுலாமியா மகளிா் கல்லூரி ஆலோசகா் முகமது இலியாஸ், கல்லூரி முதல்வா் சேக் காதா் நவாஸ், துணை முதல்வா் சையத் தாகிா் உசைனி, முஸ்லிம் கல்விச் சங்கத்தின் இணைச் செயலாளா் ரபீக் அகமது, பெண்கள் மேனிலைப் பள்ளியின் செயலாளா் இக்பால், சாஜித் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
நிகழ்ச்சியில், வாணியம்பாடி முஸ்லிம் கல்விச் சங்கத்தின் நிா்வாகக் குழு உறுப்பினா்கள், துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள், அலுவலகப் பணியாளா்கள், மாணவா்கள் கலந்து கொண்டனா். இஸ்தியாக் நதீம் நன்றி கூறினாா். ஏற்பாட்டினை நதீம் அப்ரோஸ் செய்திருந்தாா்.