நகராட்சியில் பசுமைக் குடில், பாதாள சாக்கடை திட்டப் பணிகள்: மண்டல இயக்குநர் ஆய்வு
திருவள்ளூர் நகராட்சியில் நடைபெற்று வரும் பசுமைக் குடில் மற்றும் பாதாளச் சாக்கடை இணைப்புத் திட்டப் பணிகள்
திருவள்ளூர் நகராட்சியில் நடைபெற்று வரும் பசுமைக் குடில் மற்றும் பாதாளச் சாக்கடை இணைப்புத் திட்டப் பணிகள் குறித்து நகராட்சிகளின் மண்டல இயக்குநர் இளங்கோவன் அதிகாரிகளுடன் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
திருவள்ளூர் நகராட்சியில் ஒவ்வொரு வார்டையும் முழு சுகாதாரமாக்கும் வகையில், நாள்தோறும் சேகரிக்கப்படும் குப்பைகளை பசுமைக் குடில் அமைத்து, உரமாக தயார் செய்யும் திட்டம் மற்றும் பாதாள சாக்கடை இணைப்பு அளிக்கும் திட்டம் ஆகியவற்றை செங்கல்பட்டு மண்டல நகராட்சிகளின் இயக்குநர் இளங்கோவன், அதிகாரிளுடன் நேரில் பார்வையிட்டார்.
அப்போது, ஈக்காடு குப்பைக் கிடங்கு அருகே உள்ள பசுமைக் குடிலில் நாள்தோறும் உரம் தயார் செய்தல் மற்றும் விவசாயிகளுக்கு விநியோகம் செய்வது குறித்துக் கேட்டறிந்தார்.
அதைத் தொடர்ந்து, நகராட்சிப் பகுதி 1-ஆவது வார்டில் டோல்கேட் அருகே பாதாளச் சாக்கடை திட்டப் பணிகளைப் பார்வையிட்டார். மேலும், இதுவரையில் பாதாளச் சாக்கடை இணைப்பு எத்தனை குடியிருப்புகளுக்கு வழங்கப்பட்டுள்ளன என்ற விவரத்தையும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். அப்போது, குடியிருப்புதாரர்களிடம் இணைப்பு பெற கையொப்பத்துடன் விண்ணப்பம் பெற்றுக் கொண்டு, வைப்புத் தொகையை 10 கட்டங்களாக செலுத்தும் வகையில், சலுகை வழங்கப்பட்டுள்ளதாகவும், இதற்காக நாள்தோறும் 130 வீடுகளை இலக்காகக் கொண்டு இணைப்புக் கொடுக்கும் பணி மும்முரமாக நடந்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இப்பணிகளை வரும் பிப்ரவரி மாத இறுதிக்குள் முடித்து, முழுமையான செயல்பாட்டுக்குக் கொண்டு வரவும் அதிகாரிகளுக்கு அறிவுரை
வழங்கினார்.
நகராட்சி ஆணையர் முருகேசன், பொறியாளர் செல்வகுமார், சுகாதார அலுவலர் கோவிந்தராஜ், ரமேஷ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.