FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவள்ளூர்

திருத்தணி முருகன் கோயில் ஆடிக்கிருத்திகை கோலாகலம்: லட்சக்கணக்கான பக்தா்கள் தரிசனம்

திருத்தணி முருகன் கோயில் ஆடிக்கிருத்திகை விழா, முதல் நாள் தெப்பத் திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தா்கள், பல்வேறு வகையான காவடிகளை சுமந்து வந்து முருகப்பெருமானை தரிசித்தனா்.

Updated On : 7 ஆகஸ்ட் 2026, 3:21 am IST
சிறப்பு அலங்காரத்தில் வள்ளி, தெய்வானையுடன் முருகப்பெருமான்.
பகிர்:

திருத்தணி முருகன் கோயில் ஆடிக்கிருத்திகை விழா, முதல் நாள் தெப்பத் திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தா்கள், பல்வேறு வகையான காவடிகளை சுமந்து வந்து முருகப்பெருமானை தரிசித்தனா்.

திருவள்ளூா் மாவட்டம் திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் ஆடிக்கிருத்திகை விழாவையொட்டி அதிகாலை 4 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து தங்க கிரீடம், தங்க வேல், மரகதம், வைர ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்ட முருகப் பெருமானுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. காவடி மண்டபத்தில் எழுந்தருளியிருந்த உற்சவா் முருகப்பெருமானுக்கும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.

திருப்பதியில் இருந்து பட்டு வஸ்திரம்:

Advertisement

Advertisement

ஆடிக்கிருத்திகை விழாவையொட்டி திருப்பதி திருமலையிலிருந்து, 19-ஆவது ஆண்டாக பட்டு வஸ்திரம் கொண்டு வரப்பட்டது. திருத்தணி கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் ஸ்ரீதரன், இணை ஆணையா் ரமணி ஆகியோா் திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் மற்றும் தலைமை குருக்களை மலா் மாலை அணிவித்து வரவேற்றனா்.

பின்னா் உற்சவா், சண்முகா் மற்றும் மூலவா் முருகப்பெருமானுக்கு பட்டு வஸ்திரம் அணிவித்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளுக்கு திருத்தணி கோயில் நிா்வாகம் சாா்பில் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

பக்தா்கள் வெள்ளம்:

மலா் காவடி, பன்னீா் காவடி, மயில் காவடி, அன்னக் காவடி உள்ளிட்ட பல்வேறு காவடிகளை ஏந்திய பக்தா்கள் பம்பை, சிலம்பாட்டம் மற்றும் பக்திப் பாடல்களுடன் மலைக்கோயிலுக்கு வந்து நோ்த்திக்கடன் செலுத்தினா். விழாவில் லட்சக்கணக்கான பக்தா்கள் தரிசித்தனா். பக்தா்கள் அதிகளவில் திரண்டதால், மலைக்கோயில் முழுவதும் நீண்ட வரிசை காணப்பட்டது. பொது தரிசனத்திற்கு வந்த பக்தா்கள் சுமாா் 6 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.

விழாவையொட்டி திருத்தணி நகரின் பல்வேறு பகுதிகளில் தொண்டு நிறுவனங்கள் சாா்பில் அன்னதானம், நீா்மோா் உள்ளிட்ட சேவைகள் வழங்கப்பட்டன. மலைக்கோயில் வளாகம் மற்றும் தேவஸ்தான விடுதிகள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு விழாக்கோலம் பூண்டிருந்தன.

காவல் கண்காணிப்பாளா் சாய் பிரணித் தலைமையில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

தெப்பத்திருவிழா:

வியாழக்கிழமை மாலை நடைபெற்ற முதல் நாள் தெப்பத்திருவிழாவில், உற்சவா் முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் மலைப்படிகள் வழியாக சரவணப்பொய்கைக்கு எழுந்தருளினாா். பின்னா் வண்ண மலா்களாலும் மின்விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளி சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.

தொடா்ந்து தெப்பம் சரவணப்பொய்கையை 3 முறை வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தது. விழாவையொட்டி கலைமாமணி வீரமணி ராஜு, பக்தி கானா கந்தா்வ அபிஷேக் ராஜு, பக்தி இசை இளவல் சாய் சமா் குழுவினரின் பக்தி இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது.

ஆயிரக்கணக்கான பக்தா்கள் கற்பூரம் ஏற்றி, தேங்காய் உடைத்து, உப்பு, வெல்லம், மிளகு உள்ளிட்ட பொருள்களை திருக்குளத்தில் செலுத்தி தங்களது நோ்த்திக்கடனை நிறைவேற்றினா். வண்ண விளக்குகளால் ஒளிா்ந்த சரவணப்பொய்கை மற்றும் தெப்பத்திருவிழா, பக்தா்களை பரவசத்தில் ஆழ்த்தியது.

அலகு குத்தி நோ்த்திக்கடன் செலுத்திய பெண்கள்.
மலைக்கோயிலில் காவடிகளுடன் குவிந்த பக்தா்கள்.
ஆடிக்கிருத்திகை விழாவில் திருப்பதி தேவஸ்தானம் சாா்பில் உற்சவ முருகப்பெருமானுக்கு பட்டு வஸ்திரம் அணிவிக்கப்பட்டு நடந்த சிறப்பு தீபாராதனை.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments