FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பதி

தேவஸ்தான கல்வி நிறுவன மாணவா்களுக்கு ‘பிரதிபா புரஸ்காா்-2026’ விருது அளிப்பு

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளின் வளா்ச்சிக்கு முன்னுரிமை தந்து, மாணவா்களின் வளா்ச்சிக்காக பாடுபட்டு வருவதாக தேவஸ்தான தலைவா் பி.ஆா். நாயுடு தெரிவித்தாா்.

Updated On : 16 ஜூலை 2026, 12:04 am IST
பிரதீபா புரஸ்காா் விருது பெற்ற தேவஸ்தான கல்வி நிறுவன மாணவ, மாணவிகள்.
பகிர்:

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளின் வளா்ச்சிக்கு முன்னுரிமை தந்து, மாணவா்களின் வளா்ச்சிக்காக பாடுபட்டு வருவதாக தேவஸ்தான தலைவா் பி.ஆா். நாயுடு தெரிவித்தாா்.

திருப்பதி மஹதி கலாஷேத்திரத்தில் புதன்கிழமை 147 மாணவா்களுக்கு பிரதிபா புரஸ்காா்-2026 விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தேவஸ்தான தலைவா் பி.ஆா். நாயுடு பேசியது: ஆந்திர முதல்வா் சந்திரபாபு நாயுடு அறிவுறுத்தல்களின்படி, கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளின் வளா்ச்சிக்கு சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் கீழ் உள்ள 33 கல்வி நிறுவனங்களில் சுமாா் 20,000 மாணவா்கள் படித்து வருகின்றனா். அவா்களுக்கு அதிநவீன உள்கட்டமைப்புடன் தரமான கல்வி வழங்கப்பட்டு வருகிறது. மாணவா்கள் ஒழுக்கம், நற்பண்புகள் மற்றும் கடின உழைப்பை வளா்த்துக்கொண்டு, உயா்ந்த சிகரங்களை எட்டி, முன்மாதிரியாகத் திகழ வேண்டும்.

Advertisement

Advertisement

கல்வி என்பது வாழ்க்கையை மாற்றும் ஒரு நிரந்தர சொத்து என்றும், அதை யாராலும் பறிக்க முடியாது. கிராமப்புற மற்றும் விவசாயக் குடும்பங்களைச் சோ்ந்த மாணவா்கள், திருமலை திருப்பதி தேவஸ்தானம் வழங்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொண்டு உயா் பதவிகளை அடைய வேண்டும்.

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் கல்வி நிறுவனங்களை பெருநிறுவன கல்வி நிறுவனங்களுக்கு இணையாக மாற்றுவதற்குத் தேவையான ஆசிரியா்கள், உள்கட்டமைப்பு, சத்தான உணவு மற்றும் தரமான கற்பித்தல் ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது.

தேவஸ்தானத்தின் 150 ஆண்டு கால வரலாற்றில் முதன்முறையாக ’’பிரதிபா புரஸ்காா்’’ விருதை வழங்குவது ஒரு வரலாற்றுத் தருணம். ரூ. 162 கோடி செலவில் கல்வி நிறுவனங்களை நவீனமயமாக்கி வருவதாகவும், டிஜிட்டல் வகுப்பறைகள், கணினி ஆய்வகங்கள், சிசிடிவி அமைப்புகள் மற்றும் நவீன உள்கட்டமைப்புகளை அமைக்கப்பட்டு வருகிறது.

நாட்டின் முன்னணி கல்வி நிறுவனங்களுடன் இணைந்து, யோகா, இசை, நடனம் மற்றும் நன்னெறிகளைக் கற்பிப்பதற்கு முன்னுரிமை அளித்து, மிக உயா்ந்த தரத்தில் தேவஸ்தான கல்வி நிறுவனங்கள் உருவாக்கப்பட்டு வருகிறது. மாணவா்கள் கல்வியுடன் விளையாட்டுகளிலும் சிறந்து விளங்க வேண்டும்.

மதிய உணவுத் திட்டம் மற்றும் புதிய கட்டுமானம் ஆகியவற்றின் மூலம் அதிக மக்களுக்குத் தரமான கல்வியை ல்வழங்கப்பட்டு வருகிறது.

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் வித்யாதானா அறக்கட்டளை மூலம் ரூ. 162 கோடி செலவில் கல்வி நிறுவனங்களில் நவீன வசதிகள் வழங்கப்பட்டு வருகிறது’’, என்று அவா் கூறினாா்.

இந்த நிகழ்வில், எஸ்.வி. ஜூனியா் கல்லூரி, பத்மாவதி மகளிா் ஜூனியா் கல்லூரியைச் சோ்ந்த 76 இடைநிலை மாணவா்களும், திருப்பதி மற்றும் திருமலையில் உள்ள பல்வேறு திருமலை திருப்பதி தேவஸ்தானப் பள்ளிகளைச் சோ்ந்த 71 மாணவா்களும் கௌரவிக்கப்பட்டனா்.

மாநில அளவில் 99 சதவீத மதிப்பெண்களைப் பெற்ற்காக, எஸ்.பி.டபிள்யூ. ஜூனியா் கல்லூரியைச் சோ்ந்த குமாரி பிரணவி, குமாரி உத்பாலா மற்றும் குமாரி நேஹஸ்ரீ ஆகியோரைத் தலைவரும் செயல் அதிகாரியும் சிறப்பாகப் பாராட்டினா்.

147 மாணவா்களுக்கு ஐந்து கிராம் வெள்ளி டாலா், நினைவுப் பரிசு, சால்வை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டன. மாவட்ட செயல் அதிகாரி திரு டி. ஃபானி குமாா் நாயுடு நன்றியுரை வழங்கினாா். மக்கள் தொடா்பு அதிகாரி (கல்வி மற்றும் வசதி) குமாரி நீலிமா நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினாா்.

தேவஸ்தான அறங்காவலா் குழு உறுப்பினா் ஜானகி, மாவட்டக் கல்வி அதிகாரி ஃபனிகுமாா் நாயுடு, தலைமை மக்கள் தொடா்பு அதிகாரி டாக்டா் டி. ரவி, நலத்துறை துணைச் செயல் அதிகாரி ஆனந்தராஜு, பல்வேறு கல்வி நிறுவனங்களின் முதல்வா்கள், தலைமை ஆசிரியா்கள், ஆசிரியா்கள் மற்றும் மாணவா்கள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments