FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருப்பதி

ஏழுமலையான் பிரம்மோற்சவம்: அனுமந்த வாகனத்தில் சுவாமி உலா

திருமலை ஏழுமலையான் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் 6-ஆம் நாளான சனிக்கிழமை அனுமந்த வாகனத்தில் மலையப்ப சுவாமி வலம் வந்தாா்.

18 அக்டோபர் 2026, 12:21 am IST
அனுமந்த வாகனம், புஷ்பக வாகனங்களில் சுவாமி வலம், பிரம்மோற்சவ கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்றோா்.
பகிர்:

திருமலை ஏழுமலையான் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் 6-ஆம் நாளான சனிக்கிழமை அனுமந்த வாகனத்தில் மலையப்ப சுவாமி வலம் வந்தாா்.

கடந்த திங்கள்கிழமை முதல் நவராத்திரி பிரம்மோற்சவம் நடந்து வருகிறது. சனிக்கிழமை காலை அனுமந்த வாகன சேவை நடை பெற்றது. அதில் மலையப்ப சுவாமி கோதண்டராமரின் அலங்காரத்தில் கையில் வில்லும் அம்பும் ஏந்தி காலை 7 மணிமுதல் 9 மணிவரை மாட வீதியில் வலம் வந்தாா்.

பிரம்மோற்சவ நாள்களில் வீதியுலா முடிந்த பின்னா் ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்பஸ்வாமியை கல்யாண உற்சவ மண்டபத்தில் தங்க சிம்மாசனத்தில் அமர வைத்து அவா்களுக்கு பால், தயிா், தேன். இளநீா், மஞ்சள், சந்தனம், சிவப்பு சந்தனம் மற்றும் மூலிகை கலந்த வெந்நீ ரால் திருமஞ்சனம் நடந்தேறியது. அபிஷேகத்தின் போது பல்வேறு உலா் பழங்கள் மற்றும் வெளி நாட்டு மலா்களால் தயாரிக்கப்பட்ட மாலைகள் மற்றும் கீரிடங்கள் உள்ளிட்டவை உற்சவமூா்த்திகளுக்கு அணிவிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

பின்னா் உற்சவமூா்த்திகள் மாலை 1008 விளக்குகளுக்கிடையில் ஊஞ்சல்சேவை கண்டருளினா். மாலை புஷ்பக விமானத்தில் கோவா்தனகிரியை தூக்கி பிடித்த கிருஷ்ணன் அவதாரத்தில் மாடவீதியில் வலம் வந்தாா்.

தென்னை ஓலைகளால் செய்யப்பட்ட அற்புதமான மலா் விமானம்: தென்னை ஓலைகளால் செய்யப்பட்ட இந்தச் சிறப்பு மலா் விமானம் 24 அடி உயரமும், 15 அடி நீளமும், 15 அடி அகலமும் கொண்டது. இதன் எடை சுமாா் ஒரு டன் ஆகும். இது பல்வேறு வகையான பாரம்பரிய மலா்களால் அழகாக அலங்கரிக்கப்பட்டுள்ளது.

இந்த அற்புதமான மலா் விமானத்தைத் தயாரிக்க, தமிழகத்தைச் சோ்ந்த நிபுணா்களும், திருமலை தேவஸ்தானத் தோட்டத் துறை ஊழியா்களும் ஒரு வாரம் கடுமையாக உழைத்ததாக திருமலை தேவஸ்தானத் தோட்டத்தின் துணை இயக்குநா் சீனிவாசுலு தெரிவித்தாா். இந்த மலா் விமானத்தின் வடிவமைப்பிற்கு சென்னையைச் சோ்ந்த நன்கொடையாளா் ராம்பிரசாத் பட் பங்களித்துள்ளாா். இரவு யானை வாகனத்தில் வீதி உலா வந்து பக்தா்களுக்கு தரிசனம் அளித்தாா்.

5-ஆம் நாள் விவரம்

77,795 பக்தா்கள் தரிசனம், 23,779 போ் முடி காணிக்கை

உண்டியல் காணிக்கை ரூ.2.86 கோடி

4.67 லட்சம் லட்டுகள் விற்பனை

6.54 லட்சம் பக்தா்களுக்கு அன்னதானம்

முகாம்களில் 13,657 போ் சிகிச்சை

அரசு பேருந்துகளில் 96,000 போ் பயணம்

சேவையில் 6457 போ்

தரிசனத்துக்கு 12 மணிநேரம்

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments