FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

அடுத்த தலைமுறை நலமாக வாழ பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க வேண்டும்: மாவட்ட ஆட்சியர்

அடுத்த தலைமுறை நன்றாக வாழ வேண்டும் என்றால் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்த்து ஆரோக்கியமான சூழலை உருவாக்க வேண்டும்

30 ஜனவரி 2024, 10:08 pm IST
பகிர்:

அடுத்த தலைமுறை நன்றாக வாழ வேண்டும் என்றால் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்த்து ஆரோக்கியமான சூழலை உருவாக்க வேண்டும் என்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி வலியுறுத்தினார்.
செய்யாறு வட்டம், உக்கல் கிராமத்தில் மனுநீதி நாள் திட்ட முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
முகாமுக்கு தலைமை வகித்த மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி பேசியதாவது:
 அரசின் திட்டங்களால் மக்கள் பயன்பெற வேண்டும் என்பதற்காக கிராமங்களில் மனுநீதி நாள் முகாம் நடத்தப்படுகிறது. இந்த முகாம்கள் மூலம் அரசின் நலத் திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன. 
தமிழக அரசு பிளாஸ்டிக் ஒழிப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 
திருவண்ணாமலை மாவட்டத்தில் செப்டம்பர் 15-ஆம் தேதி முதல் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை விதிக்கப்படுகிறது. 
வீட்டிலிருந்து துணிப்பை, பாத்திரங்கள் எடுத்துச் சென்று கடைகளில் பொருள்கள் வாங்கி வந்த நிலை மாறி, தற்போது கடையில் தரும் பிளாஸ்டிக் பைகளில் பொருள்களை வாங்கி வருகிறோம். 
இன்று கடையில் பார்சல் "டீ' வாங்கினால் அதையும் பிளாஸ்டிக் பையில் வைத்து தருகிறார்கள். பிளாஸ்டிக் பொருள்கள் பயன்படுத்துவதால் அதில் உள்ள ரசாயனத்தால் நமக்கு பாதிப்பு ஏற்படுகிறது.  இன்றை கால உணவுப் பழக்க வழக்கங்களில் உடலை பாதிக்கும் பொருள்களை நாம் உண்டு வருகிறோம். 
பிளாஸ்டிக் இல்லாத வாழ்கையை உருவாக்க நாம் போய் கொண்டிருந்தால், நல்ல சமுதாயத்தை உருவாக்க முடியும் 
நாம் ஒவ்வொரு வரும் தினமும் 80-85 கிராம் பிளாஸ்டிக் உபயோகப்படுத்தி வருகிறோம். திருவண்ணாமலை மாவட்டத்தில் தினமும் 20 டன் பிளாஸ்டிக் பயன்பாடு உள்ளது. 
ஆரோக்கியமான வாழ்கை சூழலை உருவாக்க, பழைய கால முறையை நாம் பின்பற்ற வேண்டும்.
தமிழக அரசு பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் ஒழிப்பதற்காக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. நாம் குப்பையில் போடும் பிளாஸ்டிக்கை ஆடுகள், மாடுகள் உட்கொண்டு உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.
அடுத்த தலைமுறை நன்றாக வாழ வேண்டும் என்றால் பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் புறக்கணித்து, ஆரோக்கியமான வாழ்க்கை சூழலை உருவாக்க வேண்டும் என்றார்.
நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் பல்வேறு துறைகள் சார்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டு, 537 பயனாளிகளுக்கு ரூ.40.25 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை வழங்கினார். 
சமூக பாதுகாப்பு திட்ட தனித் துணை ஆட்சியர் உமாமகேஸ்வரி ராமச்சந்திரன், வருவாய் கோட்ட அலுவலர் ஆர்.அண்ணம்மாள், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் கி.அரிதாஸ், மாவட்ட சமூக நல அலுவலர் கிறிஸ்டீனா கார்த்தி, சுகாதாரப் பணிகள் இணை இயக்குநர் வி.கோவிந்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments