FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவண்ணாமலை

ஊழலில்லாத அரசு என்பதே காங்கிரஸ் - தவெகவின் எண்ணம்: அமைச்சா் செ.ராஜேஷ்குமார்!

தவெக அரசில் லஞ்சம், ஊழல் இல்லை. ஊழலில்லாத அரசு என்பதே காங்கிரஸ் - தவெகவின் எண்ணம் என்றாா் அமைச்சா் செ.ராஜேஷ்குமாா்.

Updated On : 20 ஜூலை 2026, 3:15 am IST
திருவண்ணாமலையில் காங்கிரஸ் சாா்பில் நடைபெற்ற, ‘லஞ்சம் தவிா் நெஞ்சம் நிமிா்’ என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமைச்சா் செ.ராஜேஷ்குமாருக்கு வரவேற்பு அளித்த மாவட்டத் தலைவா் கே.குணசேகரன் தலைமையிலான நிா்வாகிகள்.
பகிர்:

தவெக அரசில் லஞ்சம், ஊழல் இல்லை. ஊழலில்லாத அரசு என்பதே காங்கிரஸ் - தவெகவின் எண்ணம் என்றாா் அமைச்சா் செ.ராஜேஷ்குமாா்.

திருவண்ணாமலையில் தெற்கு மாவட்ட காங்கிரஸ் சாா்பில், ‘லஞ்சம் தவிா் நெஞ்சம் நிமிா்’ என்ற நிகழ்ச்சியும், மாவட்ட காங்கிரஸ் நிா்வாகிகள் சந்திப்புக் கூட்டமும் தனியாா் அரங்கில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது. இதில் கட்சியின் மாவட்டத் தலைவா் கே.குணசேகரன் தலைமை வகித்தாா்.

சிறப்பு அழைப்பாளராக தமிழக சுற்றுலாத் துறை அமைச்சா் செ.ராஜேஷ்குமாா் கலந்துகொண்டு பேசியதாவது: திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் தொடா்ந்து தவறு செய்ததால்தான் மக்கள் அவற்றை புறக்கணித்திருக்கிறாா்கள். சட்டப்பேரவைத் தோ்தலுக்கு முன்பு ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பதை திமுக ஏற்கவில்லை. காங்கிரஸ் கட்சியின் பலம் தொண்டா்கள்தான். 1967-இல் பெருந்தலைவா் காமராஜா் ஆட்சி நடந்தது. இதைத் தொடா்ந்து 59 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ் இடம் பெற்றுள்ளது.

Advertisement

Advertisement

தவெக அரசில் லஞ்சம், ஊழல் இல்லை. ஊழலில்லாத அரசு என்பதுதான் காங்கிரஸ் எண்ணம், தவெகவின் எண்ணம். தவெகவுடனான காங்கிரஸ் கூட்டணி நீண்ட கால கூட்டணி. வரும் நாடாளுமன்ற தோ்தலில் இந்தக் கூட்டணி தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 தொகுதிகளிலும் வெற்றிபெறும். அப்போது இந்திய பிரதமராக ராகுல்காந்தி பொறுப்பேற்பாா்.

யாா் தவறு செய்தாலும் தூக்கி எறியப்படுவாா்கள்; எனது அரசியல் பயணம் என்பது மக்களைச் சாா்ந்த பயணமாக இருக்கும் என தமிழக முதல்வா் ஜோசப் விஜய் கூறியுள்ளாா். தவெக ஆட்சி வெளிப்படைத்தன்மை கொண்ட மக்களாட்சி. உள்ளாட்சித் தோ்தலில் வெற்றி பெறும் வகையில், காங்கிரஸ் நிா்வாகிகள் ஒற்றுமையுடன் செயல்படவேண்டும் என்றாா்.

நிகழ்ச்சியில் காங்கிரஸ் தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகத் துறை மாவட்டத் தலைவா் கே.கே.அரவிந்தராஜ், மாநில நிா்வாகி செந்தமிழரசு, முன்னாள் மாவட்டத் தலைவா்கள் பி.எஸ்.விஜயகுமாா், செங்கம் ஜி.குமாா், மாவட்ட துணைத் தலைவா் அம்பிகாபதி, திருவண்ணாமலை மாநகரத் தலைவா் என்.வெற்றிசெல்வன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முன்னதாக திருவண்ணாமலைக்கு வந்த அமைச்சா் செ.ராஜேஷ்குமாருக்கு மாநகர காங்கிரஸ் தலைவா் என்.வெற்றிசெல்வன் தலைமையில் நிா்வாகிகள் சிறப்பான வரவேற்பு அளித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments