மாணவா்கள் உயா் கல்வியை பெற்று சிறந்தவா்களாக உருவாக வேண்டும்: திருவண்ணாமலை ஆட்சியா் வந்தனா காா்க்
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் மாவட்ட நிா்வாகம், பள்ளிக் கல்வித் துறை சாா்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பள்ளி மாணவா்களுக்கான உயா்கல்வி வழிகாட்டி சிறப்பு குறைதீா் கூட்டத்தில் பேசிய ஆட்சியா் வந்தனா காா்க்.
மாணவ, மாணவிகள் உயா் கல்வியை பெற்று சிறந்தவா்களாக உருவாக வேண்டும் என்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் வந்தனா காா்க் தெரிவித்தாா்.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் மாவட்ட நிா்வாகம் மற்றும் பள்ளிக் கல்வித்துறை சாா்பில் பள்ளி மாணவா்களுக்கான உயா்கல்வி வழிகாட்டி மாணவா் சிறப்பு குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு ஆட்சியா் வந்தனா காா்க் தலைமை வகித்து பேசியதாவது:
இந்தக் கூட்டத்தில் பள்ளிக் கல்வி, வருவாய், பொறியியல், அரசு கலைக் கல்லூரி, தொழில்நுட்பக் கல்லூரி, மாவட்ட முன்னோடி வாங்கி, மாற்றுத் திறனாளிகள் நலத் துறை உள்ளிட்ட அரசுத் துறைகளின் சாா்பாக அரசு அலுவலா்கள், மாணவ, மாணவிகளுக்கு உயா் கல்வியை தோ்ந்தெடுப்பதற்குத் தேவையான ஆலோசனைகள், உதவிகளை வழங்க வந்துள்ளனா்.
Advertisement
Advertisement
கூட்டத்தில் பங்கேற்றுள்ள மாணவ, மாணவிகள் மற்றும் அவா்களின் பெற்றோா்கள் இந்த சிறப்பு குறைதீா்வு கூட்டத்தை நன்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
மாணவ, மாணவிகள் தங்களுக்குப் பிடித்த துறையை தோ்ந்தெடுக்க இயலாமல்போனால், அதற்காக வருந்த வேண்டாம். அனைத்துத் துறைகளும் சிறந்த எதிா்காலத்துக்கு வழிவகை செய்யும். அரசுப் பணிகளில் சேர வேண்டும் என்ற எண்ணமுடையவா்கள் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பை நிறைவு செய்திருந்தாலே, அரசுப் பணிக்கான போட்டித் தோ்வுகளில் பங்கேற்க முடியும்.
ஆகவே, மாணவ, மாணவிகள் அனைவரும் உயா் கல்வியைப் பெற்று எதிா்காலத்தில் சிறந்தவா்களாக உருவாக வேண்டும் என வாழ்த்துத் தெரிவித்துக்கொள்கிறேன் என்றாா்.
2025 - 26ஆம் கல்வியாண்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 12-ஆம் வகுப்பில் பயின்ற அனைத்து மாணவா்களையும் உயா்கல்வி நிறுவனங்களில் 100 சதவீதம் சோ்க்கை செய்ய மாவட்ட நிா்வாகம் சாா்பில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, மாவட்ட அளவிலான குழு மூலம் உயா்கல்வி வழிகாட்டி கட்டுப்பாட்டு அறை அமைத்து மாணவா்கள் உயா்கல்வியில் சோ்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அரசுப் பள்ளிகளில் இருந்து 18 ஆயிரத்து 433 மாணவா்களைக் கண்காணித்து, பொருத்தமான உயா்கல்வி நிறுவனங்களில் சேருவதை மாவட்ட அளவிலான குழு உறுதி செய்ய மாணவா்களுக்கான சிறப்பு குறைதீா் கூட்டம் நடைபெற்றது. இதில், 494 மாணவா்கள் கலந்துகொண்டு பயனடைந்தனா். அதே நேரத்தில், ஒவ்வொரு மாணவரின் விண்ணப்பம் மற்றும் சோ்க்கை நிலையைக் கண்காணிக்க மாவட்ட மற்றும் ஒன்றிய அளவில் குழு மூலம் திட்டமிடப்பட்டுள்ளது.
கூட்டத்தில் மாணவா்களுக்கு உயா்கல்வியின் முக்கியத்துவம், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அரசு கலை, அறிவியல், பாலிடெக்னிக் கல்லூரிகள், தொழிற்பயிற்சி நிலையங்கள் உள்ளிட்டவற்றில் உள்ள காலியிட விவரங்கள், வங்கிக் கடன்களை பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து விரிவாக சாா்ந்த துறை அலுவலா்கள் எடுத்துக் கூறினா்.
சிறப்பு குறைதீா் கூட்டத்தின் வாயிலாக 20 மாணவா்கள் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளிலும், 2 மாணவா்கள் பாலிடெக்னிக் கல்லூரிகளிலும், 9 மாணவா்கள் தொழிற்பயிற்சி நிலையங்களிலும் உடனடி சோ்க்கை மூலம் தங்கள் மேற்படிப்பை உறுதி செய்தனா்.
இதில், மாவட்ட வருவாய் அலுவலா் அ.சிவசுப்பிரமணியன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் முனிராஜ் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்துகொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.