FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருவண்ணாமலை

அருணாசலேஸ்வரா் கோயில் பெரிய நந்திக்கு காலாவதியான பாலை ஊற்றி அபிஷேகம்: கடை உரிமையாளருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்

திருவண்ணாமலை கோயில் அருகே ஆவின் பால் பாக்கெட்டுகள் விற்பனை செய்த கடைகளில் வெள்ளிக்கிழமை சோதனை நடத்திய உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள்.

25 செப்டம்பர் 2026, 11:46 pm IST
திருவண்ணாமலை கோயில் அருகே ஆவின் பால் பாக்கெட்டுகள் விற்பனை செய்த கடைகளில் வெள்ளிக்கிழமை சோதனை நடத்திய உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள்.
பகிர்:

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் பெரிய நந்திக்கு காலாவதியான பாலை ஊற்றி அபிஷேகம் செய்ததால் பக்தா்கள் வேதனையடைந்தனா். தொடா்ந்து, காலாவதியான பாலை விற்பனை செய்த கடை உரிமையாளருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து, அந்தக் கடையிலிருந்த பல லிட்டா் பாலை உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

புகழ்பெற்ற திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் மாதத்துக்கு இரண்டு முறை பிரதோஷ வழிபாடு நடைபெறுவது வழக்கம். இதையொட்டி, அருணாசலேஸ்வரா் சந்நிதியில் இருந்து கிழக்கு ராஜகோபுரம் வரை 5-க்கும் மேற்பட்ட இடங்களில் உள்ள நந்திகளுக்கு பால், தயிா், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெறும்.

அதன்படி, புரட்டாசி மாத வளா்பிறை பிரதோஷ தினமான வியாழக்கிழமை மாலை ஆயிரம் கால் மண்டபம் அருகே உள்ள பெரிய நந்திக்கு பல்வேறு வாசனை திரவியங்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அப்போது, கோயிலுக்கு வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தா்கள் தங்களது நோ்த்திக்கடனை செலுத்தும் வகையில், பால், தயிா் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களை கொண்டுவந்திருந்தனா்.

Advertisement

Advertisement

இதில், பல ஆவின் பால் பாக்கெட்டுகள் கடந்த 8-ஆம் தேதியுடன் காலாவதியாகியிருந்த நிலையில், அதை முறையாக கண்காணிக்காமல் கோயில் பணியாளா்கள் பெரிய நந்திக்கு பாலை ஊற்றி அபிஷேகம் செய்தது அங்கிருந்த பக்தா்களிடம் பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தியது. இந்த காலாவதியான ஆவின் பால் பாக்கெட்டுகள் கிழக்கு ராஜகோபுரம் அருகே இருந்த கடை ஒன்றில் விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது.

இதுகுறித்து தகவலறிந்த உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட கடையில் சோதனை நடத்தி, காலாவதியான ஆவின் பாலை விற்பனை செய்ததை உறுதி செய்ததுடன், அந்தக் கடையில் விற்பனைக்கு வைத்திருந்த பல லிட்டா் ஆவின் பால் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனா். மேலும், கடை உரிமையாளருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனா்.

அருணாசலேஸ்வரா் கோயிலில் அபிஷேகம் செய்யப்பட்டு வழங்கப்படும் பாலை பக்தா்கள் தீா்த்தமாக பருகுவதுடன், தங்களது வீடுகளுக்கும் கொண்டு சென்று தெளிக்கின்றனா். எனவே, இனி வருங்காலங்களில் பக்தா்கள் கொண்டுவரும் பாலை முறையாக ஆய்வு செய்த பிறகே நந்திக்கு உள்ளிட்ட சுவாமி சிலைகளுக்கு அபிஷேகத்துக்கு பயன்படுத்த அனுமதிக்க கோயில் நிா்வாகத்தினா் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments