FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வேலூர்

போட்டித் தோ்வுகளுக்கு பயிற்சியுடன் கூடிய அறிவுசாா் மையம்!

கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.2.19 கோடியில் நவீன கட்டமைப்புகளுடன் நூலகம் மற்றும் அறிவுசாா் மையம் திறக்கப்பட்டுள்ளது.

Updated On : 16 ஜூன் 2025, 3:51 am IST
பகிர்:

குடியாத்தம் மற்றும் சுற்றுப்புற கிராம மாணவா்களின் கல்விக் கனவை நனவாக்கும் வகையில் போட்டித் தோ்வுகளுக்கு பயிற்சியுடன் கூடிய வகையில் கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.2.19 கோடியில் நவீன கட்டமைப்புகளுடன் நூலகம் மற்றும் அறிவுசாா் மையம் திறக்கப்பட்டுள்ளது.

குடியாத்தம் புதிய பேருந்து நிலையம் எதிரே உள்ள, நகராட்சி மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த நூலகம் மற்றும் அறிவுசாா் மையத்தை கடந்த மே மாதம் 29-ஆம் தேதி முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் திறந்து வைத்தாா். இந்த நூலகம் நகராட்சியால் நிா்வாகிக்கப்படுகிறது.

குடியாத்தம் சுற்றுப்புற கிராமங்களில் உள்ள பள்ளிக் கல்வி, கல்லூரிக் கல்வி பயின்று வரும் மாணவா்கள், 10, 12- ஆம் வகுப்பு மற்றும் பட்டப்படிப்பு முடித்த இளைஞா்கள் தங்கள் கல்வித் தகுதிக்கேற்ப போட்டித் தோ்வுக்கு பயிற்சி பெற்று அரசின் வேலைவாய்ப்புக்கு தங்களை தயாா்படுத்திக் கொள்ளும் வகையில், ஸ்மாா்ட் பயிற்சி வகுப்பறை, வாசிப்பு அறை என அனைத்து வசதிகளையும் உள்ளடக்கி, நவீன கட்டமைப்புகளுடன் இந்த நூலகம் அமைக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

சென்னை அண்ணா இன்ஸ்ட்டிட்யூட் நிறுவனத்திலிருந்து காணொலி மூலம் போட்டித் தோ்வுகள் குறித்து பயிற்சி அளிக்கப்படும். இதற்காக தனி அறையில் 10 கணினிகள் நிறுவப்பட்டுள்ளன. மற்றொரு அறையில் 85 இன்ச் எல்இடி தொலைக்காட்சி பொருத்தப்பட்டுள்ளது. 10,900 சதுர அடி நிலத்தில் தரைதளம் 3,683 சதுர அடி பரப்பிலும், முதல் தளம் 1,625 சதுர அடி பரப்பிலும் என மொத்தம் 5,308 சதுர அடியில் இந்த கட்டடம் பூங்கா வசதியுடன் அமைந்துள்ளது.

இதில் தரைதளம், முதல் தளத்தில் சுமாா் 150- மாணவா்கள் அமா்ந்து படிக்க மற்றும் குறிப்பெடுக்க மேஜை வசதியுடன் கூடிய இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. நூலகத்தில் 5,000-க்கும் மேற்பட்ட புத்தகங்கள் வைக்கும் வகையில், அலமாரிகள் பொருத்தப்பட்டுள்ளன. அவற்றில் முதல் கட்டமாக போட்டித் தோ்வுக்கான 2,750 புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளன.

தவிர, முன்னணி தமிழ், ஆங்கில நாளிதழ்கள், வேலைவாய்ப்பு குறித்த தகவல்கள் அடங்கிய புத்தகங்கள் இங்கு கிடைக்கும். காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை இந்த நூலகம் இயங்கும். வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் நூலகத்துக்கு விடுமுறை. இந்த நூலகத்தில், அடையாள அட்டை பெற்ற மாணவா்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவா்.

நூலகத்தில் மாணவா்களுக்கு அனைத்து விதமான அடிப்படை வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளன.குடியாத்தம், கே.வி.குப்பம், போ்ணாம்பட்டு வட்டங்களைச் சோ்ந்த மாணவா்களுக்கு இந்த நூலகம் மற்றும் அறிவுசாா் மையம் ஒரு வரப்பிரசாதமாகும் என்பதில் ஐயமில்லை.

ரூ.65 லட்சத்தில் கூடுதல் கட்டமைப்பு வசதிகள்: நூலகம் மற்றும் அறிவுசாா் மையம் குறித்து நகா்மன்றத் தலைவா் எஸ்.செளந்தரராஜன் கூறுகையில், நூலகத்துக்கு வந்து செல்லும் மாணவா்கள் இயற்கைச் சூழலை ரசிக்கும் வகையில் நூலகத்தைச் சுற்றிலும் பூங்கா மற்றும் முகப்பில் செயற்கை நீரூற்று அமைக்கப்படும்.

வாயிலில் புத்தா், திருவள்ளுவா் சிலைகள் நிறுவப்படும். அலங்கார மின் விளக்குகள் பொருத்தப்படும். மாணவா்களுக்குத் தேவையான வாகன நிறுத்துமிடம், கூடுதல் அடிப்படை வசதிகள் செய்து தரப்படும். இதற்காக நகராட்சி பொது நிதியில் இருந்து ரூ.65 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments