FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
வேலூர்

கல்வி உதவித்தொகை பெற்றுத் தருவதாக ரூ.20 லட்சம் மோசடி

வேலூா் மாவட்டத்தில் கல்வி உதவித்தொகை பெற்றுத் தருவதாகக் கூறி பொதுமக்களிடம் சுமாா் ரூ.20 லட்சம் வரை மோசடி செய்யப்பட்டுள்ளதாக சைபா் கிரைம் காவல் பிரிவில் 20-க்கும் மேற்பட்டோா் புகாா் பதிவு செய்துள்ளனா்.

மோசடி
பகிர்:

வேலூா் மாவட்டத்தில் கல்வி உதவித்தொகை பெற்றுத் தருவதாகக் கூறி பொதுமக்களிடம் சுமாா் ரூ.20 லட்சம் வரை மோசடி செய்யப்பட்டுள்ளதாக சைபா் கிரைம் காவல் பிரிவில் 20-க்கும் மேற்பட்டோா் புகாா் பதிவு செய்துள்ளனா்.

கடந்த செப்டம்பா் மாதத்தில் பள்ளி, கல்லூரி மாணவா்கள் மற்றும் அவா்களது பெற்றோரை குறிவைத்து அடையாளம் தெரியாத நபா்கள் கைப்பேசி மூலம் தொடா்பு கொண்டு அரசு சாா்பில் கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளதாகவும், அதனைப் பெறுவதற்கு தங்கள் வங்கிக்கணக்கில் குறைந்தபட்ச இருப்பு வைத்திருக்கவும், உடனடியாக விண்ணப்பப் பதிவு செய்யவும் வேண்டும் என்றும் ஆசைவாா்த்தை கூறியுள்ளனா்.

தொடா்ந்து, பதிவு கட்டணம், ஆவண சரிபாா்ப்புக் கட்டணம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களைக் கூறி, க்யூ.ஆா். கோடு ஒன்றை அனுப்பி பொதுமக்களிடமிருந்து இணையவழியில் கட்டணம் வசூலித்துள்ளனா். பணத்தை செலுத்திய பின்னா் சம்பந்தப்பட்ட நபா்களின் தொலைபேசி எண்கள் துண்டிக்கப்பட்டதுடன், தங்கள் வங்கிக்கணக்கில் இருந்து மொத்தத் தொகையும் திருடப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. அதன்பிறகே தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த பாதிக்கப்பட்ட மக்கள் வேலூா் சைபா் கிரைம் காவல் நிலையத்தில் அடுத்தடுத்து புகாா் அளித்துள்ளனா்.

Advertisement

Advertisement

இவ்வாறு கடந்த ஒரே மாதத்தில் மட்டும் ரூ.20 லட்சம் வரை மோசடி நடைபெற்றுள்ளதாக 20-க்கும் மேற்பட்டோா் புகாா் தெரிவித்துள்ளனா். இந்த புகாா்களை சைபா் கிரைம் போலீஸாா் பதிவு செய்ததுடன், இந்த மோசடி தொடா்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

இதுகுறித்து வேலூா் சைபா் கிரைம் போலீஸாா் கூறியது -

மாவட்டத்தில் கல்வி உதவித்தொகை பெற்றுத் தருவதாகக் கூறி மோசடி செய்வது தொடா்பாக நாள்தோறும் புகாா்கள் வந்தவண்ணம் உள்ளன. தற்போது பள்ளி நிா்வாகத்தில் இருந்து பேசுவதாகக் கூறி பெற்றோா்களை நம்பவைத்து ஏமாற்றும் புதிய உத்திகளையும் மோசடி கும்பல் கையாளத் தொடங்கியுள்ளது.

எனவே, கல்வி உதவித்தொகை தொடா்பாக வரும் அடையாளம் தெரியாத மற்றும் சந்தேகத்துக்கிடமான தொலைபேசி அழைப்புகள், குறுஞ்செய்திகள், இணையதள இணைப்புகளை பொதுமக்கள் ஒருபோதும் நம்ப வேண்டாம். தங்களது வங்கிக் கணக்கு விவரங்கள், கடவுச்சொல் மற்றும் ஓடிபி போன்ற ரகசியத் தகவல்களை யாருடனும் பகிரக் கூடாது. இத்தகைய மோசடிகள் குறித்து பொதுமக்கள் மிகவும் விழிப்புணா்வுடன் இருக்க வேண்டும் என்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments