பவானிசாகர் நீர்த்தேக்க பகுதி விளை நிலங்களில் 3 ஆவது நாளாக சூரிய சக்தி மின் வேலி அகற்றம்
சிறுமுகையை அடுத்த பவானிசாகர் அணையின் நீர்த்தேக்கப் பகுதி விளை நிலங்களில் அமைக்கப்பட்ட சூரிய சக்தி மின் வேலியை அகற்ற உயர் நீதிமன்றம்
சிறுமுகையை அடுத்த பவானிசாகர் அணையின் நீர்த்தேக்கப் பகுதி விளை நிலங்களில் அமைக்கப்பட்ட சூரிய சக்தி மின் வேலியை அகற்ற உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து 3 ஆவது நாளாக மின் வேலியை அகற்றும் பணியில் சிறுமுகை வனத் துறையினரும், பொதுப் பணித் துறையினரும் ஈடுபட்டனர்.
சிறுமுகையை அடுத்த பவானிசாகர் நீர்த்தேக்கப் பகுதியில் பருவ மழைக் காலங்களில் அதிக அளவில் ஆற்று நீர் தேங்கி நிற்கும். இந்த நீரை ஆதாரமாக கொண்டு இப்பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் விவசாயிகள் வாழை உள்ளிட்ட பல்வேறு பயிர்களைப் பயிரிட்டு வருகின்றனர். இந்த விளை நிலங்களில் உள்ள பயிர்களை யானை, மான் உள்பட வன விலங்குகளிடமிருந்து காக்கும் பொருட்டு இப்பகுதி விவசாயிகள் தங்கள் விளை நிலங்களை சுற்றி சூரிய சக்தி மின் வேலிகளை அமைத்துப் பாதுகாத்து வருகின்றனர். இந்நிலையில், அணையின் நீர்த்தேக்கப் பகுதிகளை ஆக்கிரமித்து சிலர் விவசாயம் செய்து வருவதாகவும், அதில் வன விலங்குகளின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் சூரிய சக்தி மின் வேலி அமைக்கப்பட்டுள்ளதாகவும், எனவே விவசாய ஆக்கிரமிப்புகளையும், சூரிய சக்தி மின் வேலியையும் உடனடியாக அகற்ற வேண்டும் எனவும் கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. இதையடுத்து, குறிப்பிட்ட பகுதிகளில் அமைக்கப்பட்ட மின் வேலிகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதைத் தொடர்ந்து, கடந்த இரு தினங்களாக சிறுமுகை வனச் சரகத்துக்கு உள்பட்ட நீர்த்தேக்கப் பகுதிகளில் விளை நிலங்களைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ள சூரிய சக்தி மின் வேலிகளை அகற்றும் பணியில் காவல் துறையின் உதவியுடன் வனத் துறையினர், வருவாய்த் துறையினர், பொதுப் பணித் துறையினர் ஈடுபட்டு வந்தனர். அதன் தொடர்ச்சியாக சிறுமுகை, லிங்காபுரம் பகுதியில் நீர்த்தேக்கத்துக்கு உள்பட்ட விவசாய நிலங்களில் அமைக்கப்பட்ட மின் வேலிகளை அகற்றும் பணி 3 ஆவது நாளாக திங்கள்கிழமை நடைபெற்றது.
இதில், சிறுமுகை வனச்சரக அலுவலர் மனோகரன், வனவர் ராதாகிருஷ்ணன் உள்பட வனத் துறையினரும், உதவிச் செயற்பொறியாளர் சுப்பையா தலைமையில் பொதுப்பணித் துறை யினரும் தோட்டங்களைச் சுற்றி அமைக்கப்பட்டிருந்த சூரிய சக்தி மின் வேலிகளை அகற்றினர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.