இட ஒதுக்கீடு அடிப்படையில் மாணவர் சேர்க்கை: தனியார் பள்ளிகளில் அதிகாரிகள் ஆய்வு
தனியார் பள்ளிகளில் பிளஸ் 1 மாணவர் சேர்க்கையின்போது இட ஒதுக்கீடு முறை பின்பற்றப்படுகிறதா என்பதை கோவையில் அதிகாரிகள் குழுவினர் வியாழக்கிழமை நேரில் ஆய்வு நடத்தினர்.
தனியார் பள்ளிகளில் பிளஸ் 1 மாணவர் சேர்க்கையின்போது இட ஒதுக்கீடு முறை பின்பற்றப்படுகிறதா என்பதை கோவையில் அதிகாரிகள் குழுவினர் வியாழக்கிழமை நேரில் ஆய்வு நடத்தினர்.
தமிழகத்தில் பிளஸ் 1 மாணவர் சேர்க்கை தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், தனியார் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் நன்கொடை, அதிக மதிப்பெண் என்ற அடிப்படையில் மட்டுமே மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.
ஆனால், மேல்நிலைக் கல்வி முதலாமாண்டு மாணவர் சேர்க்கையிலும் இட ஒதுக்கீட்டு முறையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று தமிழக அரசின் அரசாணை எண் 587 தெரிவிக்கிறது. இந்நிலையில், அரசின் இந்த உத்தரவை தனியார் பள்ளிகள் கடைப்பிடிக்கின்றனரா என்பது தொடர்பான நேரடி கள ஆய்வில் அதிகாரிகள் ஈடுபட்டனர்.
மாவட்ட ஆதிதிராவிடர் நலத் துறை அலுவலர் செந்திவேல் தலைமையில் நடைபெற்ற இந்த ஆய்வில், முதன்மைக் கல்வி அலுவலர் பெ.அய்யண்ணன், மாவட்டக் கல்வி அலுவலர் கீதா, மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர் கீதா, மாநில ஆதிதிராவிடர் நலத் துறை கண்காணிப்புக் குழு உறுப்பினர் எஸ்.செல்வகுமார், மாவட்டக் குழு உறுப்பினர் நந்தகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த குழுவினர் காந்திபுரம், புலியகுளம் பகுதிகளில் உள்ள தனியார் பள்ளிகளில் ஆய்வு நடத்தினர். இது குறித்து எஸ்.செல்வகுமார் கூறும்போது, மாவட்டத்தில் உள்ள அனைத்து மேல்நிலைப் பள்ளிகளிலும் பிளஸ் 1 மாணவர் சேர்க்கையின்போது இட ஒதுக்கீடு முறையை கட்டாயமாக பின்பற்ற வேண்டும். அதன் அடிப்படையில் தனியார் பள்ளிகள் அரசாணையை பின்பற்றுகின்றனரா என்பதை கண்டறிய இந்த ஆய்வு நடத்தப்படுகிறது.
சில பள்ளிகளில் ஒரு குறிப்பிட்ட பாடப் பிரிவையே அதிகமானவர்கள் கேட்கும் நிலையும், சில பாடப் பிரிவுகளுக்கு மாணவர்களே வராத நிலையும் உள்ளது. இருப்பினும், தகுதியுள்ள மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு அடிப்படையில் இடம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம். அதன்படி வியாழக்கிழமை மட்டும் 15 மாணவ-மாணவிகளுக்கு இடம் பெற்றுக் கொடுக்கப்பட்டது.
அனைத்து வகை பள்ளிகளிலும் எஸ்.சி., எஸ்.டி.யினருக்கு 18 சதவீதமும், எம்.பி.சி.க்கு 20, பி.சி.க்கு 31 சதவீதம் என மொத்தம் 69 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். இந்த நடைமுறை 2013-14 ஆம் கல்வியாண்டு முதல் அமலில் இருந்து வந்தாலும், பல தனியார் பள்ளிகள் இட ஒதுக்கீடு முறையை அமல்படுத்துவதில்லை.
காந்திபுரம் பகுதியில் முதலில் ஆய்வு நடத்தப்பட்ட பள்ளியில் எஸ்.சி., எஸ்.டி. பிரிவில் 7 விண்ணப்பங்கள் பெறப்பட்டிருந்தாலும் 3 மாணவர்கள் மட்டுமே சேர்க்கப்பட்டனர். மற்றவர்கள் ஏன் சேர்க்கப்படவில்லை என்ற கேள்விக்கு பள்ளி நிர்வாகிகளால் பதிலளிக்க முடியவில்லை. அதேநேரம் பள்ளிக்கு வெளியே காத்திருந்த ஒரு எஸ்.சி. பிரிவு மாணவரிடம் கேட்டபோது, மதிப்பெண் குறைந்துவிட்டதாகக் கூறி சேர்க்கை மறுக்கப்படுவதாகக் கூறினார். இதையடுத்து அந்த மாணவருக்கு இடம் பெற்றுக் கொடுக்கப்பட்டது.
அதேபோல், புலியகுளம் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் இட ஒதுக்கீடு முறையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படாததும், எந்தவித ஆவணங்களும் பராமரிக்கப்படாததும் தெரிய வந்துள்ளது. இதையடுத்து அந்த பள்ளியில் மீண்டும் வெள்ளிக்கிழமை ஆய்வு நடத்த இருக்கிறோம்.
இட ஒதுக்கீடு முறையில் பிளஸ் 1 மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என்பதுடன் கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின் கீழ் நலிவடைந்த பிரிவினருக்கான 25 சதவீத இட ஒதுக்கீடு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறதா என்பதையும் இந்த குழு தொடர்ந்து ஆய்வு செய்யும் என்றார் அவர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.