FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

பஞ்சாலைத் தொழிலாளர் வேலைநிறுத்தம்: சென்னையில் நாளை பேச்சுவார்த்தை

பஞ்சாலைத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வருவது தொடர்பாக மத்திய தொழிலாளர் நலத் துறை

30 ஜனவரி 2024, 10:11 pm IST
பகிர்:

பஞ்சாலைத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வருவது தொடர்பாக மத்திய தொழிலாளர் நலத் துறை அதிகாரிகளுடன் பஞ்சாலைத் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் சென்னையில் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 7) பேச்சுவார்த்தையில் ஈடுபடுகின்றனர்.
தமிழ்நாட்டில் தேசிய பஞ்சாலைக் கழகத்தின் (என்.டி.சி.) கீழ் இயங்கி வரும் 7 ஆலைகளின் தொழிலாளர்களுக்கான ஊதிய உயர்வு ஒப்பந்தம் கடந்த மே 31ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. இந்நிலையில், ஊதியத்தை 30 சதவீதம் உயர்த்தி புதிய ஊதிய உயர்வு ஒப்பந்தம் மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை தொழிற்சங்கங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.
 அதேபோல், நிரந்தரத் தொழிலாளர்கள் ஏற்கெனவே பெற்று வரும் அடிப்படைச் சம்பளத்துடன் கூடுதலாக ஆயிரம் ரூபாய் கணக்கிட்டு வழங்க வேண்டும். ஆண்டு ஊதிய உயர்வாக புதிய அடிப்படைச் சம்பளத்தில் 10 சதவீதம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மாதம் 20ஆம் தேதி முதல் தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
 பஞ்சாலைத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டப் பிரச்னைக்குத் தீர்வு காண்பதற்காக தேசிய பஞ்சாலைக் கழக அதிகாரிகள், தொழிலாளர் நலத் துறை அதிகாரிகளுடன் கோவை, மதுரையில் இரண்டு கட்டங்களாக நடத்திய பேச்சுவார்த்தைகளிலும் முடிவு எட்டப்படவில்லை.
 ஆலைத் தொழிலாளர்களின் போராட்டம் தொடர்ந்து 16ஆவது நாளை எட்டியுள்ள நிலையில், மீண்டும் பேச்சுவார்த்தைக்கு வரும்படி தொழிற்சங்கத்தினருக்கு மண்டல தொழிலாளர் நலத் துறை அழைப்பு விடுத்துள்ளது. இந்தப் பேச்சுவார்த்தை சென்னை, நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவனில் உள்ள மத்திய தொழிலாளர் நலத் துறை அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 7) நடைபெறுகிறது. காலை 11 மணிக்கும், பிற்பகல் 2.30 மணிக்கும் 9 தொழிற்சங்கங்களின் நிர்வாகிகள் இரு பிரிவுகளாகச் சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபடுகின்றனர். 
இதற்கிடையே, இந்த பிரச்னைக்குத் தீர்வு காண உதவும்படி மத்திய தென்னை நார் வாரியத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனை வியாழக்கிழமை சந்தித்து மனு அளிக்க இருப்பதாக 5 தொழிற்சங்கங்களின் ஒருங்கிணைப்பாளரும் ஹெச்.எம்.எஸ். சங்கத் தலைவருமான ராஜாமணி தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments