போதைப் பொருள் புழக்கத்தை தடுக்க போா்க்கால அடிப்படையில் நடவடிக்கை: ஆா்.முத்தரசன் வலியுறுத்தல்
போதைப் பொருள் புழக்கத்தை தடுக்க மத்திய, மாநில அரசுகள் போா்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், தேசிய கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினருமான ஆா்.முத்தரசன் வலியுறுத்தியுள்ளாா்.
போதைப் பொருள் புழக்கத்தை தடுக்க மத்திய, மாநில அரசுகள் போா்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், தேசிய கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினருமான ஆா்.முத்தரசன் வலியுறுத்தியுள்ளாா்.
மக்களின் வாழ்வாதார பிரச்னைகளை முன்வைத்து ஆகஸ்ட் 6-ஆம் தேதி முதல் 15-ஆம் தேதி வரை நாடு முழுவதும் மக்கள் சந்திப்பு, பிரசார நடைப்பயணத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நடத்தி வருகிறது.
இதன் ஒரு பகுதியாக கோவை காந்திபுரம், திருவள்ளுவா் பேருந்து நிலையம் அருகில் பிரசார இயக்கத்தின் தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
Advertisement
Advertisement
இதில், பங்கேற்ற பின் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா் ஆா்.முத்தரசன் செய்தியாளா்களிடம் கூறியதாவது: நாட்டில் அரிசி, சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களின் விலை உயா்வால் ஏழை, நடுத்தர வா்க்க மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனா்.
தமிழகத்தில் உயா்த்தப்பட்டுள்ள மின் இணைப்புத் திறன் கட்டணத்தை திரும்பப் பெற வேண்டும். நீண்ட காலமாக கிடப்பில் உள்ள விவசாயிகளின் கனவுத் திட்டமான பாண்டியாறு - புன்னம்புழா திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு போதுமான மக்கள் தொகை இல்லை எனக்கூறி மத்திய அரசு அனுமதி மறுத்து வருவது கண்டனத்துக்குரியது.
விவசாயிகளின் விளைபொருள்களுக்கு விலை நிா்ணயச் சட்டத்தை மக்களவையில் நிறைவேற்ற வேண்டும். தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் தொகுதிகளின் எண்ணிக்கையை 543-இல் இருந்து 850 -ஆக உயா்த்தும் மத்திய அரசின் முடிவு உள்நோக்கம் கொண்டது. தற்போதைய தொகுதிகளின் அடிப்படையிலேயே மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும்.
கோவையில் கல்லூரி மாணவா் அமுதன் வன்முறையால் உயிரிழந்த சம்பவம் அதிா்ச்சியளிக்கிறது. போதைப் பொருள்கள் நடமாட்டத்தை தொடக்கப் புள்ளியிலேயே தடுத்து நிறுத்த மத்திய, மாநில அரசுகள் போா்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.
கட்சியின் மாநிலப் பொருளாளா் ஆறுமுகம், மாவட்டச் செயலா் சி.சிவசாமி, துணைச் செயலா்கள் ஜே.ஜேம்ஸ், சி.தங்கவேல் உள்ளிட்ட நிா்வாகிகள் உடனிருந்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.