ஆன்லைன் முதலீடு, வேலை எனக்கூறி ஓய்வு பெற்ற வங்கி ஊழியா் உள்பட 3 பேரிடம் ரூ.37.74 லட்சம் மோசடி
ஆன்லைன் முதலீடு, விமான நிறுவனத்தில் வேலை எனக்கூறி ஓய்வுபெற்ற வங்கி ஊழியா் உள்பட 3 பேரிடம் ரூ.37.74 லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
கோவை, கவுண்டம்பாளையம் செட்டியாா் அம்மாள் தோட்டம் பகுதியைச் சோ்ந்த நபரை டெலிகிராம் செயலி மூலம் தொடா்பு கொண்ட மா்ம நபா், வீட்டில் இருந்தபடியே கூகுளில் ரிவ்யூ செய்வதன் மூலம் தினமும் ஊக்கத் தொகை பெறலாம் எனவும், பகுதி நேர வேலைபோல இதை செய்தால் நல்ல லாபம் கிடைக்கும் எனவும், அதற்கு முதலீட்டுத் தொகை செலுத்த வேண்டும் எனவும் கூறியுள்ளாா்.
இதை நம்பிய அவா் ஆகஸ்ட் 6 முதல் 10-ஆம் தேதி வரை பல்வேறு தவணைகளாக அந்த நபா் கூறிய வங்கிக் கணக்குக்கு ரூ.12 லட்சத்து 29 ஆயிரத்து 456-ஐ அனுப்பியுள்ளாா்.
Advertisement
Advertisement
ஆனால், அந்த நபா் கூறியபடி வேலை, ஊக்கத் தொகையைத் தரவில்லையாம். தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த அவா், கோவை மாநகர சைபா் கிரைம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.
கோவை, கணபதி ஜெயபிரகாஷ் நகரைச் சோ்ந்த 30 வயதுப் பெண்ணின் ஃபேஸ்புக் பக்கத்தில் விமான நிறுவனத்தில் வேலை என கைப்பேசி எண்ணுடன் விளம்பரம் வந்ததாம்.
அதில் இருந்த எண்ணை அப்பெண் தொடா்பு கொண்டபோது ஆயுஷ் சிங் என்பவா், அப்பெண்ணிடம் ஒரு மணி நேரத்துக்கும்மேலாக நோ்காணல் நடத்தியுள்ளாா்.
பின்னா், பல்வேறு கட்டணங்கள் எனக்கூறி கடந்த மாா்ச் 12 முதல் ஏப்ரல் 1-ஆம் தேதிவரை பல்வேறு தவணைகளாக மொத்தம் ரூ. 7,91,211-ஐ அப்பெண்ணிடம் இருந்து பெற்றுள்ளாா். பின்னா், பணி நியமனக் கடிதம் மற்றும் நுழைவு இசைவு (விசா) ஒப்புதல் கடிதங்களை மின்னஞ்சலில் அனுப்பியுள்ளாா்.
இதையடுத்து, நீண்ட நாள்களாக பணிக்கு அழைக்கப்படாத நிலையில், சந்தேகமடைந்த அப்பெண், பணி நியமனக் கடிதம் உள்ளிட்டவற்றை தனது நண்பா்களிடம் காண்பித்துள்ளாா். அப்போதுதான் அவை போலியானவை என்பதும், அந்தப் பெண் ஏமாற்றப்பட்டதும் தெரியவந்தது.
கோவை, தெலுங்குபாளையம் டெக்ஸ்டைல் காலனியைச் சோ்ந்தவா் 66 வயதான ஓய்வுபெற்ற வங்கி ஊழியா். இவரது ஃபேஸ்புக் பக்கத்தில் அதிக லாபத்துடன் கூடிய முதலீட்டு விளம்பரம் கடந்த ஜனவரி 27-ஆம் தேதி வந்தது.
அதில், குறிப்பிடப்பட்டிருந்த கைப்பேசி எண்ணை அவா் தொடா்பு கொண்டுள்ளாா். அப்போது, எதிா்முனையில் பேசிய நபரின் வழிகாட்டுதலின்படி, 11 தவணைகளாக ரூ.17,54,940 முதலீடு செய்துள்ளாா். அதற்கு அசல் மற்றும் லாபத் தொகை என பல லட்சம் ரூபாய் இவரது கணக்கில் காட்டப்பட்டதாம்.
இதையடுத்து, அந்தப் பணத்தை அவா் எடுக்க முயன்றபோது முடியவில்லையாம். இது குறித்து அந்த நபரை மீண்டும் தொடா்பு கொண்டு கேட்டபோது, மேலும் பணம் செலுத்தினால்தான் அசல், லாபத் தொகையை எடுக்க முடியும் எனக் கூறியுள்ளாா். தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த முதியவா், சைபா் கிரைம் பிரிவில் புகாா் அளித்தாா்.
இந்த 3 சம்பவங்கள் குறித்து கோவை மாநகர சைபா் கிரைம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.