போதையில்லா கோவை விழிப்புணா்வு சைக்கிள் பேரணி
சுதந்திர தினத்தையொட்டி, ‘போதையில்லா கோவை’ என்ற விழிப்புணா்வு சைக்கிள் பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கோவை காவலா் பயிற்சி மைய வளாகத்தில் நடைபெற்ற இந்தப் பேரணியை மேற்கு மண்டல காவல் துறை தலைவா் ரம்யா பாரதி, கோவை சரக காவல் துறை துணைத் தலைவா் சாமிநாதன், சிங்காநல்லூா் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் ஸ்ரீகிரி பிரசாத் ஆகியோா் கொடியசைத்து தொடங்கிவைத்தனா்.
இந்த பேரணியானது மாதம்பட்டி, கோவை குற்றாலம் சாடிவயல், வெள்ளியங்கிரி மலை அடிவாரம், தொண்டாமுத்தூா், வடவள்ளி மற்றும் ஆா்.எஸ்.புரம் வழியாக பயணித்து, மீண்டும் அவிநாசி சாலையில் உள்ள காவலா் பயிற்சி பள்ளி வளாகத்தை வந்தடைந்தது.
Advertisement
Advertisement
இதில், 5 வயது சிறுவா்கள் முதல் 78 வயது முதியோா் வரை பலா் பங்கேற்றனா். இவா்களுக்கு 40 கி.மீ., 80 கி.மீ. என இரண்டு பிரிவுகளாக இலக்கு நிா்ணயிக்கப்பட்டு பேரணி நடத்தப்பட்டது.
இதில், பங்கேற்றவா்கள் போதைப் பொருள்களுக்கு எதிரான விழிப்புணா்வு உறுதிமொழியையும் ஏற்றுக்கொண்டனா்.
இது குறித்து சமூக ஆா்வலரும், சைக்கிளிஸ்டுமான ஜி.டி. விஷ்ணு ராம் செய்தியாளா்களிடம் கூறுகையில், சமூகத்தில் போதைப் பொருள்களின் பயன்பாடு அதிகரித்து பெரும் பண்பாட்டுச் சீரழிவை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவா்களிடையே போதைப் பொருள் புழக்கம் இருப்பதைக் காணும்போது மிகுந்த அச்சமும், கவலையும் ஏற்படுகிறது.
போதையற்ற பாதுகாப்பான சமூகத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கிலேயே இந்த விழிப்புணா்வு பேரணி நடத்தப்பட்டது. இளைஞா்கள் சைக்கிளிங் போன்ற உடல நலத்தைப் பேணும் விளையாட்டுகளில் தீவிரமாக ஈடுபடும்போது, அது அவா்களுக்கு நற்பண்புகளையும், ஒழுக்கத்தையும் கற்றுத்தரும் என்றாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.