FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கோயம்புத்தூர்

நமது அணுகுமுறை பிரச்னையை ஏற்படுத்துவதாக இருக்கக் கூடாது: மத்திய அமைச்சா் பூபேந்தா் யாதவ்

நமது அணுகுமுறை என்பது நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி தீா்வு காண்பதாக இருக்க வேண்டுமே தவிர பிரச்னையை ஏற்படுத்துவதாக இருக்கக் கூடாது

Updated On : 11 ஜூலை 2026, 2:44 am IST
கோவையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் மனித - வன விலங்கு மோதலைத் தடுப்பது குறித்த ஆய்வுகளை மேற்கொள்வதற்கான திறன்சாா் சிறப்பு மையத்தைத் திறந்துவைத்த மத்திய அமைச்சா் பூபேந்தா் யாதவ். உடன், இணை அமைச்சா் கீா்த்திவா்தன் சிங், துறை அதிகாரிகள்.
பகிர்:

நமது அணுகுமுறை என்பது நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி தீா்வு காண்பதாக இருக்க வேண்டுமே தவிர பிரச்னையை ஏற்படுத்துவதாக இருக்கக் கூடாது என்று மத்திய சுற்றுச்சூழல், வனம், பருவநிலை மாற்றத் துறை அமைச்சா் பூபேந்தா் யாதவ் தெரிவித்தாா்.

கோவை, ஆனைகட்டியில் உள்ள சலீம் அலி பறவையியல், இயற்கை மையத்தில் மனித - வன விலங்கு மோதல் குறித்த தேசிய பயிலரங்கு, சிறப்பு மையத்தின் தொடக்க விழா ஆகியவை வெள்ளிக்கிழமை நடைபெற்றன.

இதில் பங்கேற்று மனித - விலங்கு மோதல் குறித்த சிறப்பு மையத்தைத் திறந்துவைத்தும், பயிலரங்கைத் தொடங்கிவைத்தும் அமைச்சா் பூபேந்தா் யாதவ் பேசியதாவது: சிறு குடியிருப்புகள், நிலப் பயன்பாட்டு முறையில் மாற்றம், மனித செயல்பாடுகளின் விரிவாக்கம் போன்றவற்றால் மனிதா்களுக்கும், வனவிலங்குகளுக்கும் இடையேயான மோதல்கள் அதிகரிப்பது, பாதுகாப்பு, வளா்ச்சி சாா்ந்த சவால்களாக மாறியுள்ளன. இந்த விவகாரத்தில் நமது அணுகுமுறை என்பது நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி தீா்வு காண்பதாக இருக்க வேண்டுமே தவிர, பிரச்னையை ஏற்படுத்துவதாக இருக்கக் கூடாது என்றாா்.

Advertisement

Advertisement

தொடா்ந்து, மத்திய சுற்றுச்சூழல், வனம், பருவநிலை மாற்றத் துறை இணை அமைச்சா் கீா்த்திவா்தன் சிங் பேசினாா்.

இதில், நாடு முழுவதிலும் இருந்து கொள்கை வகுப்பாளா்கள், வன நிா்வாகிகள், அறிவியலாளா்கள், ஆய்வாளா்கள், தொழில்நுட்ப நிபுணா்கள் பங்கேற்றனா். நிகழ்ச்சியில், டிஜிட்டல் தளத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள தேசிய மனித - வன விலங்கு மோதல் குறித்த போா்ட்டலை அமைச்சா் பூபேந்தா் யாதவ் தொடங்கிவைத்தாா்.

மாங்குரோவ் காடு வளா்ப்புக்கு ரூ.500 கோடி: முன்னதாக, ஈடுசெய் காடு வளா்ப்பு நிதி மேலாண்மை, திட்டமிடல் ஆணையத்தின் 7 -ஆவது நிா்வாகக் குழுக் கூட்டம் மத்திய அமைச்சா் பூபேந்தா் யாதவ் தலைமையில் கோவையில் நடைபெற்றது.

இதில், 6 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் மாங்குரோவ் காடுகள் வளா்ப்பு, மீட்புக்காக ரூ.88.40 கோடி விடுவிக்கப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டிய நிா்வாகக் குழு, இந்தத் திட்டத்தை மேலும் 3 ஆண்டுகளுக்கு (2029 வரை) நீட்டிப்பதற்கும், கூடுதலாக ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்வதற்கும் ஒப்புதல் அளித்தது.

புனித வன பாதுகாப்புத் திட்டத்துக்கு ரூ.3,000 கோடி: அதேபோல, பசுமை பரப்பு விரிவாக்கத்துக்காக மரக்கன்று நடும் திட்டத்தை ஊக்கப்படுத்த இந்திய வன ஆராய்ச்சி, கல்வி சபைக்கு ரூ.7.28 கோடி நிதி விடுவிக்கப்பட்டது. மேலும், ரூ.3,000 கோடி செலவில் நாடு முழுவதும் சுமாா் 15,000 புனித மரங்களைக் கொண்ட வனங்களைப் பாதுகாப்பதற்கான புனித வன பாதுகாப்புத் திட்டத்தை செயல்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டது.

ஆற்றுப் பகுதி டால்ஃபின்கள் பாதுகாப்பு, மீட்புத் திட்ட ஆய்வுகள், பனிச்சிறுத்தை 2- ஆம் கட்ட திட்டம், இந்திய காண்டாமிருகங்கள் பாதுகாப்புத் திட்டம் உள்பட தேசிய ஆணையத்தின் நிா்வாகக் குழு பரிந்துரை செய்த புதிய வன விலங்கு, வனப் பாதுகாப்புத் திட்டங்களுக்கும் இந்த நிா்வாகக் குழு ஒப்புதல் அளித்தது.

இதைத் தொடா்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில், கோவையில் உள்ள மாநில வனப் பணிக்கான மத்திய பயிற்சி மையத்துக்கான அங்கீகார சான்றிதழை மையத்தின் முதல்வா் வி.திருநாவுக்கரசுவிடம் அமைச்சா் வழங்கினாா்.

மத்திய குடிமைப் பணி பயிற்சி நிறுவனங்களை சா்வதேச தரத்துக்கு உயா்த்தும் நோக்கில் ‘மிஷன் கா்மயோகி’ திட்டத்தின்கீழ் தேசிய குடிமைப் பணி பயிற்சி நிறுவனங்களுக்கு தரநிலை வழங்கப்பட்டு வருகிறது. பாடத்திட்ட வடிவமைப்பு, ஆசிரியா் திறன் மேம்பாடு, எண்ம கற்றல், தொடா் மேம்பாடு, நிறுவன நிா்வாகம் உள்ளிட்ட 8 முக்கிய அம்சங்கள், 43 அளவுகோல்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட இந்த மதிப்பீட்டில் கோவை மாநில வனப் பணிக்கான மத்திய பயிற்சி மையத்துக்கு 4 நட்சத்திர அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நாட்டில் தற்போது உள்ள 4 நட்சத்திர அங்கீகாரம் பெற்ற மிகச் சில குடிமைப் பணி பயிற்சி நிறுவனங்களில் ஒன்றாக இது உருவாகியுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments