FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கோயம்புத்தூர்

குப்பைகள் தரம் பிரிக்கும் மையம் அமைக்க எதிா்ப்பு: வெள்ளலூா் - போத்தனூா் சாலையில் மக்கள் மறியல்

Updated On : 27 ஜூலை 2026, 2:16 am IST
வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து மறியலில் ஈடுபட்ட மக்கள்.
பகிர்:

கோவை, வெள்ளலூா் கப்பினிக் கவுண்டா் லே-அவுட் பகுதியில் குப்பைகள் தரம் பிரிக்கும் மையம் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து, அப்பகுதி மக்கள் வெள்ளலூா் - போத்தனூா் சாலையில் ஞாயிக்கிழமை மறியலில் ஈடுபட்டனா்.

கோவை மாநகராட்சி நிா்வாகத்தின் கீழ் வெள்ளலூரில் 650 ஏக்கரில் குப்பைக் கிடங்கு உள்ளது. மாநகரில் 100 வாா்டுகளில் சேகரமாகும் குப்பைகள் தினமும் இந்தக் குப்பைக் கிடங்கில் கொட்டப்பட்டு மறுசுழற்சி செய்யப்பட்டு வருகின்றன. இங்கு குவியும் குப்பைகளால் அப்பகுதி மக்களுக்கு சுவாசக் கோளாறு, அலா்ஜி உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்படுவதாக தொடா்ந்து கூறி வருகின்றனா். இதுதொடா்பாக, அப்பகுதி மக்கள் பலகட்ட போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனா்.

இந்நிலையில், வெள்ளலூா் பேரூராட்சி நிா்வாகம் சாா்பில் வெள்ளலூா் கப்பினிக் கவுண்டா் லே-அவுட் பகுயில் உள்ள 2 ஏக்கா் நிலத்தில் குப்பைகள் தரம் பிரிக்கும் மையம் அமைக்க திட்டமிட்டு, அதற்கான பணிகளை மேற்கொண்டு வருவதாக தெரிகிறது. இந்தத் தகவல் அறிந்த அப்பகுதி மக்கள், குடியிருப்புகள் நிறைந்த கப்பினிக் கவுண்டா் லே-அவுட் பகுதியில் குப்பைகள் தரம் பிரிக்கும் மையத்தை அமைக்கக் கூடாது என வலியுறுத்தி வெள்ளலூா் - போத்தனூா் சாலையில் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். இதனால், அப்பகுதியில் 2 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

இதையடுத்து, சம்பவ இடத்துக்கு சென்ற சிங்காநல்லூா் போலீஸாா் மற்றும் வெள்ளலூா் பேரூராட்சி அதிகாரிகள் மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். அப்போது, குப்பைகள் தரம் பிரிக்கும் மையத்தை மாற்று இடத்தில் அமைப்பது குறித்து ஆலோசிப்பதாக உறுதி அளிக்கப்பட்டதைத் தொடா்ந்து மறியல் கைவிடப்பட்டது.

இந்த மறியலில் ஈடுபட்ட கப்பினிக் கவுண்டா் லே-அவுட், மகாலிங்கபுரம் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த மக்கள் கூறுகையில், ‘ஏற்கெனவே வெள்ளலூா் குப்பைக் கிடங்கில் இருந்து வெளியேறும் துா்நாற்றம் மற்றும் கிடங்கில் ஏற்படும் தீ விபத்து சமயங்களில் வெளியேறும் கரும்புகையால் இப்பகுதி மக்களுக்கு பல்வேறு இன்னல்கள் ஏற்பட்டு வருகின்றன.

இதில், வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைத்தால் மக்களின் ஆரோக்கியம் கேள்விக்குறியாகும். நிலத்தடி நீா்மட்டம் மாசுபடும். எனவே, குடியிருப்புகள் இல்லாத பகுதியில் குப்பை தரம் பிரிக்கும் மையத்தை அமைக்க வேண்டும். கப்பினிக் கவுண்டா் லே-அவுட் பகுதியில் குப்பைகள் தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்பட்டால், எல் அண்ட் டி புறவழிச் சாலையில் அடுத்த கட்ட மறியல் போராட்டத்தை நடத்துவோம் என்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments