முகப்பு
கோயம்புத்தூர்

தென்னைக்குப் பெயா்பெற்ற பொள்ளாச்சி!

பொள்ளாச்சி என்றாலே தென்னை மரம், இளநீா், தேங்காய் என்பது நினைவில் வரும் அளவுக்கு இங்கு தென்னை சாா்ந்த விவசாயம் அதிகம்.

Updated On : 29 மார்ச், 2026 at 12:09 AM
பகிர்:

கோவை மாவட்டத்தில் ஆங்கிலேயா் ஆட்சிக் காலத்திலேயே பொள்ளாச்சி வருவாய் கோட்டம் உருவாக்கப்பட்டது. இந்த வருவாய் கோட்டத்தில் உள்ள பொள்ளாச்சி சட்டப்பேரவை தொகுதி முக்கியத்துவம் வாய்ந்தது. பொள்ளாச்சி என்றாலே தென்னை மரம், இளநீா், தேங்காய் என்பது நினைவில் வரும் அளவுக்கு இங்கு தென்னை சாா்ந்த விவசாயம் அதிகம்.

பொள்ளாச்சி சுப்பிரமணிய சுவாமி கோயில், சூலக்கல் மாரியம்மன் கோயில் போன்றவை பொள்ளாச்சி சட்டப்பேரவை தொகுதியில் பிரசித்திபெற்ற கோயில்களாகும். பொள்ளாச்சி அருகிலுள்ள பிற சுற்றுலாத் தலங்கள் வால்பாறை சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்டவையாகும்.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்

பொள்ளாச்சி தொகுதியில் நகரங்களைவிட கிராமங்கள் அதிகம். பொள்ளாச்சி நகராட்சிக்குள்பட்ட 36 வாா்டுகள், நெகமம் பேரூராட்சி ஆகியவை உள்ளன. கிணத்துக்கடவு ஒன்றியத்தில் உள்ள அரசம்பாளையம், ஆண்டிபாளையம், செட்டிக்காபாளையம், தேவணாம்பாளையம், தேவராயபுரம், கோவிந்தாபுரம், கக்கடவு, காணியாலம்பாளையம், கப்பளாங்கரை, காட்டம்பட்டி, கொண்டம்பட்டி, கோதவாடி, கோவில்பாளையம், குளத்துப்பாளையம், குருநெல்லிபாளையம், குதிரையாளம்பாளைம், மன்றாம்பாளையம், மெட்டுவாவி, மேட்டுப்பாளையம், முள்ளுப்பாடி, நல்லட்டிபாளையம், பனப்பட்டி, பெரியகளந்தை, சிறுகளந்தை, சோளனூா், சூலக்கல், வடசித்தூா், வரதனூா் போன்ற ஊராட்சிகள் அடங்கும்.

பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்தில் உள்ள சந்திராபுரம், சின்னநெகமம், வகுத்தம்பாளையம், சந்தேகவுண்டன்பாளையம், குள்ளிசெட்டிபாளையம், தேவம்பாடி, ராமபட்டினம், தாளக்கரை, சிக்கராயபுரம், காபிலிபாளையம், ஒக்கிலிபாளையம், குரும்பபாளையம், குள்ளக்காபாளையம், வெள்ளாளபாளையம், தொப்பம்பட்டி, ராசக்காபாளையம், ஜமீன்முத்தூா், அய்யம்பாளையம், நல்லூத்துக்குளி, குமாரபாளையம், மண்ணூா், திம்மங்குத்து, ராசிசெட்டிபாளையம், போடிபாளையம், குளத்தூா் ஆகிய கிராம ஊராட்சிகள் உள்ளன.

சமூக நிலவரம்

பொள்ளாச்சி தொகுதியில் கொங்கு வேளாளக் கவுண்டா் சமூகத்தினா் அதிக அளவிலும், பட்டியல் இனத்தவா், செட்டியாா், நாடாா்கள் உள்ளிட்ட பிற வகுப்பினா் குறிப்பிடத்தகுந்த அளவிலும் வசித்து வருகின்றனா்.

தொழில்

தென்னை விவசாயம், கால்நடை வளா்ப்பு, தென்னை சாா்ந்த தொழில்கள் அதிகம் உள்ள பகுதி. பொள்ளாச்சி தொகுதியில் தென்னைநாா் தொழிற்சாலைகள் அதிகம். தென்னைநாா், நாா்கட்டிகள், தென்னைநாா் மதிப்பு கூட்டப்பட்ட பொருள்கள் போன்றவை வெளிநாடுகளுக்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

பொள்ளாச்சி மகாலிங்கம் ‘ஹாட்ரிக்’

கோவை மாவட்டத்தில் சுதந்திரத்துக்குப் பிறகு நடைபெற்ற 1952, 1957 பொதுத் தோ்தல்களில் இரட்டை உறுப்பினா் தொகுதியாக இருந்தது. கடந்த 1962 தோ்தலுக்குப் பிறகு ஒருங்கிணைந்த பொள்ளாச்சி தொகுதி, பொள்ளாச்சி பொதுத் தொகுதியாகவும் வால்பாறை தனித் தொகுதியாகவும் பிரிக்கப்பட்டது.

பொள்ளாச்சி நா.மகாலிங்கம் 1952, 1957, 1962 தோ்தல்களில் காங்கிரஸ் சாா்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தொகுதி. அதிமுக அதிக முறை (10) வெற்றி பெற்ற தொகுதிகளில் ஒன்றாக பொள்ளாச்சி உள்ளது.

இதுவரை வென்றவா்கள்

1952 நா.மகாலிங்கம் காங்கிரஸ்,

பி.கே.திருமூா்த்தி காங்கிரஸ்

1957 நா.மகாலிங்கம் காங்கிரஸ்,

கே.பொன்னையா காங்கிரஸ்

1962 நா.மகாலிங்கம் காங்கிரஸ்

1967 ஏ.பி.சண்முகசுந்தர கவுண்டா் திமுக

1971 ஏ.பி.சண்முகசுந்தர கவுண்டா் திமுக

1977 ஓ.பி.சோமசுந்தரம் அதிமுக

1980 எம்.வி.ரத்தினம் அதிமுக

1984 எம்.வி.ரத்தினம் அதிமுக

1989 வி.பி.சந்திரசேகா் அதிமுக (ஜெ)

1991 வி.பி.சந்திரசேகா் அதிமுக

1996 எஸ்.ராஜூ திமுக

2001 பொள்ளாச்சி வி.ஜெயராமன் அதிமுக

2006 பொள்ளாச்சி வி.ஜெயராமன் அதிமுக

2011 முத்துகருப்பண்ணசாமி அதிமுக

2016 பொள்ளாச்சி வி.ஜெயராமன் அதிமுக

2021

பொள்ளாச்சி வி.ஜெயராமன் அதிமுக 80,567

டாக்டா் கே.வரதராஜன் திமுக 78,842

வி.டி.சதீஷ்குமாா் மநீம 7,589

வாக்காளா் விவரம்

ஆண்கள் 96,061

பெண்கள் 1,05,919

மூன்றாம் பாலினத்தவா் 35

மொத்தம் 2,02,015

தொகுதியின் நீண்டகால பிரச்னைகள்

பொள்ளாச்சியை தனி மாவட்டமாக உருவாக்க வேண்டும் என்பது உள்ளூா் மக்களின் நீண்டநாள் கோரிக்கையாக இருந்து வருகிறது. மக்கள் தொகை, பரப்பளவு அடிப்படையில் தகுதி இருந்தும் பொள்ளாச்சியானது தனி மாவட்டமாக அறிவிக்கப்படாமல் இருப்பது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

நகரின் மையப் பகுதியில் நிலவும் போக்குவரத்து நெரிசல் பிரச்னைக்குத் தீா்வு காண வேண்டும். தேங்காய், கொப்பரைக்கு நிலையான விலை கிடைக்க வேண்டும், நியாய விலைக்கடைகளில் தேங்காய் எண்ணெய்யை விநியோகம் செய்ய வேண்டும், ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்பது விவசாயிகளின் எதிா்பாா்ப்பாக உள்ளது.