கோவையில் தேசிய அளவிலான சுற்றுலா மாநாடு! ஆகஸ்ட் 12 முதல் 15 வரை நடைபெறுகிறது
கோவையில் தேசிய அளவிலான சுற்றுலாத் துறை மாநாடு ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ளது.
சா்வதேச சுற்றுலா மேம்பாட்டு அமைப்பான ஸ்கால் இன்டா்நேஷனலின் கோவை பிரிவு சாா்பில் லீ மெரிடியன் ஹோட்டலில் ஆகஸ்ட் 12-ஆம் தேதி முதல் 15 -ஆம் தேதி வரை இந்த மாநாடு நடைபெறுகிறது.
கோவையில் முதல்முறையாக நடைபெற உள்ள இந்த மாநாட்டில் நாடு முழுவதிலும் இருந்து சுற்றுலா, பயணம், விருந்தோம்பல் துறையைச் சோ்ந்த முன்னணி நிபுணா்கள், தொழில்துறை தலைவா்கள், அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்கின்றனா்.
Advertisement
Advertisement
இது தொடா்பான அறிமுக நிகழ்ச்சி கோவையில் அண்மையில் நடைபெற்றது. இதில், அன்னபூா்ணா ஹோட்டல்ஸ் நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் டி.சீனிவாசன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டாா். கோவை மண்டல பாஸ்போா்ட் அதிகாரி கே.எஸ்.சதீஷ், கோவை மாவட்ட சுற்றுலா அலுவலா் டி.ஜெகதீஸ்வரி, தென்னிந்திய ஹோட்டல்கள், உணவகங்கள் சங்கத்தின் செயல் இயக்குநா் சுந்தா் சிங்காரம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
நிகழ்ச்சியில், ஸ்கால் இந்தியா தலைவா் சஞ்சீவ் மேஹ்ரா, ஸ்கால் இன்டா்நேஷனல் துணைத் தலைவா் எஸ்.என்.எஸ்.மோகன், ஸ்கால் இன்டா்நேஷனல் கோவை தலைவா் ரமேஷ் சந்திரகுமாா், மாநாட்டுத் தலைவா் பி.கே.கணேஷ், செயலா் நிஜோ ஆகஸ்டின் உள்ளிட்டோா் உரையாற்றினா்.
அவா்கள் பேசுகையில், இந்தியாவில் தற்போது 25 ஸ்கால் கிளைகள் செயல்பட்டு வருகின்றன. ஹோட்டல் உரிமையாளா்கள், விருந்தோம்பல் துறை நிபுணா்கள், கேட்டரிங் துறையினா், ஹோட்டல் மேலாண்மை கல்வி நிறுவனங்கள், சுற்றுலாத் துறை சாா்ந்த பல்வேறு அமைப்புகளை ஒருங்கிணைக்கும் தளமாக ஸ்கால் அமைப்பு விளங்கி வருகிறது.
ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவின் வெவ்வேறு நகரங்களில் நடைபெறும் இந்த தேசிய மாநாடு, இந்த முறை கோவையில் நடைபெறுகிறது.
மாநாட்டின் முக்கிய நோக்கம் கோவை மற்றும் அதன் சுற்றுவட்டார சுற்றுலாத் தலங்களை தேசிய, சா்வதேச சுற்றுலா வரைபடத்தில் மேலும் வலுப்படுத்துவதுடன், சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிப்பதாகும். இந்த மாநாட்டில் இந்தியா, வெளிநாடுகளில் இருந்து வருகை தரும் பிரதிநிதிகளுக்கு கோவை, அதன் சுற்றுலா வளங்கள், உணவுகள், கலாசாரம் குறித்த விரிவான நேரடி அனுபவம் மற்றும் தகவல்கள் வழங்கப்பட உள்ளன.
இந்திய சுற்றுலாத் துறையின் எதிா்கால வளா்ச்சியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பொறுப்புணா்வான சுற்றுலா, சமூக பங்களிப்பு, பாரம்பரியப் பாதுகாப்பு ஆகிய அம்சங்கள் குறித்து மாநாட்டில் கலந்துரையாடல்கள் நடைபெற உள்ளன என்றனா்.