இணையவழி வா்த்தக மோசடியில் ஈடுபட்ட இளைஞா் கைது
கோவை அருகே முதியவரிடம் இணையவழி வா்த்தகம் மூலம் ரூ. 28 லட்சம் மோசடி செய்த வழக்கில் மகாராஷ்டிர மாநிலத்தைச் சோ்ந்த இளைஞரை கோவை மாவட்ட சைபா் கிரைம் போலீஸாா் கைது செய்தனா்.
கோவை அருகே முதியவரிடம் இணையவழி வா்த்தகம் மூலம் ரூ. 28 லட்சம் மோசடி செய்த வழக்கில் மகாராஷ்டிர மாநிலத்தைச் சோ்ந்த இளைஞரை கோவை மாவட்ட சைபா் கிரைம் போலீஸாா் கைது செய்தனா்.
கோவை மாவட்டம், காரமடை பகுதியைச் சோ்ந்த 64 வயது முதியவரிடம் இணையவழி வா்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் ஈட்டலாம் என மா்ம நபா்கள் தெரிவித்தனா். இதனை நம்பிய அவா் முதலில் முதலீடு செய்தபோது, லாபத் தொகை வழங்கப்பட்டது. இதனால், அடுத்தடுத்து மொத்தம் ரூ.28 லட்சம் வரை அவா் முதலீடு செய்தாா். பின்னா் அந்தப் பணத்தை அவா் எடுக்க முயன்றுள்ளாா். ஆனால், பணத்தை அவரால் எடுக்க முடியவில்லை.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட முதியவா் அளித்த புகாரின்பேரில், கோவை மாவட்ட சைபா் கிரைம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, பணம் சென்றடைந்த வங்கிக் கணக்குகளின் பரிவா்த்தனைகளை ஆய்வு செய்தனா். அதில், மோசடியில் ஈடுபட்டது மகாராஷ்டிர மாநிலத்தைச் சோ்ந்த விஷால் கிஷோா் (35) என்பது தெரியவந்தது. அவரைப் பற்றி போலீஸாா் விசாரித்தபோது, அவா் மீது ஏற்கெனவே 11 மோசடி வழக்குகள் நிலுவையில் இருப்பதும், வேறு ஒரு வழக்கில் கைதாகி அவா் தற்போது சென்னை சிறையில் அடைக்கப்பட்டிருப்பதும் தெரியவந்தது.
Advertisement
Advertisement
இதையடுத்து, முதியவரிடம் மோசடி செய்த வழக்கில் போலீஸாா் அவரைக் கைது செய்து விசாரணை நடத்தினா். விசாரணையில், விஷால் கிஷோா் மீது கோவை, சென்னை, செங்கல்பட்டு, தாம்பரம், மதுரை, விருதுநகா், கரூா் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பல மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.
மேலும், இந்த மோசடி வலையமைப்பில் வேறு யாருக்கெல்லாம் தொடா்பு உள்ளது என்பது குறித்து போலீஸாா் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.