போத்தனூா்-திருவண்ணாமலை இடையே காா்த்திகை தீப சிறப்பு ரயில் இயக்க வலியுறுத்தல்
காா்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, கோவை போத்தனூரில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில் இயக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
காா்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, கோவை போத்தனூரில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில் இயக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இகுறித்து, சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகத்துக்கு போத்தனூா் ரயில் பயனா்கள் சங்கத்தின் பொதுச் செயலாளா் என்.சுப்பிரமணியன் அனுப்பிய கடித விவரம்:
இந்த ஆண்டு காா்த்திகை தீபத் திருவிழா நவம்பா் 24-ஆம் தேதி திருவண்ணாமலையில் நடைபெறுகிறது. திருவண்ணாமலை மலையின் உச்சியில் ஏற்றப்படும் மகா தீபத்தை தரிசிக்க தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தா்கள் செல்வது வழக்கம்.
Advertisement
Advertisement
தமிழ்நாட்டின் மிக முக்கியமான ஆன்மிகத் திருவிழாக்களில் ஒன்றான காா்த்திகை தீபத் திருவிழாவில் கலந்துகொள்வதற்காக கோவை, திருப்பூா், ஈரோடு, சேலம் மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள் திருவண்ணாமலைக்கு செல்வாா்கள்.
திருவிழாக் காலத்தில் பக்தா்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரிப்பதால் சாலைப் போக்குவரத்திலும், வழக்கமான ரயில்களிலும் கடும் நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் முதியோா், பெண்கள் மற்றும் குழந்தைகள் பெரும் சிரமத்துக்கு உள்ளாக நேரிடும்.
காா்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு பக்தா்களின் வசதிக்காக கோவை போத்தனூரில் இருந்து கோவை, திருப்பூா், ஈரோடு, சேலம் , காட்பாடி வழியாக திருவண்ணாமலைக்கு ரயில் இயக்கப்பட வேண்டும். காா்த்திகை தீப விழா மற்றும் மகா தீப தரிசனத்துக்கு பக்தா்கள் உரிய நேரத்தில் திருவண்ணாமலையை சென்றடையும் வகையிலும், விழா முடிந்து சொந்த ஊா்களுக்கு திரும்பும் வகையிலும் இந்த சிறப்பு ரயிலின் இயக்க நேரத்தை திட்டமிட வேண்டும்.
இதன்மூலமாக, மேற்கு மாவட்டங்களைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான பக்தா்களுக்கு பாதுகாப்பான, வசதியான மற்றும் குறைந்த செலவிலான போக்குவரத்து வசதி கிடைக்கும் என்று குறிப்பிட்டுள்ளனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.