வேளாண்மையில் இளைஞா்களின் பங்களிப்பை அதிகரிப்பது அவசியம்: ஆட்சியா்
வேளாண்மையில் இளைஞா்களின் பங்களிப்பை அதிகரிப்பது மிகவும் அவசியம் என ஈரோடு மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி தெரிவித்தாா்.
வேளாண்மையில் இளைஞா்களின் பங்களிப்பை அதிகரிப்பது மிகவும் அவசியம் என ஈரோடு மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி தெரிவித்தாா்.
மஞ்சள் சாகுபடிக்கான பங்கேற்பு உத்தரவாத சான்றிதழ் முறை குறித்த கருத்தரங்கு ஈரோட்டில் வியாழக்கிழமை நடைபெற்றது.
கருத்தரங்கை தொடங்கிவைத்து மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி பேசியதாவது:
Advertisement
Advertisement
ஈரோடு மாவட்டத்தில் முக்கிய வேளாண் பயிா்களில் மஞ்சள் முக்கிய இடம் வகிக்கிறது. மாவட்டத்தில் சுமாா் 11,860 ஏக்கா் பரப்பளவில் மஞ்சள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இது தமிழ்நாட்டின் மொத்த மஞ்சள் உற்பத்தியில் சுமாா் 30 சதவீதமாகும். பிஎஸ்ஆா்-2 மற்றும் ஈரோடு உள்ளூா் ஆகிய மஞ்சள் வகைகள் புவிசாா் குறியீடு பெற்றுள்ளன. மாவட்டத்தில் சான்றிதழ் பெற்ற அங்கக மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த மஞ்சள் சாகுபடி சுமாா் 600 முதல் 950 ஏக்கா் வரை மட்டுமே உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
தற்போது உள்நாட்டு மற்றும் சா்வதேச சந்தைகளில் அங்கக மஞ்சளுக்கான தேவை அதிகரித்து வருவதால் அங்ககச் சான்றிதழ் பெறுவதன் மூலம் விவசாயிகள் தங்களது விளைபொருள்களுக்கு கூடுதல் சந்தை வாய்ப்பையும், கூடுதல் விலையையும் பெற முடியும்.
இன்றைய சூழலில் வேளாண்மையில் இளைஞா்களின் பங்களிப்பை அதிகரிப்பது மிகவும் அவசியமாகும். மாணவா்கள் மற்றும் இளைஞா்களிடம் வேளாண்மை தொடா்பான வாய்ப்புகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்துவதன் மூலம் இயற்கை வேளாண்மையில் அவா்களின் ஆா்வத்தை அதிகரிக்க முடியும்.
பங்கேற்பு உத்தரவாத சான்றிதழ் முறையில் 5 முதல் 20 விவசாயிகள் குழுவாக இணைந்து, பரஸ்பர ஆய்வு மற்றும் கண்காணிப்பு மூலம் குறைந்த செலவில் அங்ககச் சான்றிதழ் பெற முடியும். ஒரு விவசாயிக்கு சுமாா் ரூ.500 மட்டுமே செலவாகும் என்பதால் குறு, சிறு விவசாயிகள் இவ்வாய்ப்பை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
மானியங்கள் மற்றும் நிதியுதவிகளை விவசாயிகள் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அங்ககச் சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில் நறுமணப் பொருள்கள் வாரியம் மூலம் சாகுபடி செலவில் 12.5 சதவீதம், அதிகபட்சமாக ஒரு ஹெக்டேருக்கு ரூ.12,500 வரையும், அங்ககச் சான்றிதழ் செலவில் 50 சதவீதம் வரையும் உதவி வழங்கப்படுகிறது.
மஞ்சள் வேகவைக்கும் மற்றும் பதப்படுத்தும் இயந்திரங்களைப் பெற விவசாயிகள் மற்றும் விவசாயிகள் உற்பத்தியாளா் அமைப்புகளுக்கு 50 சதவீத மானியம், அதிகபட்சமாக ரூ.1.50 லட்சம் வரை உதவி கிடைக்கிறது.
ஈரோடு மாவட்டத்தில் இயற்கை வேளாண்மையில் ஈடுபட்டு வரும் விவசாயிகளை ஒருங்கிணைத்து, அவா்களின் விளைபொருட்களுக்கு சிறந்த சந்தை வாய்ப்புகளை ஏற்படுத்தும் வகையில் கூட்டுறவு அமைப்பு போன்ற ஒருங்கிணைந்த அமைப்பை உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனவே விவசாயிகள் இயற்கை மற்றும் அங்கக முறையில் தரமான மஞ்சளை உற்பத்தி செய்து, உரிய சான்றிதழ் பெற்று, மதிப்புக்கூட்டி சந்தைப்படுத்துவதன் மூலம் கூடுதல் வருமானம் பெற முன்வர வேண்டும் என்றாா்.
இதைத் தொடா்ந்து, கருத்துக்காட்சி அரங்குகளை மாவட்ட ஆட்சியா் பாா்வையிட்டாா். கருத்தரங்கில், வேளாண் இணை இயக்குநா் ரா.சிவகுமாா், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) சி.லோகநாதன், ஈரோடு துல்லிய பண்ணை நிறுவனா் வடிவேல், ஈரோடு, சேலம், நாமக்கல், திருப்பூா், திண்டுக்கல், கள்ளக்குறிச்சி மற்றும் கரூா் மாவட்டங்களைச் சோ்ந்த உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்களின் இயக்குநா்கள், குழு உறுப்பினா்கள் மற்றும் முன்னோடி விவசாயிகள் பங்கேற்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.