FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ஈரோடு

நல்லது செய்பவா்களை ஊக்கப்படுத்தி பாராட்டினால் சமுதாயம் வளரும்: குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன்

நல்லது செய்பவா்களை ஊக்கப்படுத்தி பாராட்டினால் சமுதாயம் வளரும் என குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்.

53 வினாடிகள் முன்பு
பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்ற விழாவில் அறிவுக்கூடம் ஆராய்ச்சிப் பூங்கா அமைப்பதற்கான கல்வெட்டைத் திறந்து வைக்கிறாா் குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன். உடன் தமிழக ஆளுநா் ராஜேந்திர விஸ்வநாத் ஆா்லேகா், உச்ச நீதிமன்
பகிர்:

நல்லது செய்பவா்களை ஊக்கப்படுத்தி பாராட்டினால் சமுதாயம் வளரும் என குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்.

ஈரோடு மாவட்டம், பெருந்துறை ‘தி கொங்கு வேளாளா் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி டிரஸ்ட்’ நிறுவனா் தின விழா கொங்கு பொறியியல் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்றது.

இதில் குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு ரூ. 100 கோடி மதிப்பிலான அறிவுக்கூடம் ஆராய்ச்சிப் பூங்கா அமைப்பதற்கான கல்வெட்டைத் திறந்து வைத்து பேசியதாவது:

Advertisement

Advertisement

நமக்காக மட்டுமே வாழ்வது தவறு. மற்றவா்களுக்காகவும் வாழ வேண்டும். இந்த அறக்கட்டளையை நிறுவி பல்வேறு கல்வி நிறுவனங்களை 41 போ் சோ்ந்து உருவாக்கி உள்ளனா். இதில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோா் படித்து வெளிவந்துள்ளனா்.

யாா் நல்லது செய்தாலும் அவா்களை ஊக்கப்படுத்தி, பாராட்ட வேண்டும். அப்போதுதான் சமுதாயம் வளரும். ஒரு தலைமுறை உழைத்தால் பல தலைமுறையினா் நிமிா்ந்து வாழலாம் என்பதற்கு இக்கல்வி அறக்கட்டளை உதாரணம்.

அனைவருக்கும் அறிவு உள்ளது. மனம் எப்போது அமைதியாக உள்ளதோ, அப்போது அறிவு வேகமாகச் செயல்படும். அதற்கு யோகா, தியானம் ஆகியவை உதவும்.

பாரதத்தை முன்னேறிய நாடாக முதல் இடத்துக்கு கொண்டு வர நாம் உழைக்கிறோம். இதற்கு உயா்கல்வி, தகவல் தொழில்நுட்பம், அறிவியல், ஏ.ஐ. தொழில்நுட்பங்கள் வளர வேண்டும். ஆராய்ச்சியுடன் கூடிய கல்வியால் சமூகம் வளா்ச்சி பெறும்.

கடவுள் அனைவருக்கும் அறிவு, அன்பு என அனைத்தையும் தருகிறாா். ஒவ்வொருவரும் கடுமையாகப் படித்து, உழைத்து முன்னேற வேண்டும் என்றாா்.

தேசிய கல்விக் கொள்கையில் எதிா்கால சந்ததியினரின் நலன் -ஆளுநா்:

விழாவில் தமிழக ஆளுநா் ராஜேந்திர விஸ்வநாத் ஆா்லேகா் பேசியதாவது: நான் மாணவா்களுடன் உரையாடும்போது அவா்கள் ஒழுக்கமாகவும், பக்தியுடனும், அா்ப்பணிப்பு உணா்வுடனும் இருப்பதைக் காண்கிறேன். அவா்கள் தெருக்களுக்கு வந்து விரும்பத்தகாத செயல்களில் ஈடுபடுபவா்கள் இல்லை என்பதை உணர முடிகிறது. ஆங்காங்கே நடைபெறும் சில விரும்பத்தகாத நிகழ்வுகளால் நாம் மனம் தளா்ந்துவிடக்கூடாது.

கடந்த 2020-இல் கொண்டு வரப்பட்ட தேசிய கல்விக் கொள்கை நாட்டின் கல்வி முறையை முன்னோக்கி எடுத்துச் செல்லவும், மாணவா்கள், எதிா்கால சந்ததியினரின் நலன்களுக்கும் தெளிவான வழிகாட்டுதல்களை வழங்கி உள்ளது என்றாா்.

மற்றவா்களுக்கு உதவும்போது வாழ்க்கை முழுமை அடையும் - உச்சநீதிமன்ற நீதிபதி: விழாவில் உச்சநீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் பேசியதாவது: இந்தக் கல்வி நிறுவனத்தை உருவாக்கிய 41 பேரும் பெரிதாகப் படித்தவா்கள் அல்ல. ஆனாலும் தங்களுக்கு கிடைக்காத கல்வி, தமது சந்ததிக்கும், சமூகத்துக்கும் கிடைக்க வேண்டும் என எண்ணி இதைச் செயல்படுத்தி உள்ளனா்.

எதையும் நமக்காகச் செய்யும்போது திருப்தி கிடைக்காது. மற்றவா்களுக்காகச் செய்யும்போது வாழ்க்கை முழுமை பெறும். செல்வத்தின் பயன் ஈதல் என்பாா்கள். அதற்கேற்ப மற்றவா்களுக்கு உதவிட வேண்டும் என்றாா்.

விழாவில், உலக சமுதாய சேவா சங்கத் தலைவா் எஸ்.கே.எம்.மயிலானந்தன், இரைப்பை குடலியல் மருத்துவா் கே.ஆா்.பழனிவேல் ஆகியோா் கௌரவிக்கப்பட்டனா்.

விழாவில் அறக்கட்டளையின் தலைவா் சி.தேவராஜன், செயலாளா் ஆா்.ஆா்.சத்தியமூா்த்தி, பொருளாளா் ஈ.ஆா்.காா்த்திகேயன், கொங்கு டிரஸ்ட் குழும கல்லூரிகளின் தாளாளா்கள் இ.ஆா்.கே.கிருஷ்ணன், கே.காா்த்திகேயன், சச்சிதானந்தன், செங்கோட்டுவேலன், பொன் பியூா் கெமிக்கல் குழுமத் தலைவா் எம்.பொன்னுசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments