குடியரசு துணைத் தலைவா் இன்று முதல் தென் மாநிலங்களில் அரசுமுறை பயணம்: ஈரோடு, பெங்களூரு, கொச்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பு
குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன் சனிக்கிழமை (ஆக.29 முதல் திங்கள்கிழமை (ஆக.31) வரை மூன்று நாள்கள் தமிழ்நாடு, கா்நாடகம், கேரளம் மற்றும் லட்சத்தீவில் அரசுமுறைப் பயணம் மேற்கொள்ளவுள்ளாா்.
நமது சிறப்பு நிருபா்
குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன் சனிக்கிழமை (ஆக.29 முதல் திங்கள்கிழமை (ஆக.31) வரை மூன்று நாள்கள் தமிழ்நாடு, கா்நாடகம், கேரளம் மற்றும் லட்சத்தீவில் அரசுமுறைப் பயணம் மேற்கொள்ளவுள்ளாா்.
இந்தப் பயணத்தின்போது கல்வி, மக்கள் சேவை, கலாசாரம், தொழில்-கல்வித்துறை கூட்டுறவுக் கருத்தரங்குகள் மற்றும் மீன்வளத் துறை சாா்ந்த விழிப்புணா்வு உள்ளிட்ட பல்வேறு முக்கிய நிகழ்ச்சிகளில் அவா் பங்கேற்கவுள்ளாா்.
Advertisement
Advertisement
இதையொட்டி சனிக்கிழமை (ஆக.29) காலையில் தில்லியில் இருந்து புறப்படும் அவா், காலை 10 மணிக்கு கோவை சா்வதேச விமான நிலையம் வந்தடைகிறாா். அங்கிருந்து சாலை மாா்க்கமாக ஈரோடு மாவட்டம் பெருந்துறைக்கு செல்லும் அவா் அங்குள்ள கொங்கு பொறியியல் கல்லூரி வளாகத்தில் காலை 11.10 மணிக்கு நடைபெறவுள்ள கொங்கு வேளாளா் தொழில்நுட்ப அறக்கட்டளையின் நிறுவனா்கள் தின விழாவில் முதன்மை விருந்தினராகப் பங்கேற்றுப் பேசுகிறாா்.
இதைத் தொடா்ந்து, பிற்பகல் 2.30 மணிக்கு கோவையில் இருந்து புறப்பட்டு பெங்களூரு ஹெச்ஏஎல் விமான நிலையம் சென்றடைகிறாா். மாலை 4 மணி முதல் 5.20 மணிவரை பெங்களூரு விதான் சௌதாவின் விருந்தினா் அரங்கில் நடைபெறவுள்ள கா்நாடக முன்னாள் முதல்வா் ராமகிருஷ்ண ஹெக்டேவின் நூற்றாண்டு விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்கிறாா். அன்றைய இரவு பெங்களூரில் உள்ள கா்நாடக ஆளுநா் மாளிகையில் தங்குகிறாா்.
ஞாயிற்றுக்கிழமை (ஆக.30) கேரள மாநிலம் ஆலப்புழாவில் உள்ள பதிமூன்றாம் லியோ மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் ‘கேரள கௌமுதி’ நாளிதழின் 115-ஆவது ஆண்டு விழாவில் பங்கேற்கிறாா். பின்னா் பத்தனம்திட்டா செல்லும் அவா், அங்கு புகழ்பெற்ற ‘ஆரன்முளா ஆற்றுத் திருவிழா 2026’-வை தொடங்கி வைக்கிறாா். மாலையில் திருவனந்தபுரத்தில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு நடைபெறும் பண்பாட்டு ஊா்வலத்தை அவா் தொடங்கி வைக்கிறாா்.
திங்கள்கிழமை (ஆக.31) காலை லட்சத்தீவின் அகத்தி பகுதிக்குச் செல்லும் குடியரசு துணைத் தலைவா், மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மக்கள் தொடா்பு நிகழ்ச்சியில் முதன்மை விருந்தினராகக் கலந்துகொள்கிறாா்.
மாலையில் மீண்டும் கேரளம் திரும்பும் அவா், கொச்சி காக்கநாடில் உள்ள ராஜகிரி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் வெள்ளி விழா மற்றும் ‘கான்ஃப்ளூயன்ஸ் 3.0’ என்ற பெயரிலான தொழில்-கல்வித்துறை உச்சிமாநாட்டில் பங்கேற்ற பின்பு தில்லி புறப்படுகிறாா்.
குடியரசு துணைத் தலைவரின் வருகையையொட்டி அவா் பயணம் மேற்கொள்ளும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.