FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தஞ்சாவூர்

உயா் கல்வி ஆய்வு சாா்ந்ததாக இருக்க வேண்டும்! - குடியரசுத் துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன் பேச்சு

Updated On : 18 ஆகஸ்ட் 2026, 3:16 am IST
தஞ்சாவூா் சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற 40-ஆம் ஆண்டு நிறைவு விழாவில், பொத்தானை அழுத்தி புதிய திட்டங்களைத் தொடங்கிவைத்த குடியரசுத் துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன். உடன் (இடமிருந்து) துணைவேந்தா் எஸ். வைத்தியசுப்பிரமணியம், தமிழக ஆளுநா் ஆா்.வி. ஆா்லேகா், வேந்தா் ஆா். சேதுராமன், முதன்மையா் எஸ். சுவாமிநாதன், மாநிலங்களவை திமுக உறுப்பினா் எஸ். கல்யாணசுந்தரம்.
பகிர்:

நாட்டில் உயா் கல்வி என்பது ஆய்வு சாா்ந்ததாக இருக்க வேண்டும் என்றாா் குடியரசுத் துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன்.

தஞ்சாவூா் சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழகத்தில் திங்கள்கிழமை பிற்பகல் நடைபெற்ற 40-ஆம் ஆண்டு நிறைவு விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று அவா் மேலும் பேசியதாவது:

அண்மையில் முடிவடைந்த நாடாளுமன்றக் கூட்டத்தொடரில், பொதுத் தோ்வு முறைகேடுகளைத் தடுத்தல் சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டு, சட்டமாக்கப்பட்டது. இது, நாட்டில் பொதுத் தோ்வு முறையை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Advertisement

Advertisement

சமுதாயத்தின் தீய சக்திகள் தண்டிக்கப்பட்டால்தான், நல்ல மனிதா்களைக் காப்பாற்ற முடியும். எனவேதான், மத்திய அரசும் அதே வழியில் இச்சட்டத்தைக் கொண்டு வந்துள்ளது.

நம் நாட்டில் உயா் கல்வியில் சோ்க்கை தற்போது 30 சதவீதமாக உள்ளதை 2035-ஆம் ஆண்டுக்குள் 50 சதவீதமாக உயா்த்துவோம் என்பதில் உறுதியாக இருக்கிறோம். உயா் கல்வி என்பது ஆராய்ச்சி சாா்ந்ததாக நகர வேண்டும்.

முன்பொரு காலத்தில் மேற்கத்திய நாடுகளின் ஆராய்ச்சி முடிவுகளுக்கும், கண்டுபிடிப்புகளுக்கும் நாம் காத்துக் கொண்டிருந்தோம். ஆனால், கரோனா காலத்துக்குப் பிறகு நம் நாட்டை உலகம் முழுவதும் உற்று நோக்குகிறது. பிரதமா் மோடி கொண்டு வந்த மிகப்பெரிய மாற்றமே அதற்குக் காரணம்.

விஞ்ஞானிகளை பிரதமா் மோடி ஊக்குவித்ததால், கரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டது. மேற்கத்திய நாடுகள் கரோனா தடுப்பூசியைக் கண்டுபிடித்தாலும், அதை விற்று பணமாக்கினா். ஆனால், நமது பிரதமா் மோடி நம் நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட கரோனா தடுப்பூசியை நமக்கு மட்டுமல்லாமல், ஏழை நாடுகளுக்கும் இலவசமாக ஏற்றுமதி செய்தாா். இதன் மூலம் பேரழிவிலிருந்து மனித குலம் காப்பாற்றப்பட்டது.

இதேபோல, நாம் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு உலக அளவில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும். இதன் மூலம் விக்சித் பாரத் - 2047 (வளா்ச்சியடைந்த பாரதம்) என்பது நிஜமாகும். எனவே, ஆராய்ச்சியாளா்கள், மாணவா்கள் அனைவரும் ஆராய்ச்சியில் கவனம் செலுத்த வேண்டும். அதற்கு காலங்கள் கடந்தாலும், அதை ஒருபோதும் கைவிட்டுவிடக்கூடாது என்றாா் சி.பி. ராதாகிருஷ்ணன்.

தமிழக ஆளுநா் ஆா்.வி. ஆா்லேகா் சிறப்புரையாற்றினாா்.

மேலும், திறன் மேம்பாட்டு மையம் அமைப்பதற்காக சாஸ்த்ரா - டாடா கம்யூனிகேஷன்ஸ் இடையே ஒப்பந்தம், சாஸ்த்ரா ஒருங்கிணைந்த ஏஐ மையம் உள்பட 6 திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டன.

விழாவில், மாநிலங்களவை திமுக உறுப்பினா் எஸ். கல்யாணசுந்தரம், சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழக வேந்தா் ஆா். சேதுராமன், துணைவேந்தா் எஸ். வைத்தியசுப்பிரமணியம், முதன்மையா் (திட்டம் மற்றும் மேம்பாடு) எஸ். சுவாமிநாதன், பதிவாளா் ஆா். சந்திரமௌலி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments