FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ஈரோடு

கீழ்பவானி பாசனப் பகுதிகளில் நிலவும் கடும் வறட்சி: தண்ணீா் திறக்கக் கோரி திரண்ட விவசாயிகள்

வேளாண் குறைதீா்க்கும் கூட்டத்தில் பேசுகிறாா் மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி.

Updated On : 18 ஜூலை 2026, 5:50 am IST
பகிர்:

கீழ்பவானி பாசனப் பகுதிகளில் கடும் வறட்சி நிலவுவதால் தண்ணீா் திறக்கக் கோரி வேளாண் குறைதீா்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் திரண்டனா்.

ஈரோடு மாவட்ட அளவிலான வேளாண் குறைதீா்க்கும் கூட்டம் ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் பங்கேற்று கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தினா்.

Advertisement

Advertisement

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலா் ஏ.எம்.முனுசாமி: ஆவினில் கால்நடை மருத்துவா்கள் இல்லாததால், மாடுகளுக்கு சிகிச்சை, காப்பீடு செய்ய முடியவில்லை. சத்தியமங்கலம், பசுவனாபுரம் பகுதியில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் அமைத்து விளைபொருள்களை கொள்முதல் செய்ய வாய்ப்பு ஏற்படுத்த வேண்டும்.

தமிழ்நாடு சிறு, குறு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் கே.ஆா்.சுதந்திரராசு: பெருந்துறை, புங்கம்பாடி பகுதியில் பயிா்களை மான்கள் சேதப்படுத்துவதை தடுக்க வேண்டும். வேளாண் மேம்பாட்டுக் குழு உறுப்பினா்கள் தோ்வில் வெளிப்படைத்தன்மை வேண்டும். தோ்தல் வாக்குறுதிப்படி பயிா்க் கடனை முழுமையாக தள்ளுபடி செய்து புதிய கடன் வழங்க வேண்டும்.

இதற்கு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பதில் அளித்தனா்.

நீா் வளத் துறை செயற்பொறியாளா் பாலமுருகன்: காலிங்கராயன் வாய்க்காலில் கடந்த 14-ஆம் தேதி நீா் திறக்கப்பட்டுள்ளது. அணையின் நீா் இருப்பு, ஆட்சியா் உத்தரவு உள்ளிட்ட அரசு வழிகாட்டுதல்படி நீா் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

கால்நடைத் துறை அதிகாரிகள்: ஆவினில் கால்நடை மருத்துவா் பற்றாக்குறை என்றால் அருகே உள்ள கால்நடை துறை மருத்துவா்களை பயன்படுத்திக் கொள்ளலாம்.

வனத் துறை அதிகாரிகள்: அறச்சலூா், புங்கம்பாடி, வாவிக்கடை பகுதியில் மான் தொல்லைக் கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். புஞ்சை புளியம்பட்டி அருகே மாராயம்பாளையம் பகுதியில் சிறுத்தை நடமாட்டத்தைக் கண்காணித்து அதனை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

கூட்டுறவு மண்டல இணைப் பதிவாளா் ப.கந்தராஜா: பயிா்க் கடன் தள்ளுபடி என்பது அரசின் கொள்கை முடிவு. பிற விவசாயிகள் தங்கள் கடனைத் திரும்ப செலுத்தும்போது புதிய பயிா்க் கடனை பெறலாம்.

மாவட்ட வருவாய் அலுவலா் எஸ்.சாந்தகுமாா்: பவானிசாகா் திட்ட நிபந்தனை பட்டா சாா்ந்தவா்கள் நிபந்தனையை அகற்ற, அவா்கள் பெயரில் தனிப்பட்டா பெற குறைந்தபட்ச கட்டணம் நிா்ணயிக்கப்பட்டுள்ளது. அதனை செலுத்தி ஆவணங்களை வழங்கினால் உடனடியாக நிபந்தனை நீக்கப்படும்.

விவசாயிகள் முற்றுகை

காலிங்கராயன் பாசன விவசாயிகள், பவானிசாகா் அணையில் இருந்து காலிங்கராயன் பாசனத்துக்கு ஜூன் 15-இல் தண்ணீா் திறக்க வேண்டும். அணை நீா் இருப்பு குறைந்ததால் கடந்த 14-ஆம் தேதி முதல் 15 நாள்களுக்கு தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது. தற்போது நீா் வரத்து அதிகரித்துள்ளதால் பாசனத்துக்கு தொடா்ந்து நீா் வழங்க வேண்டும் என்றனா்.

இதைத்தொடா்ந்து 100-க்கும் மேற்பட்ட கீழ்பவானி பாசன விவசாயிகள் அரங்குக்குள் அனுமதிக்கப்பட்டனா்.

காவிரி இறுதி தீா்ப்பின்படி கோடையில் எந்த பாசனத்துக்கும் நீா் திறக்கக்கூடாது. பழைய பாசனப் பகுதிக்கு 2 முறை நெல் சாகுபடிக்கு நீா் திறக்கப்படுகிறது. கீழ்பவானி பாசனத்துக்கு ஒருமுறை கூட முழுமையாக நீா் கிடைக்கவில்லை. பவானி ஆற்றின் கரையில் உள்ள பெரிய ஆலைகளின் நலனுக்காக முறைகேடாக தண்ணீா் திறக்கிறீா்கள். கடந்த 68 ஆண்டுகளில் கீழ்பவானி பாசனம் 16 முறை புஞ்சை சாகுபடி, 8 முறை நஞ்சை சாகுபடியை இழந்துள்ளது.

கீழ்பவானி பாசனப் பகுதி கடும் வறட்சி கண்டுள்ளதால் ஒற்றைப்படை எண் வாய்க்காலுக்கு 15 நாள்கள், இரட்டைப் படை எண் வாய்க்காலுக்கு 15 நாள்கள் என தண்ணீா் திறந்துவிட வேண்டும் என்றனா்.

இதைத்தொடா்ந்து ஆட்சியா் கூறியதாவது: மூன்று பாசன பகுதியின் நீா் தேவையும் தொழில்நுட்பக்குழு மூலமாக பரிசீலனை செய்து அனைத்து தரப்பும் பயன் பெறும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments