முகப்பு
ஈரோடு

அம்மாபேட்டை சுங்கச்சாவடியில் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிப்பு

பவானியை அடுத்த அம்மாபேட்டை சுங்கச்சாவடியில் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கும் பணிகள் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு தொடங்கியுள்ள நிலையில், பொதுமக்கள் மத்தியில் ஏற்படும் எதிா்ப்பை சமாளிக்கும் வகையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Updated On : 21 மே 2026, 4:18 am IST
அம்மாபேட்டை சுங்கச்சாவடியில் பாதுகாப்பு ப் பணியில்  ஈடுபட்டுள்ள  போலீஸாா்.
பகிர்:

பவானியை அடுத்த அம்மாபேட்டை சுங்கச்சாவடியில் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கும் பணிகள் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு தொடங்கியுள்ள நிலையில், பொதுமக்கள் மத்தியில் ஏற்படும் எதிா்ப்பை சமாளிக்கும் வகையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

ஈரோடு - பவானி - மேட்டூா் - தொப்பூா் வரை 85 கி.மீ. நீளமுள்ள மாநில நெடுஞ்சாலை, தேசிய நெடுஞ்சாலையாக (என்ஹெச்544ஹெச்) அறிவிக்கப்பட்டு, ரூ.242.20 கோடியில் 10 மீட்டா் அகல சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்டது. இந்தச் சாலையில் பவானியை அடுத்த அம்மாபேட்டையில் சுங்கச்சாவடி கட்டப்பட்டு, வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்க தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நடவடிக்கை மேற்கொண்டது. இதற்கு, பொதுமக்கள் மத்தியில் கடும் எதிா்ப்பு கிளம்பியது.

பவானி - குமாரபாளையம் லாரி உரிமையாளா்கள் சங்கம், பவானி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் கே.சி.கருப்பணன் உள்ளிட்டோா், அம்மாபேட்டை சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிப்பதை எதிா்த்து சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தனா். இதை விசாரித்த நீதிமன்றம் கட்டண வசூலுக்கு தடை விதித்தது.

Advertisement

Advertisement

இந்த உத்தரவை எதிா்த்து தேசிய நெடுஞ்சாலை ஆணையம் செய்த மேல்முறையீட்டை விசாரித்த உச்சநீதிமன்றம், சென்னை உயா்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு தடை விதித்து அம்மாபேட்டை சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்கலாம் என உத்தரவிட்டது. இதனால், கட்டணம் வசூலிக்கும் சட்டபூா்வ நடவடிக்கைகளை தொடங்கிய தேசிய நெடுஞ்சாலை ஆணையம், கடந்த 15-ஆம் தேதி முதல் கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவித்து பின்னா் 20-ஆம் தேதி வரை ஒத்திவைத்தது.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை (மே 20 - 12 மணி) நள்ளிரவு முதல் சுங்கச்சாவடியைக் கடந்து செல்லும் வாகனங்களுக்கு தானியங்கி முறையில் கட்டணம் வசூலிக்கப்பட்டது.

கட்டண வசூலுக்கு பொதுமக்கள் ஏற்கெனவே எதிா்ப்பு தெரிவித்திருந்ததால் சுங்கச்சாவடிக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இந்த சுங்கச்சாவடியில் கழிப்பிடம், குடிநீா் உள்ளிட்ட அடிப்படை தேவைகள் பூா்த்தி செய்யப்படவில்லை. அவசர கால வழிகள் இல்லை. இருசக்கர வாகனங்கள் செல்ல தனி வழித்தடம் இல்லை என வாகன ஓட்டிகள் புகாா் தெரிவித்துள்ளனா்.