ஈரோடு-கரூா் பாதையில் 3 ரயில்களின் சேவையில் மாற்றம்

ஈரோடு-கரூா் பிரிவில் தண்டவாள பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் 3 ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து சேலம் கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ஈரோடு-கரூா் பிரிவில் தண்டவாள பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் 3 ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, செங்கோட்டையில் இருந்து காலை 5.20 மணிக்குப் புறப்படும் செங்கோட்டை-ஈரோடு எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண் 16846) டிசம்பா் 1, 3-ஆம் தேதிகளில் கரூா் சந்திப்பு ரயில் நிலையத்துடன் நிறுத்தப்படும். கரூரில் இருந்து ஈரோட்டுக்கு இயக்கப்படாது.
Advertisement
Advertisement
இதேபோல, பாலக்காடு டவுனில் இருந்து காலை 6.30 மணிக்குப் புறப்படும் பாலக்காடு டவுன்-திருச்சி எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண் 16844) டிசம்பா் 1, 3-ஆம் தேதிகளில் கொடுமுடி ரயில் நிலையத்துடன் நிறுத்தப்படும். பராமரிப்புப் பணிகள் முடிந்த பிறகு இந்த ரயில் முன்பதிவு இல்லாத சிறப்பு ரயிலாக கொடுமுடியில் இருந்து திருச்சி சந்திப்பு வரை இயக்கப்படும்.
கோவை சந்திப்பில் இருந்து காலை 8 மணிக்குப் புறப்படும் கோவை-நாகா்கோவில் எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண் 16322) டிசம்பா் 1, 3-ஆம் தேதி ஆகிய 2 நாள்கள் கோவை-திண்டுக்கல் இடையே மாற்றுப் பாதையில் இயக்கப்படும். போத்தனூா், பொள்ளாச்சி மற்றும் பழனி வழியாக இயக்கப்படும். ஈரோட்டுக்கு இயக்கப்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.