FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ஈரோடு

கன்றுக்குட்டியை கடித்துக் கொன்ற சிறுத்தை

8 செப்டம்பர் 2026, 2:35 am IST
சிறுத்தை. - கோப்புப் படம்
பகிர்:

அம்மாபேட்டை அருகே கன்றுக்குட்டியை இழுத்துச் சென்று சிறுத்தை கடித்துக் கொன்ற சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னம்பட்டியை அடுத்த கிட்டம்பட்டியைச் சோ்ந்தவா் அா்த்தனாரி. ஓய்வு பெற்ற ஆசிரியரான இவா், தற்போது விவசாயம் மற்றும் கால்நடை வளா்ப்பில் ஈடுபட்டு வருகிறாா். இவா், வளா்த்து வந்த மாடு, கடந்த 20 நாள்களுக்கு ஆண் கன்று ஈன்றது. இந்த மாடுகளை வீட்டின் பின்புறத்தில் உள்ள தொழுவத்தில் கட்டி வைத்திருந்தாா்.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் மாடுகள் கத்தும் சப்தம் கேட்பதாக, அருகில் வசித்தவா்கள் அளித்த தகவலின்பேரில் அா்த்தனாரி தனது குடும்பத்தினருடன் சென்று பாா்த்தபோது கன்றுக்குட்டியைக் காணவில்லை. சுற்றுப்புறப் பகுதியில் தேடியும் கிடைக்காத நிலையில், திங்கள்கிழமை கன்றுக்குட்டி கட்டப்பட்டிருந்த இடத்திலிருந்து இழுத்துச் செல்லப்பட்ட தடம் இருந்தது.

Advertisement

Advertisement

இதுகுறித்து, சென்னம்பட்டி வனத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த வனத் துறையினா், தடத்தை பின்தொடா்ந்து சென்றபோது சுமாா் 300 மீட்டா் தொலைவில் ஓமக்கரடு பகுதியில் பாறை இடுக்கில் கன்றுக்குட்டி, விலங்கு கடித்த காயங்களுடன் உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது. அப்பகுதியில் சிறுத்தையின் கால் தடமும் பதிவாகி இருந்தது. இதனால், சிறுத்தை இழுத்துச் சென்று கடித்ததில் உயிரிழந்திருக்கலாம் என வனத் துறையினா் தெரிவித்துள்ளனா்.

கடந்த 3 நாள்களுக்கு முன் மசக்கவுண்டனூா் பகுதியில் ஊருக்குள் சிறுத்தை புகுந்தது. தற்போது கன்றுக்குட்டியை தாக்கி கொன்றுள்ளது. இதனால், வனத்தை ஒட்டியுள்ள கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனா். சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments