FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

மாவட்ட நிர்வாகம் சார்பில் சுதந்திர தின விழா

திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் 72 ஆவது சுதந்திர தின விழா சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் புதன்கிழமை நடைபெற்றது.

30 ஜனவரி 2024, 10:01 pm IST
பகிர்:

திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் 72 ஆவது சுதந்திர தின விழா சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் புதன்கிழமை நடைபெற்றது.
விழாவில்,  திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி, தேசியக் கொடியை ஏற்றிவைத்து, காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார்.  பிறகு, சுதந்திரப் போராட்டத் தியாகிகள் மற்றும் அவர்களின் வாரிசுகளுக்கு பொன்னாடை போர்த்தி கெளரவித்தார். மேலும், சமாதானத்தை வலியுறுத்தும் வகையில் புறாக்கள், பலூன்களை பறக்கவிட்டார். இதனைத் தொடர்ந்து சிறப்பாக பணிபுரிந்த 48 அரசு அலுவலர்கள், 44 காவல் துறையினர் மற்றும் 8 தீயணைப்பு மற்றும் மீட்பு பணி துறையினர் என மொத்தம் 100 பேருக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார். விழாவில், இலவச வீட்டுமனைப்பட்டா,  விபத்து நிவாரண நிதி, வேளாண் உபகரணங்கள், கல்வி உதவித்தொகை, திருமண உதவித் தொகை,  மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை அவயங்கள்,  பெண்குழந்தைகள் பாதுகாப்புத்திட்டத்தின் கீழ் வைப்புத்தொகை, இலவச தையல் இயந்திரங்கள் என மொத்தம் 233 பயனாளிகளுக்கு ரூ. 52 லட்சத்து 96 ஆயிரத்து 657 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. 
விழாவையொட்டி,  திருப்பூர் மாவட்ட 9 தனியார், அரசு பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.  இதில் பங்கேற்ற 933  மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கப்பட்டன.
இவ்விழாவில், மாநகர காவல் ஆணையர் மனோகரன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கயல்விழி, மாவட்ட வருவாய் அலுவலர் ச.பிரசன்ன ராமசாமி,  திட்ட இயக்குநர் (ஊரக வளர்ச்சி முகமை) ரமேஷ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கிராமசபைக் கூட்டம்
இதையடுத்து அவிநாசி ஒன்றியம், புதுப்பாளையம் ஊராட்சி, முருகம்பாளையத்தில் சுதந்திர தினத்தையொட்டி, கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு,  ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி தலைமை வகித்து பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்களுக்கு உடனடித் தீர்வு காண துறைவாரியான அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.


பெருமாநல்லூர் கே.எம்.சி. பள்ளியில்...
பெருமாநல்லூர் கே.எம்.சி பள்ளியில் சுதந்திர தின விழா, பள்ளி 10 ஆம் ஆண்டு விளையாட்டு விழா புதன்கிழமை நடைபெற்றன.
விழாவுக்கு, பள்ளித் தலைவர் கே.சி.சண்முகம் தலைமை வகித்தார். தாளாளர் சி.எஸ்.மனோகரன், முதல்வர் மேரி எமரென்சியா, தலைமை ஆசிரியர் பால்ராஜ்,  பள்ளி அறங்கட்டளை உறுப்பினர்கள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்து சமய அறநிலையத் துறை முன்னாள் உதவி ஆணையர்  அழ. முத்துப் பழனியப்பன், ஈரோடு மனிதவள மேம்பாட்டு பயிற்சியாளர் ஸ்ரீ கதிர், பள்ளி நிர்வாக அறங்காவலர் சின்னசாமி ஆகியோர் சிறப்புரையாற்றினர். 
இதில் தேசியக் கொடி ஏற்றப்பட்டு மாணவ, மாணவிகளின் அணிவகுப்பு நடைபெற்றது. இதைத்தொடர்ந்து  பல்வேறு விளையாட்டுப் போட்டிகள்  நடைபெற்று வென்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதையடுத்து மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

வெங்கடேஷ்வரா பள்ளியில்....
சேவூர் அருகே அ.குரும்பபாளையம் வெங்கடேஷ்வரா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சுதந்திர தினவிழா, விளையாட்டு விழா புதன்கிழமை நடைபெற்றன. 
விழாவுக்கு, பள்ளித் தாளாளர் எஸ்.ஜெயந்தி சேகர் தலைமை வகித்தார். பள்ளி அறங்காவலர் கே.வெங்கடாசலம் முன்னிலை வகித்தார். காவல் உதவி ஆய்வாளர் மகுடீஸ்வரன் தேசியக் கொடி ஏற்றி வைத்து அணிவகுப்பு மரியாதை ஏற்றார். தலைமை காவலர் யேசுநேசன் மாணவர்களுக்கு இனிப்பு வழங்கினார்.  இதையடுத்து விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று பரிசுகள் வழங்கப்பட்டன. இதையடுத்து மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.
 

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments