வெள்ள பாதிப்பு: கேரளத்துக்கு திருப்பூரில் இருந்து ரூ. 50 லட்சம் மதிப்பில் நிவாரணப் பொருள்கள்
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் ரூ. 50 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருள்கள் ஞாயிற்றுக்கிழமை அனுப்பிவைக்கப்பட்டன.
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் ரூ. 50 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருள்கள் ஞாயிற்றுக்கிழமை அனுப்பிவைக்கப்பட்டன.
திருப்பூர், பல்லடம் சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் இருந்து நிவாரணப் பொருள்களை அனுப்பிவைக்கும் நிகழ்வுக்கு மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி தலைமை வகித்தார். கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் நிவாரணப் பொருள்களை வழியனுப்பி வைத்தார்.
அரிசி, குடிநீர் பாட்டில்கள், துவரம் பருப்பு, துணிகள், பற்பசை, போர்வைகள், சானிட்டரி நாப்கின்கள், பிஸ்கட்டுகள், பாக்குமட்டையிலான தட்டுகள், காங்கயம் தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் ரூ. 5 லட்சம் மதிப்பிலான தேங்காய் எண்ணெய் பாக்கெட்டுகள், கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் கேரளத்தில் உள்ள கால்நடைகளுக்கு முதல்கட்டமாக ரூ.10 லட்சம் மதிப்பிலான தடுப்பூசிகள், தீவனம், சத்து மருந்துகள் உள்ளிட்டவை அனுப்பிவைக்கப்பட்டன.
மேலும், திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் ரூ. ஒரு கோடி மதிப்பிலான நிவாரணப் பொருள்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு தற்போது ரூ. 50 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருள்கள் அனுப்பப்பட்டுள்ளன.
நிவாரணப் பொருள்களை அனுப்பிவைக்கும் நிகழ்வில் முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன், சட்டப் பேரவை உறுப்பினர்கள் சு.குணசேகரன்(திருப்பூர் தெற்கு) ஏ. நடராஜன்(பல்லடம்), மாவட்ட வருவாய் அலுவலர் ச.பிரசன்ன ராமசாமி, சார் ஆட்சியர் ஷ்ரவண்குமார், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் ரமேஷ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.