FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

திருப்பூரில் ஏ.டி.எம். இயந்திரத்தில் பண மோசடி செய்தவர் கைது

ஏ.டி.எம். மையத்துக்கு பணம் எடுக்க வருபவர்களுக்கு உதவி செய்வதுபோல் நடித்து அவர்களின் ரகசிய எண்ணைப் பயன்படுத்தி

30 ஜனவரி 2024, 10:15 pm IST
பகிர்:

ஏ.டி.எம். மையத்துக்கு பணம் எடுக்க வருபவர்களுக்கு உதவி செய்வதுபோல் நடித்து அவர்களின் ரகசிய எண்ணைப் பயன்படுத்தி பண மோசடி செய்தவரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
திருப்பூர், தாராபுரம் சாலை கார்த்திக் நகர் பகுதியைச் சேர்ந்தவர் பூபதி மனைவி ராணி (32). பனியன் நிறுவன தொழிலாளி. இவர் திருப்பூர், கோவில்வழி பகுதியில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுக்க கடந்த ஆகஸ்ட்  1 ஆம் தேதி சென்றுள்ளார்.  
அப்போது அவருக்கு ஏ.டி.எம் இயந்திரத்தைப் பயன்படுத்தத் தெரியாததால்  அருகில் நின்று கொண்டிருந்த 30 வயது மதிக்கத்தக்க இளைஞரிடம் ஏ.டி.எம். அட்டையைக் கொடுத்து ரகசிய குறியீட்டு எண்ணையும் கூறி பணம் எடுத்து தருமாறு கூறியுள்ளார். அந்த இளைஞர் ஏ.டி.எம். அட்டையை இயந்திரத்தில் செருகி  உங்களது வங்கிக் கணக்கில் பணம் இல்லை எனக் கூறியுள்ளார். இதையடுத்து ராணி வங்கிக்கு சென்று விசாரித்துள்ளார்.  
அப்போது அவருடைய வங்கிக் கணக்கில் இருந்து ரூ. 10 ஆயிரம் எடுத்து மோசடி செய்து இருப்பதும்,  ஏ.டி.எம். மையத்தில் இருந்து வீட்டுக்கு சென்ற பின்னர் அந்த தொகை எடுக்கப்பட்டிருந்ததும் தெரியவந்தது. 
இது தொடர்பாக வங்கி அதிகாரியிடம் ராணி புகார் தெரிவித்தார். இதையடுத்து வங்கி அதிகாரிகள் அந்த ஏ.டி.எம். மையத்துக்கு சென்று, ராணியிடம் ஏ.டி.எம். அட்டையை வாங்கிய நபரின் உருவத்தை ஏ.டி.எம். மையத்தில்  இருந்த கண்காணிப்பு கேமரா பதிவில் இருந்து தனியாகப் பதிவு செய்து கொண்டனர். 
   இதேபோல் கடந்த மாதம் 13 ஆம் தேதி இதே வங்கியில் கணக்கு வைத்துள்ள பாண்டீஸ்வரி (40) என்பவர் பணம் எடுக்க சொல்லி ஏ.டி.எம். அட்டையை அங்கிருந்த இளைஞரிடம் கொடுத்தபோது,  அவர் ஏ.டி.எம். இயந்திரத்தில் அட்டையை செருகிய பின்னர் கணக்கில் பணம் இல்லை என்று கூறியுள்ளார். இதையடுத்து பாண்டீஸ்வரி வங்கிக்குச் சென்று கேட்டபோது அவருடைய வங்கிக் கணக்கில் இருந்து ரூ. 5 ஆயிரம் எடுக்கப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து பாண்டீஸ்வரியிடம் ஏ.டி.எம். அட்டையை வாங்கிய இளைஞரின் உருவத்தை ஏ.டி.எம். மையத்தில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பார்த்தபோது,  ஏற்கெனவே ராணியை ஏமாற்றிய இளைஞரின் உருவமும், இந்த இளைஞரின் உருவமும் ஒரே மாதிரியாக இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து அந்த ஏ.டி.எம். மையத்துக்கு அந்த இளைஞர் மீண்டும் வரக்கூடும் என்று வங்கி அதிகாரிகள் கண்காணிப்பு கேமராவை கண்காணித்து வந்தனர். 
இந்நிலையில் புதன்கிழமை காலை 11 மணிக்கு கோவில்வழி பகுதியில் உள்ள ஏ.டி.எம்.மையத்தில் சந்தேகப்படும்படியாக  ஓர் இளைஞர் நீண்ட நேரமாக நிற்பதை கண்காணிப்பு கேமராவில் வங்கி அதிகாரிகள் பார்த்தனர். 
அவர் ஏற்கெனவே ஏ.டி.எம். அட்டையை வாங்கி அதன் மூலம் பணத்தைத் திருடிய இளைஞர்  என்பது தெரிந்தது. இதையடுத்து வங்கி அதிகாரிகள் அந்த இளைஞரை வங்கிக்குள் அழைத்துச் சென்று பேச்சுக்கொடுத்தவாறே  திருப்பூர் ஊரக போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அங்கு வந்த போலீஸார் அந்த இளைஞரை காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்தனர். 
விசாரணையில் அவர்,  திண்டுக்கல் மாவட்டம்,  கொடைக்கானல் வில்பட்டி பள்ளங்கி பகுதியைச் சேர்ந்த குணசேகரன் மகன் ஓம்பிரகாஷ் (32) என்பதும்,  திருப்பூர், முத்தணம்பாளையம் வாய்க்கால்மேடு பகுதியில் தங்கி இருந்து பனியன் நிறுவனத்தில் அவர் வேலை செய்து வருவதும் தெரியவந்தது. 
ஏ.டி.எம். இயந்திரத்தில் பணம் எடுக்க தெரியாதவர்களிடம் அவர்களுக்குப் பணம் எடுத்துக் கொடுப்பது போல் நடித்து, அவர்கள் சென்ற பிறகு அவர்கள் கூறிய ரகசிய எண்ணைப் பயன்படுத்தி பணத்தை திருடியதும் தெரியவந்தது.  ராணி,  பாண்டீஸ்வரி ஆகியோரை ஏமாற்றி பணம் திருடியது இவர்தான் என விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து ஓம்பிரகாஷை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments