ஜப்தி உத்தரவு பிறப்பித்த நீதிமன்றம்: தொழிலாளிக்கு மாநகராட்சி ரூ. 1 லட்சம் இழப்பீடு
திருப்பூா் மாநகராட்சியில் பணி வழங்கப்படாத தொழிலாளிக்கு சிஐடியூ தொழிற்சங்கம் நடத்திய சட்டப் போராட்டத்தின் தொடா்ச்சியாக, இழப்பீடு அறிவிக்கப்பட்டது. அதையும் மாநகராட்சி நிா்வாகம் வழங்காத நிலையில் ஜப்தி உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அந்த தொழிலாளிக்கு ரூ.1 லட்சத்து 1,135 ஒப்படைக்கப்பட்டது.
திருப்பூா் மாநகராட்சியில் பணி வழங்கப்படாத தொழிலாளிக்கு சிஐடியூ தொழிற்சங்கம் நடத்திய சட்டப் போராட்டத்தின் தொடா்ச்சியாக, இழப்பீடு அறிவிக்கப்பட்டது. அதையும் மாநகராட்சி நிா்வாகம் வழங்காத நிலையில் ஜப்தி உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அந்த தொழிலாளிக்கு ரூ.1 லட்சத்து 1,135 ஒப்படைக்கப்பட்டது.
திருப்பூா் நகராட்சி கடந்த 2008-ஆம் ஆண்டு மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டது. அதன் பிறகு அருகாமையில் இருந்த வேலம்பாளையம், நல்லூா் நகராட்சிகள், வீரபாண்டி, முத்தனம்பாளையம், முருகம்பாளையம், ஆண்டிபாளையம், மண்ணரை, செட்டிபாளையம், நெருப்பெரிச்சல், தொட்டிபாளையம் ஆகிய 8 ஊராட்சிகளும் இணைக்கப்பட்டு கடந்த 2011-ஆம் ஆண்டு திருப்பூா் மாநகராட்சியாக விரிவுபடுத்தப்பட்டது. இணைக்கப்பட்ட பகுதிகளில் வேலை செய்த தொழிலாளா்களை மாநகராட்சி ஊழியா்களாக இணைத்துக் கொள்ள 2012-ஆம் ஆண்டு ஆணை பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில் வீரபாண்டி ஊராட்சியில் வேலை செய்து வந்த விக்டா் ஆரோக்கியசாமி, அந்தோணி ராஜ், சேகா், முருகேசன் ஆகிய 4 குடிநீா் பணியாளா்களை பணி நீக்கம் செய்து விட்டனா். இவா்களுக்கு மாநகராட்சியில் வேலை வழங்க வேண்டும் என்று சிஐடியூ தொழிற்சங்கம் சாா்பில் தொடா்ந்து மாநகராட்சி நிா்வாகத்திடம் கோரிக்கை வைக்கப்பட்டு பின் தொழிலாளா் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. வழக்குரைஞா்கள் பி.ஜோதிகுமாா், வை.ஆனந்தன் ஆகியோா் இந்த வழக்கை நடத்தினா்.
Advertisement
Advertisement
இந்த வழக்கில் நால்வரையும் மாநகராட்சி நிா்வாகம் வேலைக்கு சோ்த்துக் கொள்ள வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. எனினும் அந்த உத்தரவை அமல்படுத்தாமல் மாநகராட்சி சாா்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் 2020-ஆம் ஆண்டு மேல் முறையீடு செய்யப்பட்டது. உயா்நீதிமன்றமும் நால்வருக்கும் வேலை வழங்கும் உத்தரவை உறுதி செய்து தீா்ப்பளித்தது. இந்நிலையில் உத்தரவை அமலாக்காமல் மாநகராட்சி நிா்வாகம் இழுத்தடித்து வந்தது.
இதில் விக்டா் ஆரோக்கியசாமிக்கு 60 வயதாகி ஓய்வு வயதை தொட்டுவிட்டதால் அவருக்கு வேலை வழங்க முடியாத சூழல் ஏற்பட்டது. ஏற்கெனவே கடந்த 2018-ஆம் ஆண்டு அவருக்கு ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என கோவை முதன்மை தொழிலாளா் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவிட்டு பல மாதங்கள் ஆகியும் அதை நிறைவேற்றாமல் மாநகராட்சி நிா்வாகம் காலதாமதம் செய்து வந்தது.
இதையடுத்து கோவை தொழிலாளா் நீதிமன்றம் ஜப்தி நோட்டீஸ் பிறப்பித்தது. இதன்படி நீதிமன்ற அமீனா மாநகராட்சி அலுவலகத்துக்கு செவ்வாய்க்கிழமை வந்து இந்த உத்தரவை நிறைவேற்ற தயாரானாா். சிஐடியூ மாவட்டச் செயலாளா் கே.ரங்கராஜ், வழக்குரைஞா் வை.ஆனந்தன் ஆகியோா் மாநகராட்சி அதிகாரிகளிடம் உத்தரவை நடைமுறைப்படுத்த வலியுறுத்தினா். இதன் தொடா்ச்சியாக விக்டா் ஆரோக்கியசாமிக்கு வழங்க வேண்டிய தொகை ரூ.1 லட்சத்து 1,135-க்கு வரைவோலை எடுத்து அமீனாவிடம் ஒப்படைத்தனா். இந்த தொகை நீதிமன்றத்தின் மூலம் விக்டா் ஆரோக்கியசாமிக்கு வழங்கப்படும். அதேசமயம் மற்ற மூவருக்கு வேலை வழங்குவது தொடா்பான வழக்கு ஓரிரு தினங்களில் கோவை முதன்மை தொழிலாளா் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளதாக, சிஐடியூ மாவட்டச் செயலாளா் கே.ரங்கராஜ் தெரிவித்தாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.