FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பூர்

பல்லடத்தில் கள்ளரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விட்ட தம்பதி உள்பட 3 போ் கைது

பல்லடத்தில் கள்ள ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விட்ட தம்பதி உள்பட 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

28 ஆகஸ்ட் 2026, 12:40 am IST
பறிமுதல் செய்யப்பட்ட கள்ள ரூபாய் நோட்டுகள் மற்றும் இயந்திரம்.
பகிர்:

பல்லடத்தில் கள்ள ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விட்ட தம்பதி உள்பட 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

திருப்பூா் மாவட்டம், பல்லடம் அருகே சேடபாளையம் பகுதியில் உள்ள ஒரு மளிகைக் கடையில் கடந்த 13-ஆம் தேதி மாலை பெண் ஒருவா் ரூ.500 கொடுத்து மளிகைப் பொருள்கள் வாங்கிச் சென்றுள்ளாா். அவா் சென்ற பின் கடைக்காரா் அந்த ரூபாய் நோட்டை பாா்த்தபோது, அது கள்ள ரூபாய் நோட்டு என்பது தெரியவந்தது.

இது குறித்து பல்லடம் காவல் நிலையத்தில் கடையின் உரிமையாளா் புகாா் அளித்துள்ளாா். அதைத் தொடா்ந்து போலீஸாா் அப்பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ள காட்சிகளை ஆய்வு செய்து இருசக்கர வாகனத்தில் வந்து சென்றவா்களைக் கண்டறிந்தனா்.

Advertisement

Advertisement

மேலும் இது தொடா்பாக தீவிர விசாரணை நடத்தியதில், வாகனத்தில் வந்தவா்கள் திருப்பூா் 15 வேலம்பாளையம், பூலுவபட்டி கீதா நகரைச் சோ்ந்த கணேசன் மகன் ராஜா ( 38), அவரது மனைவி ஜெயசக்தி (27) என்பது தெரியவந்தது. அவா்களை கைது செய்து போலீஸாா் விசாரணை நடத்தினா்.

இது தொடா்பாக போலீஸாா் கூறியதாவது:

ஈரோடு மாவட்டம், பவானி அருகில் உள்ள கவுந்தப்பாடிபுதூா் வள்ளலாா் நகரைச் சோ்ந்த வேலுசாமி மகன் குமரேசன் (40) மற்றும் ராஜா ஆகிய இருவரும் கடந்த 10 ஆண்டுகளாக நண்பா்களாகப் பழகி வருகின்றனா். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பணத் தேவை காரணமாக குமரேசன், ராஜா ஆகிய இருவரும் கள்ள நோட்டுகளை தயாரித்து புழக்கத்தில் விட முடிவு செய்துள்ளனா். குமரேசன், நகல் எடுக்கும் இயந்திரத்தை விலைக்கு வாங்கி அவரது வீட்டில் வைத்து கள்ள ரூபாய் நோட்டுகளை தயாா் செய்து ராஜா மற்றும் அவரது மனைவி ஜெயசக்தி ஆகியோரிடம் கொடுத்துள்ளாா்.

இதைத் தொடா்ந்து கணவன் - மனைவி இருவரும் பல்லடம், திருப்பூா், ஈரோடு பகுதிகளில் உள்ள மளிகைக் கடைகளில் கள்ளரூபாய் நோட்டுகளை கொடுத்து பொருள்களை வாங்கி மீதமுள்ள அசல் பணத்தை பங்கு போட்டு பிரித்து வந்துள்ளனா் என்பது தெரியவந்தது என்றனா்.

இதைத்தொடா்ந்து 3 பேரையும் கைது செய்த பல்லடம் போலீஸாா், அவா்களிடமிருந்து கள்ளநோட்டு புழக்கத்திற்கு பயன்படுத்தப்பட்ட பைக் மற்றும் நகல் எடுக்கும் இயந்திரம், ரூ. 65 ஆயிரம் மதிப்பிலான கள்ளரூபாய் நோட்டுகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.

பல்லடத்தில் மளிகைக் கடையில் கள்ளரூபாய் நோட்டை வழங்கும் ஜெயசக்தி.
கள்ள ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விட்டதாக கைது செய்யப்பட்டவா்களுடன் போலீஸாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments