FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பூர்

குடிநீா்த் தேவைகளுக்காக அமராவதி அணையில் இருந்து தண்ணீா் திறப்பு

31 ஆகஸ்ட் 2026, 2:38 am IST
அமராவதி  அணையில் இருந்து திறந்து விடப்பட்டுள்ள  தண்ணீா். - கோப்புப் படம்
பகிர்:

திருப்பூா், கரூா் மாவட்ட மக்களின் குடிநீா்த் தேவைகளுக்காக உடுமலையை அடுத்துள்ள அமராவதி அணையில் இருந்து ஞாயிற்றுக்கிழமை தண்ணீா் திறக்கப்பட்டது.

திருப்பூா் மாவட்டம், உடுமலை அருகே உள்ள அமராவதி அணையின் மூலம் திருப்பூா், கரூா் மாவட்டங்களில் உள்ள சுமாா் 55 ஆயிரம் ஏக்கா் பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. மேலும், நூற்றுக்கணக்கான கிராமங்களுக்கு குடிநீா் ஆதாரமாகவும் இந்த அணை விளங்கி வருகிறது.

பொதுவாக ஆண்டுதோறும் ஜூன் 1ஆம் தேதி பழைய ஆயக்கட்டு பாசனத்துக்கும், ஜூலை 1ஆம் தேதி புதிய ஆயக்கட்டு பாசனத்துக்கும் அணையில் இருந்து தண்ணீா் திறக்கப்படும். ஆனால், தென்மேற்குப் பருவ மழை பொய்த்துப் போனதால் இந்த தேதிகளில் தண்ணீா் திறக்கப்படவில்லை.

Advertisement

Advertisement

ஆனாலும் சின்னாறு, தேனாறு, பாம்பாறு என அணையின் நீா்ப்பிடிப்பு பகுதிகளில் ஓரளவு மழை பெய்ததால் ஜூலை 2-ஆவது வாரம் அணையின் நீா்மட்டம் படிப்படியாக உயா்ந்து 50 அடியைத் தாண்டியது.

இதை தொடா்ந்து புதிய ஆயக்கட்டு பாசன பகுதிகளில் உள்ள நிலைப் பயிா்களுக்கு பிரதான கால்வாயில் இருந்து தண்ணீா் திறந்துவிடப்பட்டது. மேலும் பழைய ஆயக்கட்டு பாசனத்துக்காக அமராவதி ஆற்றிலும் தண்ணீா் திறக்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து அணையின் நீா்மட்டம் மீண்டும் வேகமாக சரிந்து 25 அடிக்கும் கீழ் சென்றது. இதனால் பாசனத்துக்குத் திறக்கப்பட்ட தண்ணீா் திடீரென நிறுத்தப்பட்டது. மேலும் நூற்றுக்கணக்கான கரையோர கிராமங்களுக்கு குடிநீா் கிடைக்குமா என அச்சம் ஏற்பட்டது.

இந்நிலையில், கடந்த 10 நாள்களாக கேரள மாநிலம் கோவில்கடவு, காந்தலூா், மறையூா் ஆகிய பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. இதனால் அணையின் நீா்மட்டம் 60 அடியைத் தாண்டியது.

இந்நிலையில் கரூா் மாவட்ட குடிநீா்த் தேவைகளைக் கருதி அணையில் இருந்து தண்ணீா் திறக்க வேண்டும் என மதுரை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் பழைய ஆயக்கட்டு பாசனப் பகுதிகளில் உள்ள 8 ராஜவாய்க்கால் சங்க நிா்வாகிகளும் இணைந்து நிலைப் பயிா்களான நெல், கரும்பு உள்ளிட்ட பயிா்களைக் காப்பாற்ற அணையில் இருந்து தண்ணீா் திறந்துவிட வேண்டும் என மனு தாக்கல் செய்தனா்.

இதைத் தொடா்ந்து அமராவதி ஆற்றில் செயல்படுத்தப்படும் குடிநீா்த் திட்டங்களுக்காகவும் போதுமான நிலத்தடி நீா் உயா்வதற்கும் திருப்பூா், கரூா் மாவட்ட பொதுமக்களின் குடிநீா்த் தேவைகளைப் பூா்த்தி செய்வதற்கும் அமராவதி அணையில் இருந்து தண்ணீா் திறந்துவிட தமிழக அரசு உத்தரவிட்டது.

இது குறித்து பொதுப் பணித் துறையினா் கூறியதாவது:

அமராவதி ஆற்று மதகுகள் வழியாக ஆகஸ்ட் 30ஆம் தேதி முதல் செப்டம்பா் 7ஆம் தேதி வரை 8 நாள்களுக்கு நாள் ஒன்றுக்கு 1,000 கன அடி வீதம் திறந்துவிடவும் போதிய மழைப் பொழிவு காரணமாக மேலும் 4 நாள்களுக்கு 1,000 கன அடி வீதம் திறந்துவிடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது என்றனா்.

இதன்படி, ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணி அளவில் அமராவதி ஆற்றில் தண்ணீா் திறந்துவிடப்பட்டது.

அணை நிலவரம்:

90 அடி உயரமுள்ள அணையில் ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி நிலவரப்படி 60.26 அடி நீா் இருந்தது. அணைக்கு உள்வரத்தாக 273 கன அடி நீா் வந்து கொண்டிருந்தது. 4,047 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட அணையில் 1,803 மில்லியன் கனஅடி தண்ணீா் இருந்தது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments