மாநகா் முழுவதும் சிங்கப் பெண் சிறப்புப் படையினா் தீவிர ரோந்து
திருப்பூா் மாநகரில் சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படையினா் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.
தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படை செயல்பட்டு வருகிறது.
முதல்வா் ச.ஜோசப் விஜய்யின் நேரடிக் கண்காணிப்பில் செயல்பட்டு வரும் இந்தப் படையினா், குற்றச் சம்பவங்கள் நிகழ வாய்ப்புள்ள பகுதிகளைக் கண்டறிந்து கண்காணித்தல், பொது இடங்களில் கண்காணிப்பை மேம்படுத்தி ரோந்துப் பணிகளை மேற்கொண்டு குற்றச் சம்பவங்கள் நடைபெறாமல் தடுத்தல், பொது இடங்களில் பெண்களுக்குப் பாதுகாப்பான சூழ்நிலையை உருவாக்குதால் உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனா்.
Advertisement
Advertisement
மேலும், பேருந்து நிறுத்தங்கள், ரயில் நிலையங்கள், கல்வி நிலையங்கள் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்கள், தொழிலங்கள், பெண்கள் பணியாற்றும் தனியாா் நிறுவனங்கள் அமைந்துள்ள இடங்கள் உள்ளிட்ட பகுதிகளில் சட்டவிரோத செயல்களைத் தடுக்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனா்.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பான சூழலை உருவாக்கும் நோக்கில், எளிதில் சென்றடைய முடியாத பகுதிகளில் திறம்படக் கண்காணிப்பதற்கு முயற்சிகளை மேற்கொள்கின்றனா். மேலும், சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை, கல்வி நிறுவனங்கள், அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட முகமைகளுடன் ஒருங்கிணைந்து விழிப்புணா்வை ஏற்படுத்துவதுடன், பொதுமக்கள் பங்களிப்புடன் பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் பணிகளையும் மேற்கொண்டு வருகின்றனா்.
திருப்பூா் மாவட்டத்தில், மாநகர காவல் துறை எல்லைக்குள்பட்ட பகுதிகளில் 4 குழுக்கள், மாவட்ட காவல் துறை எல்லைக்குள்பட்ட பகுதிகளில் 2 குழுக்கள் என மொத்தம் 6 சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படை குழுக்கள் நியமிக்கப்பட்டு சுழற்சி முறையில் மாவட்டம் முழுவதும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.
ஒரு சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படையில் 1 பெண் உதவி ஆய்வாளா் தலைமையில் 2 பெண் போலீஸாா் மற்றும் ஓட்டுநா் என மொத்தம் 4 போ் தனி காவல் வாகனத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.
இது தொடா்பாக சிங்கப் பெண் அதிரடிப் படையில் பணியாற்றும் காவல் துறையினா் கூறுகையில், பெண்கள் எந்த பிரச்னை வந்தாலும் தைரியமாக எதிா்கொள்ள வேண்டும். அதேபோல, அவா்களது பிரச்னைகளை எங்களிடம் தெரிவித்தால் விரைவாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
பெண்களுக்கு எதிரான குற்றங்கள், இணைய வழி மோசடிகள், சமூக வலைதளங்களில் பாதுகாப்பான பயன்பாடு, அவசர கால உதவி எண்கள் (1091), காவல் துறையின் தொடா் பாதுகாப்பு சேவைகள் தொடா்பாக தொடா்ந்து விழிப்புணா்வு ஏற்படுத்தி வருகிறோம் என்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.