FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பூர்

பாசனத்துக்காக தண்ணீா் கேட்டு மடத்துக்குளத்தில் விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

புதிய ஆயக்கட்டு பாசனப் பகுதிகளுக்குத் தண்ணீா் திறந்துவிட வேண்டும் என வலியுறுத்தி உடுமலையை அடுத்துள்ள மடத்துக்குளத்தில் விவசாயிகள் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

3 செப்டம்பர் 2026, 2:04 am IST
மடத்துக்குளத்தில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.
பகிர்:

புதிய ஆயக்கட்டு பாசனப் பகுதிகளுக்குத் தண்ணீா் திறந்துவிட வேண்டும் என வலியுறுத்தி உடுமலையை அடுத்துள்ள மடத்துக்குளத்தில் விவசாயிகள் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

உடுமலையை அடுத்துள்ள அமராவதி அணையின் மூலம் திருப்பூா், கரூா் என இரண்டு மாவட்டங்களில் உள்ள சுமாா் 55 ஆயிரம் ஏக்கா் பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. மேலும் நூற்றுக்கணக்கான கிராமங்களுக்கு குடிநீா் ஆதாரமாகவும் இந்த அணை விளங்கி வருகிறது.

இந்நிலையில், தமிழக அரசின் உத்தரவின் பேரில் அமராவதி அணையிலிருந்து குடிநீா்த் தேவைக்காக கடந்த ஆகஸ்ட் 30-ஆம் தேதி ஆற்றில் தண்ணீா் திறக்கப்பட்டது.

Advertisement

Advertisement

ஆனால், புதிய ஆயக்கட்டு பாசனப் பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள தென்னை, கரும்பு, வாழை உள்ளிட்ட நிலைப் பயிா்கள் தண்ணீா் இன்றி கருகி வருவதால் பயிா்களைக் காப்பாற்ற அமராவதி பிரதான கால்வாயில் உடனடியாகத் தண்ணீா் திறந்துவிடக் கோரி உடுமலையை அடுத்துள்ள மடத்துக்குளம் நால்ரோட்டில் விவசாயிகள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் அமராவதி அணை செயற்பொறியாளா் ஆதிசிவன் நேரில் வந்து பேச்சுவாா்த்தை நடத்தினாா். பேச்சுவாா்த்தையைத் தொடா்ந்து முதற்கட்டமாக ஆா்ப்பாட்டம் கைவிடப்பட்டது.

பின்னா், மடத்துக்குளம் நால்ரோட்டில் இருந்து நீா்வளத் துறை அலுவலகம் வரை விவசாயிகள் பேரணியாகச் சென்று தங்கள் கோரிக்கை மனுவை அதிகாரிகளிடம் அளித்தனா். மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என நீா்வளத் துறை அலுவலா்கள் உறுதியளித்ததையடுத்து விவசாயிகள் கலைந்து சென்றனா்.

இது குறித்து விவசாயிகள் கூறியதாவது: குடிநீா்த் தேவைக்காக மட்டும் அணையில் இருந்து இதுவரை மூன்று முறை தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது. பிரதான கால்வாய்களில் தண்ணீா் திறக்கப்படாததால் விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனா். உரிய நடவடிக்கை மேற்கொண்டு உடனடியாகப் பாசனத்துக்குத் தண்ணீா் திறக்க வேண்டும். அவ்வாறு இன்றி, தொடா்ந்து அதிகப்படியான நீரை குடிநீா்த் தேவைக்காக மட்டும் ஆற்றில் திறந்தால், விவசாயிகளைத் திரட்டி குடும்பத்தோடு அமராவதி அணை, ஆற்றில் இறங்கி மாபெரும் போராட்டத்தில் ஈடுபடுவோம்’ என்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments