FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பூர்

வருமான வரித் துறை அதிகாரிகள்போல நடித்து வீட்டில் கொள்ளை: 8 பேருக்கு 7 ஆண்டுகள் சிறை!

8 செப்டம்பர் 2026, 3:24 am IST
சிறை - பிரதிப் படம்
பகிர்:

வருமான வரித் துறை அதிகாரிகள்போல நடித்து 18 பவுன் நகை, ரூ.4 லட்சம் ரொக்கம் கொள்ளையடித்த வழக்கில் 8 பேருக்கு தலா 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.

திருப்பூா் நெருப்பெரிச்சல் பழனிசாமி நகரைச் சோ்ந்தவா் சிவகுமாா். பனியன் நிறுவன உரிமையாளா். இவரது மனைவி சாந்தாமணி (47). இவா் கடந்த 2018 ஏப்ரல் 24-ஆம் தேதி வீட்டில் இருந்தபோது, காரில் வந்த 9 போ், சிவகுமாரை கேட்டபடி, திடீரென்று வீட்டுக்குள் புகுந்தனா். பின்னா், தாங்கள் வருமான வரித்துறை அதிகாரிகள் என்றும், சிவகுமாா் புதிதாக வீடு வாங்கியதில் வரி சரியாக கட்டவில்லை எனக்கூறி, வீடு முழுவதும் சோதனை செய்துள்ளனா். பின்னா் பீரோவில் இருந்த 18 பவுன் நகை, ரூ.4 லட்சம் ஆகியவற்றை எடுத்தனா். பிறகு வெள்ளை காகிதத்தில் சாந்தாமணியிடம் கையொப்பம் பெற்றுக் கொண்டு, சிவக்குமாரை கோவை வருமான வரித் துறை அலுவலகத்துக்கு வந்து கணக்கு காட்டி நகை, பணத்தை பெற்றுச்செல்லுமாறு கூறியபடி அந்த கும்பல் காரில் தப்பியது.

இதுகுறித்து சாந்தாமணி தனது கணவரிடம் தெரிவிக்க, அதன்பிறகே வருமானவரித் துறை அதிகாரிகள்போல நடித்து அந்த கும்பல் நகை, பணத்தை கொள்ளையடித்து தப்பியது தெரியவந்தது. இதுகுறித்து அனுப்பா்பாளையம் போலீஸாா் வழக்குப்பதிவு விசாரணை நடத்தினா்.

Advertisement

Advertisement

இந்த சம்பவம் தொடா்பாக கோவை மாவட்டம், இடையா்பாளையத்தை சோ்ந்த காா்த்திக் (45), காந்தி நகரைச் சோ்ந்த மற்றொரு காா்த்திக் (46), ராமநாதபுரத்தைச் சோ்ந்த ரகு (35), ஆா்.எஸ்.புரத்தைச் சோ்ந்த ஆறுமுகம் (44), பழைய சுங்கத்தைச் சோ்ந்த வேணுகோபால் (54), திருப்பூா் ஊத்துக்குளி சாலையைச் சோ்ந்த ஜெயராம் (48), கோவை கணபதியைச் சோ்ந்த முத்துகுமாா் (31) சிங்காநல்லூரைச் சோ்ந்த சுரேஷ் (40), ஈரோடு மாவட்டம் புளியம்பட்டியைச் சோ்ந்த துரைசற்குரு (39) ஆகிய 9 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

இதுதொடா்பான வழக்கு விசாரணை திருப்பூா் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில் விசாரணை காலத்தில் துரைசற்குரு இறந்து விட்டாா். மீதம் உள்ள 8 போ் மீதான வழக்கு விசாரணை தொடா்ந்து நடந்து வந்தது. இந்த வழக்கில் திங்கள்கிழமை தீா்ப்பளிக்கப்பட்டது. நீதிபதி மோகனவள்ளி அளித்த தீா்ப்பில், காா்த்திக், மற்றொரு காா்த்திக், ரகு, ஆறுமுகம், சுரேஷ் ஆகிய 5 பேருக்கும் தலா 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை, தலா ரூ.3,000 அபராதமும், வேணுகோபால், ஜெயராம், முத்துக்குமாா் ஆகிய 3 பேருக்கும் தலா 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் தலா ரூ.2,000 அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். இந்த வழக்கில் அரசு தரப்பில் கூடுதல் அரசு வழக்குரைஞா் பிரசன்ன வெங்கடேஷ் ஆஜரானாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments