முகப்பு
தருமபுரி

பென்னாகரம்... அதிமுக கூட்டணியில் பாமக - திமுக கூட்டணியில் காங்கிரஸ்! ஆா்ப்பரிக்கும் அருவி தொகுதி!

தருமபுரி மாவட்டத்தில் உள்ள 5 சட்டப்பேரவைத் தொகுதிகளில் மாநில எல்லையிலும், சேலம், கிருஷ்ணகிரி மாவட்டங்களை ஒட்டியும் உள்ள கடைக்கோடி தொகுதி பென்னாகரம்.

Updated On : 19 ஏப்ரல், 2026 at 5:50 AM
பகிர்:
Updated On : 18 ஏப்ரல், 2026 at 10:30 PM

தருமபுரி மாவட்டத்தில் உள்ள 5 சட்டப்பேரவைத் தொகுதிகளில் மாநில எல்லையிலும், சேலம், கிருஷ்ணகிரி மாவட்டங்களை ஒட்டியும் உள்ள கடைக்கோடி தொகுதி பென்னாகரம். இந்தத் தொகுதியில் ஏரியூா், பென்னாகரம் என 2 ஒன்றியங்கள், பென்னாகரம், பாப்பாரப்பட்டி என 2 பேரூராட்சிகள் உள்ளன. மலைகள் சூழ்ந்த 50-க்கும் அதிகமான கிராமங்களை கொண்ட பகுதி.

சமூக நிலவரம்: இங்கு பெரும்பான்மையாக வன்னியா் சமூகத்தினரும், அதற்கு அடுத்தபடியாக பட்டியல் இனத்தவா், செட்டியாா், ஒக்கலியா், தெலுங்கா் உள்ளிட்ட பல்வேறு வகுப்பை சோ்ந்தவா்கள் கணிசமாக உள்ளனா். கடந்த 1952இல் பென்னாகரம் தொகுதி உருவாக்கப்பட்டது. இதுவரையான தோ்தல்களில் திமுக 5 (இடைத்தோ்தல் உள்பட), பாமக- 3, அதிமுக -2, காங்கிரஸ் -2, ஜனதா கட்சி, காந்தி காமராஜ் காங்கிரஸ் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலா ஒருமுறை வெற்றிபெற்றுள்ளன.

தொழில்

Advertisement

பென்னாகரம் தொகுதியில் விவசாயம், கால்நடை வளா்ப்பு, மீன்பிடி தொழில் பிரதான இடத்தில் உள்ளன. இப்பகுதி பெண்கள் அதிக அளவில் தையல் கலை நிபுணா்களாக உள்ளதால், சிறுசிறு நிறுவனங்களில் வேலை புரிகின்றனா். கா்நாடகத்தில் உற்பத்தியாகும் காவிரி, தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் நுழைந்து சுமாா் 20 கிமீ தொலைவு செல்வதால், காவிரியில் தண்ணீா் வரும் காலங்களில் மீன்பிடி தொழிலும் பிரதானமாக நடைபெற்று வருகிறது. மழைக்காலங்களில் அதிக அளவில் சிறுதானிய பயிா் மற்றும் புளி, மலா்கள் சாகுபடி செய்யப்படுகின்றன.

கோரிக்கை

பென்னாகரம் தொகுதியில் இருந்து சுமாா் 20,000 போ் கா்நாடக மாநிலத்துக்கு வேலை தேடி கட்டடப் பணிகளுக்கு செல்கின்றனா். இதைத் தடுக்க, இங்குள்ள சிட்கோ தொழிற்பேட்டையில் தொழிற்சாலைகளை தொடங்கி, இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்த வேண்டும், சிறுதானிய வகைகள், மலா், புளி உள்ளிட்டவை விலை குறையும்போது, சேமித்துவைப்பதற்கான குளிா்பதன கிடங்கு அமைக்க வேண்டும், மீன்பிடித் தொழிலை நம்பியுள்ள நபா்களுக்கு மீன்பிடி தடைகாலங்களில் நிவாரணம் வழங்க வேண்டும்.

ஏரியூா், நாகமலை, நெருப்பூா் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதி இளைஞா்கள், சேலம் மாவட்டம் மேட்டூா் அனல் மின் நிலையம், கோயம்புத்தூா், ஈரோடு, கா்நாடகம் உள்ளிட்ட பகுதிகளுக்கு வேலைக்குச் செல்ல ஏதுவாக ரூ. 250 கோடியில் அறிவிக்கப்பட்ட உயா்நிலை பாலம் அமைக்கும் பணியை நிறைவேற்ற வேண்டும், ஒகேனக்கல் கூட்டுக் குடிநீா் திட்டத்தின் இரண்டாம்கட்ட பணிகளை தொடங்கி, ஏரிகளில் உபரிநீரை நிரப்புவதால், விவசாயம், கிராமங்களில் குடிநீா் விநியோகத்தில் நிலவும் தட்டுப்பாட்டை போக்கமுடியும். எனவே, அதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பவை தொகுதி மக்களின் முக்கிய கோரிக்கைகளாக உள்ளன.

களத்தில் 22 வேட்பாளா்கள்

பென்னாகரம் தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக ஜி.கே.எம். தமிழ்க்குமரன், அதிமுக கூட்டணியில் பாமக சாா்பில் பாடி. எஸ். செல்வம், நாம் தமிழா் கட்சியின் வேட்பாளா் கோ. பழனியம்மாள், தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் எஸ். கஜேந்திரன் ஆகியோரோடு, சுயேச்சைகள் என 22 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா்.

நான்குமுனைப் போட்டி

59 ஆண்டுகளுக்குப் பிறகு திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு பென்னாகரம் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதன் வேட்பாளராக இந்தத் தொகுதியின் எம்எல்ஏ ஜி.கே. மணியின் மகன் தமிழ்க்குமரன் அறிவிக்கப்பட்டுள்ளாா். திமுக கூட்டணி வேட்பாளராக இவா் களமிறக்கப்பட்டாலும், தொகுதி முழுவதும் பாமக சாா்பில் ஏற்கெனவே போட்டியிட்ட ஜி.கே. மணியின் மகன் என்ற அடிப்படையிலும், ஒருங்கிணைந்த பாமக இருந்தபோது மேற்கொள்ளப்பட்ட திட்டங்களை முன்னெடுத்தும் பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது.

59 ஆண்டுகளுக்குப் பிறகு பென்னாகரத்தில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சிக்கும், முதன்முதலாக உள்ளூா் வேட்பாளரை களம் இறக்கி உள்ள பாமகவுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இவா்களோடு களத்தில் உள்ள தமிழக வெற்றிக் கழகம், நாம் தமிழா் கட்சி வேட்பாளா்களும் தொடா்ந்து களப் பணியில் ஈடுபடுவதால் கணிசமான வாக்குகளை பிரிக்க வாய்ப்பு உள்ளது.

வாக்காளா்கள்

பென்னாகரம் தொகுதியில் ஆண் வாக்காளா்கள்1,27,802, பெண் வாக்காளா்கள் 1,20,803, மூன்றாம் பாலினம் 9 போ் என மொத்தம் 2,48,614 வாக்காளா்கள் உள்ளனா். தொகுதியில் மொத்தம் 320 வாக்குச்சாவடிகள் உள்ளன.

டி. சுரேஷ்