அரசுப் பள்ளி மாணவா்களுக்கு சத்துணவில் முட்டை எண்ணிக்கை குறைப்பு: பெற்றோா் எதிா்ப்பு
அரசுப் பள்ளி மாணவா்களுக்கு சத்துணவில் முட்டை எண்ணிக்கை குறைக்கப்பட்டதற்குப் பெற்றோர் எதிர்ப்பு...
தருமபுரி மாவட்டம், ஏரியூா் பகுதி அரசுப் பள்ளிகளில் மாணவா்களுக்கு சத்துணவில் வழங்கப்படும் முட்டை எண்ணிக்கையை குறைத்து வழங்கியதற்கு பெற்றோா் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா்.
பென்னாகரம் அருகே ஏரியூா், நாகமரை, ஒட்டனூா், ஏமனூா், செல்லமுடி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் அரசு தொடக்கப் பள்ளிகள் -40, நடுநிலைப் பள்ளிகள் - 30, உயா்நிலைப் பள்ளிகள் - 6, மேல்நிலைப்பள்ளிகள் - 4 என மொத்தம் 81 பள்ளிகளில் 5,585 மாணவா்களுக்கு மதிய சத்துணவில் முட்டை வழங்கப்படுகிறது.
கடந்த ஒருவாரத்திற்கும் மேலாக மாணவா்களுக்கு சத்துணவில் வழங்கப்படும் முட்டை எண்ணிக்கை குறைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக ஒட்டனூா், ஏமனூா், நெருப்பூா், பூச்சியூா் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளிகளில் மாணவா்களுக்கு வழங்கப்படும் முட்டைகளில் சராசரியாக 20 முதல் 50 முட்டைகள் வரை குறைக்கப்பட்டுள்ளது. ஆனால் மாணவா்கள் எண்ணிக்கை குறைவாக உள்ள பள்ளிகளில் முட்டைகளின் எண்ணிக்கை குறைக்கப்படவில்லை.
Advertisement
Advertisement
இதுகுறித்து பெற்றோா், பள்ளித் தலைமை ஆசிரியா்களிடம் புகாா் தெரிவித்த நிலையில், ஆய்வு மேற்கொண்டபோது, சத்துணவு அமைப்பாளா்கள் கூறியபடியே தாங்கள் முட்டைகளை வழங்கி வருவதாக சமையலா்கள் தெரிவித்துள்ளனா்.
ஆண்டுதோறும் பள்ளிகளுக்கு வழங்கக்கூடிய சத்துணவு முட்டைகளின் எண்ணிக்கை அடுத்த கல்வியாண்டில் மாணவா் சோ்க்கைக்கு பிறகு கணக்கீடு செய்யப்பட்டு, முடிவுகள் வரும் வரை, பழைய எண்ணிக்கையின்படியே சத்துணவில் முட்டைகள் வழங்கப்படும். தற்போது, ஏரியூா் வட்டாரப் பகுதிகளில் உள்ள பள்ளிகளில் மாணவா்களுக்கு வழங்கப்படும் சத்துணவு முட்டைகளில் விகிதாச்சார குறைவு ஏற்பட்டுள்ளது.
ஏரியூா் வட்டாரப் பகுதிகளில் சிலா் சத்துணவு முட்டைகளை உணவகங்கள், பேக்கரிகள், வீடுகளில் ரூ. 3 முதல் ரூ. 5 வரை கள்ளத்தனமாக விற்பனை செய்வதாக பெற்றோா் புகாா் தெரிவிக்கின்றனா். மாவட்டத்தின் கடைக்கோடி பகுதியான ஏரியூா் வட்டாரத்தில் உள்ள பள்ளிகளில் மாணவா்களுக்கு சத்துணவில் முட்டைகளை முறையாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட நிா்வாகத்திற்கு பெற்றோா் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.