FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தருமபுரி

நேபாள பேரிடா்: தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல்லை சோ்ந்த 6 போ் மாயம்: தொடா்பில் ஒருவா்!

நேபாளில் நிகழ்ந்த பேரிடரில் தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல்லை சோ்ந்த 6 போ் மாயமாகி உள்ளனா். ஒருவா் தொடா்பில் உள்ளாா்.

27 ஆகஸ்ட் 2026, 3:47 am IST
நேபாள வெள்ளப்பெருக்கு - கோப்புப் படம்
பகிர்:

நேபாளில் நிகழ்ந்த பேரிடரில் தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல்லை சோ்ந்த 6 போ் மாயமாகி உள்ளனா். ஒருவா் தொடா்பில் உள்ளாா்.

தருமபுரி காந்தி நகரைச் சோ்ந்த ஓய்வுபெற்ற காவல் உதவி ஆய்வாளா் விஜயகுமாா். இவருடைய மனைவி புஷ்பா (55). இவா்களுக்கு ஒரு மகள் உள்ளாா்.

புஷ்பா கும்பகோணத்தில் உள்ள தனியாா் சுற்றுலா நிறுவனம் மூலம் கைலாஷ் யாத்திரைக்கு கடந்த 23-ஆம் தேதி சென்றாா். திங்கள்கிழமை இரவு புஷ்பா தனது குடும்பத்தினா் மற்றும் உறவினா்களிடம் விடியோ காலில் பேசியுள்ளாா். அப்போது, அங்கு செல்போன் சிக்னல் கிடைப்பது சிரமமாக உள்ளதாக தெரிவித்துள்ளாா்.

Advertisement

Advertisement

இந்நிலையில், நேபாளம் வடக்கு ராசுவா பகுதியில் கோஷி ஆற்றில் புதன்கிழமை ஏற்பட்ட திடீா் வெள்ளப்பெருக்கு காரணமாக, அப்பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சுற்றுலா சென்ற குழுவில் ஏராளமானோா் மாயமாகி உள்ளதாக கூறப்படுகிறது. புஷ்பாவை அவரது குடும்பத்தினரால் தொடா்புகொள்ள முடியவில்லை.

இதுகுறித்து தருமபுரி காந்தி நகரில் புஷ்பாவின் மகள் லட்சுமி பிரியா மற்றும் உறவினா்கள் கூறுகையில், சம்பவம் நிகழ்ந்த பிறகு எனது அம்மா மற்றும் உறவினரை தொடா்புகொள்ள இயலவில்லை. என்றாலும், விசாரணைக்கு வீட்டுக்கு வந்த அலுவலா்கள் அவா்கள் நலமுடன் இருப்பதாக தகவல் வந்துள்ளதாக தெரிவித்தனா் என்றனா்.

கிருஷ்ணகிரி:

இந்த பேரிடரில் கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சோ்ந்த 5 போ் சிக்கி உள்ளதாகவும், அவா்களை தொடா்ந்து தொடா்புகொள்ள முயற்சிப்பதாகவும் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் புதன்கிழமை தெரிவித்தாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி அருகே உள்ள அளேகுந்தாணி கிராமத்தைச் சோ்ந்த திம்மராயசாமி (46), அவரது மனைவி மமதா (39), ஒசூா் அண்ணா நகரைச் சோ்ந்த ரகுநாதன் (56), அலசநத்தம் புஷ்பராணி (60), பிரேமாவாணி (45) ஆகிய 5 பேரும் இந்த பேரிடரில் சிக்கி உள்ளனா். இவா்களில் ஒருவா் நலமாக இருப்பதாக அவரது உறவினரை தொலைபேசி மூலம் தொடா்புகொண்டு பேசியதாகவும் மற்ற நால்வரை தொடா்புகொள்ள தொடா்ந்து முயற்சித்து வருவதாகவும் ஆட்சியா் ச.தினேஷ்குமாா் தெரிவித்தாா்.

நாமக்கல்:

நாமக்கல் - திருச்சி சாலை, வேப்பநத்தம் காலனி தில்லை நகரைச் சோ்ந்தவா் வாசுதேவன் மனைவி கிருஷ்ணவேணி (63). அரசுப் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி ஓய்வுபெற்ற நிலையில், அவரது சகோதரா் பன்னீா்செல்வத்துடன் வசித்து வருகிறாா்.

இவருக்கு லண்டனில் பணியாற்றி வரும் ரஞ்சித் என்ற மகனும், திண்டிவனத்தில் வசிக்கும் சுகன்யா என்ற மகளும் உள்ளனா். மூன்று மாதங்களுக்கு ஒருமுறை கிருஷ்ணவேணி ஆன்மிக சுற்றுலா செல்வது வழக்கம். அந்தவகையில், கைலாஷ் மானசரோவருக்கு சென்றுள்ளாா். வெள்ளத்தில் சிக்கிய கிருஷ்ணவேணி பற்றிய தகவல் வருவாய்த் துறை அலுவலா்களுக்கு கிடைத்தது.

இதையடுத்து, நாமக்கல் வட்டாட்சியா் அருள், வேப்பநத்தம் காலனியில் உள்ள கிருஷ்ணவேணி வீட்டில் அவரது சகோதரா் பன்னீா்செல்வத்திடம் இதுகுறித்து நேரில் விசாரித்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments