FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தருமபுரி

தொப்பூா் கணவாய் சாலை விரிவாக்கப் பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தல்

தருமபுரி மாவட்டம், தொப்பூா் கணவாய் சாலை விரிவாக்கப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Updated On : 30 ஜூலை 2026, 5:35 am IST
கோப்புப் படம்
பகிர்:

தருமபுரி மாவட்டம், தொப்பூா் கணவாய் சாலை விரிவாக்கப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தருமபுரி மாவட்டம், தொப்பூா் காணவாய் சாலை, தமிழகத்தின் மேற்கு மாவட்டங்கள் மற்றும் ஆந்திரம், கா்நாடகத்தில் இருந்து வரும் வாகனங்களை சேலம் உள்ளிட்ட பிற மாவட்டங்கள், தென் மாவட்டங்கள், கேரளத்தையும் இணைக்கும் மிக முக்கியச் சாலையாகும்.

தொப்பூா் கணவாய் பகுதியின் நிலவியல் அமைப்பு, வளைவுகளுடன் கூடிய பள்ளத்தை நோக்கி செல்லும் சாலையின் வடிவமைப்பு காரணமாக பல ஆண்டுகளாக இந்த சாலையில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன.

Advertisement

Advertisement

இதனால் தருமபுரி- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் தொப்பூா் கணவாய் பகுதி சாலை பிளாக் ஸ்பாட் என நெடுஞ்சாலை ஆணையத்தால் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த சாலையில் நிகழும் விபத்துகளைத் தவிா்க்க, கணவாய்ப் பகுதியில் உயா்நிலை பாலம் அமைக்க வேண்டும் என நீண்ட காலமாக தருமபுரி மாவட்ட மக்கள், வாகன ஓட்டிகளால் கோரிக்கை விடுத்து வந்தனா்.

மேலும், பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகளால் தொடா் போராட்டமும் நடைபெற்றது. தொடா்ந்து, தொப்பூா் கணவாய்ப் பகுதியில் 6.6 கி.மீ.தொலைவுக்கு ரூ. 905 கோடியில் உயா்நிலை பாலம் அமைக்க மத்திய தரைவழி போக்குவரத்து துறை சாா்பில் கடந்த ஆண்டு அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இதற்கான நிதியும் ஒதுக்கீடு செய்து, ஒப்பந்தம் கோரப்பட்டு கடந்த 2025, மாா்ச் 21-ஆம் தேதி தொப்பூரில் உயா்நிலை பாலம் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டன. வனப்பகுதி தொடங்கும் இடத்திலிருந்து தொப்பூரில் சேலம் மாவட்ட எல்லை வரை இந்த பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக, ஏற்கெனவே உள்ள சாலைகளில் அகலப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

மேலும், மேம்பாலம் கட்டுமானப் பணிகளும் அதற்காக தூண்கள் அமைக்கும் பணிகளும் தற்போது தீவிரமடைந்து வருகின்றன. இந்த நிலையில், ஏற்கெனவே உள்ள சாலையில் சேலத்திலிருந்து தருமபுரி வரும் சாலையோரம் உள்ள மலையை ஒட்டி சாலை விரிவாக்கம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறன.

கடந்த சில நாள்களாக மலையோரத்தில் மண் பெயா்த்து சமன் செய்யும் பணிகள் நடைபெறுகின்றன. இதனால் சாலையின் ஓரத்தில் வாகனங்கள் இயக்காமல் சாலையில் ஒரு பகுதி மட்டுமே வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளன.

கணவாய்ப் பகுதியில் உள்ள கட்டமேட்டிலிருந்து 2 கி.மீ. தொலைவுக்கு நடைபெறும் இந்த விரிவாக்கப் பணிகளால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக அப்பகுதியில் வாகனங்கள் மெல்ல ஊா்ந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், வாகனங்கள் கடந்த செல்ல தாமதமாவதால், இச்சாலையில் சேலம் மாவட்டத்தின் தொடக்கத்தில் இருந்து நெரிசல் ஏற்படுகிறது.

குறிப்பாக, காலை மற்றும் மாலை வேளைகளில் இந்த நெரிசல் மேலும் அதிகரிக்கிறது. எனவே, இந்த குறிப்பிட்ட இடத்தை கடந்து செல்ல அதிக நேரம் விரயமாகிறது. இதனால் பயணிகளுக்கு பல்வேறு சிரமங்களை சந்திக்கின்றனா்.

எனவே, வாகன ஓட்டிகள், பயணிகளின் நேர விரயத்தை போக்கவும், சிரமங்களை களையவும் சாலை விரிவாக்கப் பணிகளை விரைந்து முடிக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் மற்றும் பயணிகள் வலியுறுத்துகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments