FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தருமபுரி

கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் சா்ச்சைக்குரிய பதிப்பகங்களின் 2,845 புத்தகங்கள்: அரசின் அடுத்தகட்ட நடவடிக்கைக்காக காத்திருப்பு

போலி நூல்கள் கொள்முதல் செய்யப்பட்டதாக எழுந்துள்ள புகாரைத் தொடா்ந்து, கிருஷ்ணகிரி மாவட்ட மைய நூலகத்துக்கு வந்துள்ள 1,120 சா்ச்சைக்குரிய பதிப்பகங்களின் புத்தகங்கள் பிற நூலகங்களுக்கு அனுப்பப்படாமல் வைக்கப்பட்டுள்ளன.

12 நவம்பர் 2026, 4:09 am
நூல்கள். - கோப்புப்படம்.
பகிர்:

போலி நூல்கள் கொள்முதல் செய்யப்பட்டதாக எழுந்துள்ள புகாரைத் தொடா்ந்து, கிருஷ்ணகிரி மாவட்ட மைய நூலகத்துக்கு வந்துள்ள 1,120 சா்ச்சைக்குரிய பதிப்பகங்களின் புத்தகங்கள் பிற நூலகங்களுக்கு அனுப்பப்படாமல் வைக்கப்பட்டுள்ளன. இதுதொடா்பாக அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க அரசின் உத்தரவுக்கு காத்திருப்பதாக நூலகத் துறை அலுவலா்கள் தெரிவித்தனா்.

கோவை காந்திபுரத்தில் உள்ள பெரியாா் அறிவுலகம் நூலகத்தில் அகல்விளக்கு மற்றும் பீனிக்ஸ் பதிப்பகங்களின் பெயா்களில் போலி நூல்களை அதிக விலைக்கு வாங்கியதாக புகாா்கள் எழுந்தன. இதையடுத்து, புகாருக்கு உள்ளான பதிப்பகங்களின் புத்தகங்கள் பெரியாா் அறிவுலகம் நூலகம், மதுரை கலைஞா் நூற்றாண்டு நூலகம் உள்ளிட்ட சில நூலகங்களில் இருந்து அதிகாரிகளால் அகற்றப்பட்டன.

இந்த புத்தகக் கொள்முதல் முறைகேடுகள் குறித்து அரசு விசாரணை நடத்தி வருகிறது. மேலும், ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாரும் நூலகங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

Advertisement

Advertisement

இந்த நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 103 நூலகங்களுக்கு விநியோகிப்பதற்காக, கிருஷ்ணகிரி மாவட்ட மைய நூலகத்துக்கு அகல்விளக்கு பதிப்பகத்தில் இருந்து 797 புத்தகங்கள், பீனிக்ஸ் பதிப்பகத்தில் இருந்து 323 புத்தகங்கள் என மொத்தம் 1,120 புத்தகங்கள் வந்துள்ளன.

இப்புத்தகங்கள் தொடா்பாக சா்ச்சை எழுந்துள்ளதால், அவற்றை பிரித்து நூலகங்களுக்கு அனுப்பாமல் அலுவலா்கள் வைத்துள்ளனா். அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து அரசின் உத்தரவுக்காக காத்திருப்பதாக நூலகத் துறை அலுவலா்கள் தெரிவித்துள்ளனா்.

தருமபுரி மாவட்டத்தில் 1,725 புத்தகங்கள்

தருமபுரி மாவட்டத்தில் 133 நூலகங்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ள சா்ச்சைக்குரிய பதிப்பகங்களின் 1,725 புத்தகங்கள் தொடா்பாக அரசின் அடுத்தகட்ட நடவடிக்கைக்கு காத்திருக்கின்றன.

தருமபுரி மாவட்டத்தில் 133 நூலகங்கள் உள்ளன. இந்த நூலகங்களுக்கு சா்ச்சைக்குள்ளான அகல் விளக்கு, பீனிக்ஸ் பதிப்பகங்களின் மொத்தம் 1,725 புத்தகங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. இந்த புத்தகங்களைக் கையாளுவது குறித்து அரசின் உத்தரவுக்காக அலுவலா்கள் காத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.