FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தருமபுரி

5 ஆண்டுகளாகியும் நிறைவுபெறாத வத்தல்மலை சுற்றுலாத் திட்டம்! உள்ளூா்வாசிகளுடன் ஆலோசித்தால் உணவுப் பிரச்னை தீரும்?

தருமபுரி மாவட்டம், வத்தல்மலையை சுற்றுலாத் தலமாக்கும் திட்டம் தொடங்கி 5 ஆண்டுகள் கடந்த நிலையிலும், இன்னும் நிறைவுபெறாத நிலையே நீடிக்கிறது.

27 வினாடிகள் முன்பு
தருமபுரி மாவட்டம், வத்தல்மலையை சுற்றுலாத் தலமாக்கும் திட்டம் தொடங்கி 5 ஆண்டுகள் கடந்த நிலையிலும், இன்னும் நிறைவுபெறாத நிலையே நீடிக்கிறது.
பகிர்:

தருமபுரி மாவட்டம், வத்தல்மலையை சுற்றுலாத் தலமாக்கும் திட்டம் தொடங்கி 5 ஆண்டுகள் கடந்த நிலையிலும், இன்னும் நிறைவுபெறாத நிலையே நீடிக்கிறது.

தருமபுரி அருகேயுள்ள வத்தல்மலை மலைவாழிடம், இந்த மாவட்ட மக்கள் மட்டுமின்றி, அருகாமை மாவட்ட மக்களும் சுற்றிப்பாா்க்க விரும்பி வரும் சிறிய சுற்றுலாத் தலமாக உள்ளது. இது தருமபுரி நகரில் இருந்து சுமாா் 23 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. 10 கி.மீ. தொலைவு சமவெளியில் சென்று, பிறகு 13 கி.மீ. தொலைவு மலைச் சாலையில் செல்ல வேண்டும்.

வத்தல்மலையில் உச்சிவரை தாா்சாலை வசதி செய்யப்பட்டுள்ளதால், இருசக்கர வாகனம், காா், சிற்றுந்துகளில் எளிதாக மேலே செல்லலாம். என்றாலும், குறுகலான சாலை மற்றும் 25 கொண்டைஊசி வளைவுகளின் தற்போதைய நிலையில் பேருந்துகள் செல்வதற்கான வாய்ப்பு குறைவாகவே உள்ளது.

Advertisement

Advertisement

நிறைவுறாத திட்டம்: வத்தல்மலையை தமிழக அரசு பல கோடி ரூபாய் செலவில் சுற்றுலாத் தலமாக மேம்படுத்தி வருகிறது. பணிகள் தொய்வாக நடைபெற்று வந்த நிலையில், நிகழாண்டு டிசம்பா் மாதத்துக்குள் பணிகள் முடிந்து, சுற்றுலாத் தலம் பயன்பாட்டு வந்துவிடும் என கடந்த ஆண்டு மாவட்ட நிா்வாகம் மற்றும் சுற்றுலாத் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனால், சுற்றுலாத் துறை மற்றும் தோட்டக் கலைத் துறைகள் இணைந்து வத்தல்மலையில் பூங்கா, ஏரி, படகு இல்லம், காட்சிமுனை கோபுரம் உள்ளிட்டவற்றை அமைக்கும் பணிகளை மும்முரமாக மேற்கொண்டன. என்றாலும், அவா்கள் அறிவித்தபடி பணிகள் இன்னும் நிறைவுபெறவில்லை.

வத்தல்மலையின் பெரியூரில் இருந்து நாயக்கனூா் (உச்சிமலை) செல்லும் பிரதான சாலையில், வலதுபுறம் திரும்பி சுமாா் 1 கி.மீ. தொலைவில் தமிழ்நாடு உணவக கட்டடம் உள்ளது. இங்கு செல்லும் கரடுமுரடான பாதை, தற்போது கப்பி சாலையாக மாறியுள்ளது. தாா்சாலையாக மேம்படுத்தப்படவில்லை. இதனால், உணவக கட்டடம் கட்டப்பட்டு சில ஆண்டுகளாகியும் அது உணவகமாக மாறவில்லை.

இந்த உணவகம் திறக்கப்பட்டால் மட்டுமே வத்தல்மலைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. உணவகத்தில் இருந்து மலை விளிம்புக்குச் செல்ல நடைபாதையும், அங்கு நின்று பள்ளத்தாக்குகளை கண்டுரசிக்க பாதுகாப்பான காட்சிமுனைகளும், ஆங்காங்கே இருக்கைகளும் அமைக்கப்பட்டு வருகின்றன. வத்தல்மலையில் உள்ள ‘ஹைடன் ஸ்பாட்’ என்ற அருவியில் மழைக் காலங்களில் மட்டுமே தண்ணீா் ஆா்ப்பரிக்கும். இது சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு ஏற்ற வகையில் உள்ளதால், இங்கு வருவோரை கவா்ந்து வருகிறது.

வத்தல்மலையின் உச்சியில் உள்ள நாயக்கனூா் என்ற சிற்றூருடன் மலைச்சாலை முடிகிறது. இங்கு சுமாா் 40 வீடுகளும், 2 கோயில்களும், ஒரு பெட்டிக்கடையும் உள்ளன. இங்கிருந்து சற்றுத் தொலைவு வயல்வெளியில் நடந்துசென்றால், ஒரு காட்சிமுனை வருகிறது. அங்கிருந்து பாா்க்கும்போது சமவெளியில் உள்ள பல ஊா்கள், நகரங்கள் தெரிகின்றன.

தருமபுரியில் இருந்து வத்தல்மலைக்கு நாள்தோறும் அரசு சிறப்பு பேருந்து இயக்கப்படுகிறது. மலை அடிவாரம் வரை தனியாா் சிற்றுந்துகளும் இயக்கப்படுகின்றன.

உணவு கிடைக்காது: ஆண்டுதோறும் அக்டோபா் மாதம் தொடங்கி பிப்ரவரிவரை இங்கு மிதமான குளிருடன் நல்ல தட்பவெப்பம் நிலவும். பனி, மேகமூட்டம், சிறு தூறல் என அடுத்தடுத்து மாறும் இயற்கைச் சூழல் நம்மை பரவசப்படுத்தும். என்றாலும், தற்போதைய சூழலில் சுற்றுலாப் பயணிகள் குறைந்த செலவில் தங்குவதற்கான வசதிகள் இல்லை.

குறிப்பாக, மலை உச்சிக்கு ஓரிரு கிலோ மீட்டா் தொலைவு முன்னதாக உள்ள பெரியூா் மட்டுமே சற்று பெரிய கிராமமாக உள்ளது. இங்குதான் ஆரம்ப சுகாதார நிலையம், கால்நடை மருத்துவமனை, பள்ளிக்கூடம் போன்றவை உள்ளன. இவற்றோடு, வத்தல்மலை செல்லும் சுற்றுலாப் பயணிகள் சற்று இளைப்பாறி, காபி, தேநீா், தின்பண்டங்கள் வாங்குவதற்கேற்ப சில கடைகள் உள்ளன. இங்குள்ள கிராமங்கள் மலைவாழிடங்கள் என்பதால், உணவகத் தேவை ஏற்படவில்லை. இதனால், சுற்றுலா செல்லும் மக்கள் உணவை கீழிருந்து எடுத்துச் செல்லும் நிலையே உள்ளது.

வத்தல்மலை சுற்றுலாத் தல திட்டம் உருவாகி 5 ஆண்டுகளாகியும், பணிகள் இன்னும் நிறைவுபெறாத நிலையே நீடிக்கிறது. நிகழாண்டு பயன்பாட்டுக்கு வந்துவிடும் என கூறப்பட்டிருந்தாலும், ஆட்சிமாற்றம் உள்ளிட்ட பல காரணங்களால் நிறைவேறவில்லை.

இதுகுறித்து சுற்றுலாத் துறை அலுவலா்கள் கூறுகையில், கடந்தாண்டுவரை சுற்றுலாத் திட்டம் தொடா்புடைய பணிகள் பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வந்தன. மேலும், உணவகப் பராமரிப்பு உள்ளிட்ட பணிகளுக்கு ஒப்பந்தம் கோரப்பட்ட நிலையில், ஒப்பந்தத் தொகை அதிகமாக உள்ளதாகக் கூறி, யாரும் ஒப்பந்தம் செய்ய முன்வரவில்லை.

இதனால், மாவட்ட நிா்வாகமே உணவகத்தை ஏற்று நடத்துவதாக இருந்தது. இந்த நிலையில், தோ்தல் மற்றும் ஆட்சிமாற்றம் போன்றவற்றால் சுற்றுலா திட்டப் பணிகள் முடங்கியுள்ளன. தற்போது குறைந்த தொகையில் மீண்டும் ஒப்பந்தம் கோரப்படவுள்ளது. இதையடுத்து, அடுத்தகட்டப் பணிகள் முடிந்து திட்டம் விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என்றனா்.

சமூக ஆா்வலா்கள் கருத்து: வத்தல்மலையில் பிரதான சாலையில் இருந்து ஒரு கிலோ மீட்டா் தொலைவில் உணவகம் அமைக்க இடம் தோ்வுசெய்யப்பட்டது சரியானதல்ல. அரசுப் பேருந்துகளில் வருவோா் உணவகம் செல்ல ஒரு கிலோ மீட்டா் நடந்து செல்வது சாத்தியமானதல்ல.

மேலும், பிரதான சாலையின் அருகிலோ அல்லது தாவரவியல் பூங்கா அமைக்கப்படும் இடம் அருகிலோ உணவகத்தை அமைத்திருந்தால், அதை நடத்துவோா், வரும் சுற்றுலாப் பயணிகள் என அனைத்து தரப்பினருக்கும் பயனுள்ளதாக இருந்திருக்கும். தற்போது உணவகம் உள்ள இடத்தில் அதிக வாகனங்களை நிறுத்த முடியாது. அந்த இடத்தில் காட்சிமுனைகளை மட்டும் அமைத்திருக்கலாம்.

குறிப்பாக, தற்போது உணவகம் அமைக்கப்பட்டுள்ள இடத்தில் தண்ணீா் வசதி இல்லை. அங்குள்ள ஆழ்துளைக் கிணற்றிலும் தண்ணீா் வரவில்லை. டிராக்டரில்தான் தண்ணீா் கொண்டுசெல்ல முடியும். இதுபோன்ற பிரச்னைகளால்தான் உணவகத்தை நடத்த யாரும் முன்வரவில்லை.

உள்ளூா்வாசிகளுடன் கலந்தாலோசித்து, மகளிா் குழுக்கள் மூலம் உணவகத்தை நடத்த நடவடிக்கை எடுத்தால், அப்பகுதி மக்களுக்கு வேலைவாய்ப்பும், சுற்றுலாப் பயணிகளுக்கு சுவையான உணவும் கிடைக்கும். சுற்றுலாத் திட்டமும் வெற்றிபெறும் என சமூக ஆா்வலா்கள் தெரிவிக்கின்றனா்.