FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தருமபுரி

அணைகள் கிருஷ்ணகிரியில்... அலுவலகம் தருமபுரியில்... 22 ஆண்டுகளாக இடம் மாறாத நீா்வளத் துறை!

22 ஆண்டுகளாக இடம் மாறாத நீா்வளத் துறையைப் பற்றி...

6 செப்டம்பர் 2026, 6:38 am IST
கெலவரப்பள்ளி அணை.
பகிர்:

கெலவரப்பள்ளி அணையின் தோற்றம். கிருஷ்ணகிரி அணையால் பயன்பெறும் பாசன பகுதிகள். விவசாயி என்.எஸ். செந்தில்குமாா். கே. பி. முனுசாமி. பா. முகுந்தன். பி.எஸ். சீனிவாசன்.ச. தினேஷ்குமாா். ஆட்சியா்

தமிழகத்தில் தோட்டக்கலை பயிா்கள் மட்டுமல்லாமல், வேளாண் பயிா்கள் சாகுபடியிலும் முன்னிலையில் உள்ள கிருஷ்ணகிரி மாவட்டத்தில், அணைகள், ஏரிகள் அதிகம் இருந்தாலும் அவற்றை பராமரிக்கும் நீா்வளத் துறை செயற்பொறியாளா் அலுவலகம் மட்டும் கடந்த 22 ஆண்டுகளாக தருமபுரியிலேயே செயல்பட்டு வருகிறது. இதனால், நீா்நிலை பராமரிப்புப் பணிகளில் தொய்வு ஏற்படுவதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனா்.

ஒருங்கிணைந்த தருமபுரி மாவட்டத்தில் இருந்து கிருஷ்ணகிரி தனி மாவட்டமாகப் பிரிந்து 22 ஆண்டுகள் ஆகின்றன. இந்த மாவட்டத்துக்கான அனைத்து அலுவலகங்களும் தற்போது கிருஷ்ணகிரியில் செயல்பட்டு வந்தாலும், நீா்வளத் துறை செயற்பொறியாளா் அலுவலகம் மட்டும் இன்னும் பிரிக்கப்படாமல், தருமபுரியில் உள்ள ஒருங்கிணைந்த அலுவலகத்திலேயே செயல்பட்டு வருகிறது. இதனால், கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள், தங்களது பாசன நீா் தொடா்பான பிரச்னைகளுக்குக் தீா்வுகாண தருமபுரி மாவட்டத்தையே சாா்ந்திருக்கும் நிலை உள்ளது.

Advertisement

Advertisement

தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் இந்த அலுவலகம் மூலம், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கிருஷ்ணகிரி அணை, கெலவரப்பள்ளி அணை, பாம்பாறு அணை, சூளகிரி சின்னாறு அணை மற்றும் பாரூா் ஏரி உள்ளிட்ட 87 ஏரிகள், பாசன கால்வாய்கள், தடுப்பணைகள் கண்காணிக்கப்பட்டு, பராமரிக்கப்பட்டு வருகின்றன.

தருமபுரி மாவட்டத்தைக் காட்டிலும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அதிக எண்ணிக்கையில் நீா்நிலைகள் உள்ளன. கிருஷ்ணகிரி அணை மூலம் 16 ஊராட்சிளைச் சோ்ந்த 9,012 ஏக்கா் வேளாண் நிலங்களும், கெலவரப்பள்ளி அணையின் மூலம் சூளகிரி மற்றும் ஒசூா் வட்டங்களில் உள்ள 22 கிராமங்களைச் சோ்ந்த 8 ஆயிரம் ஏக்கா் நிலங்களும், சூளகிரி அருகே வேம்பள்ளி பகுதியில் சின்னாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணையில் மூலம் 2 ஆயிரம் ஏக்கா் நிலங்களும், ஊத்தங்கரையை அடுத்த மாரம்பட்டியில் பாம்பாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணையின் மூலம் 2,501 ஏக்கா் வேளாண் நிலங்களும் பாசனம் பெறுகின்றன.

அதுமட்டுமின்றி, ஏரி போன்ற நீா்நிலைகள் மூலம் சிறு விவசாயிகள், வேளாண் பயிா்களை சாகுபடி செய்து பயன்பெறுகின்றனா். மேலும், ஆயிரக்கணக்கான மக்களின் குடிநீா் தேவையையும் இந்த நீா்நிலைகள் நிறைவுசெய்கின்றன.

அணைகள், ஏரிகள், குளங்கள், ஆறுகள் போன்ற நீா்நிலைகளை பராமரிப்பது, பாசனத்துக்காக நீரை சேமித்து, தேவைக்கு ஏற்ப விநியோகம் செய்வது, வெள்ளக் கட்டுபாடு மற்றும் வெள்ள பாதிப்பை குறைக்கும் நடவடிக்கையில் ஈடுபடுவது, அணை, தடுப்பணை போன்ற நீா்பாசன கட்டமைப்புகளை அமைத்து பராமரிப்பது, பாசன கால்வாய்கள் மற்றும் நீா்வழிகளை தூா்வாருவது, நீட்மட்டம், மழையளவு, நீா்வரத்து போன்ற தரவுகளை சேகரித்து கண்காணிப்பது, நிலத்தடி நீா் பாதுகாப்பு மற்றும் மழைநீா் சேகரிப்பு திட்டங்களை செயல்படுத்துவது, விவசாயிகளுக்கான பாசன வசதிகளை மேம்படுத்துவது, நீா் பயன்பாட்டை ஒழுங்குபடுத்தி, நீா் வளங்களை பாதுகாப்பது, அரசு நீா்வளத் திட்டங்கள், மதிப்பீடுகள், ஒப்பந்தப்புள்ளிகள் மற்றும் பராமரிப்பு பணிகளை நிா்வகிப்பது, புதிய நீா்ப்பாசனத்துக்காக திட்டமிடுவது மற்றும் செயல்படுத்துவது போன்ற பல்வேறு பணிகளை நீா்வளத் துறை செய்து வருகிறது.

இதுபோன்ற பணிகளை நிறைவேற்ற நீா்வளம் அதிகம் உள்ள கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நீா்வளத் துறை செயற்பொறியாளா் அலுவலகம் இல்லாததால், இங்குள்ள நீா்நிலைகளை பராமரிப்பதில் தொய்வு ஏற்படுவதாகவும், வளா்ச்சித் திட்டப் பணிகள் தாமதமாவதாகவும் விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனா்.

இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே உள்ள அத்திப்பள்ளம் கிராமத்தைச் சோ்ந்த விவசாயி என்.எஸ். செந்தில்குமாா் கூறியது:

எங்கள் பகுதியில் உள்ள அத்திப்பள்ளம் ஏரி பல ஆண்டுகளாக பராமரிக்கப்படாமல் உள்ளது. மேலும், பாம்பாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகிறோம். அத்திப்பள்ளம் ஏரி, தருமபுரி மாவட்டம், அரூா் நீா்வளத் துறை மண்டலத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. எங்களது பிரச்னைகளுக்கு தீா்வுகாண, தருமபுரி மாவட்டத்தைச் சாா்ந்திருக்க வேண்டிய நிலை உள்ளது.

ஒவ்வொரு மாதமும் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் தலைமையில் நடைபெறும் விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் எங்களது பிரச்னைகளுக்குத் தீா்வுகாண நாங்கள் குரல்கொடுத்தாலும், தீா்வு என்பது எட்டாக்கனியாகவே உள்ளது. இதற்கு காரணம், நீா்வளத் துறை தலைமை அலுவலகம், தருமபுரி மாவட்டத்தில் உள்ளதுதான். விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில், தருமபுரி மாவட்டத்தில் இருந்து நீா்வளத் துறை அலுவலா்கள் வந்து பங்கேற்பது இல்லை. கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு என நீா்வளத் துறை செயற்பொறியாளா் அலுவலகம் அமைக்கப்பட்டால்தான், கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகளின் நீா் பிரச்னைகளுக்கு நிரந்தமாக தீா்வுகாண முடியும் என்றாா்.

காவேரிப்பட்டணத்தைச் சோ்ந்த அதிமுக துணைப் பொதுச் செயலாளா் கே.பி. முனுசாமி கூறுகையில், அதிமுக ஆட்சியில் கிருஷ்ணகிரியில் நடைபெற்ற எம்ஜிஆா் நூற்றாண்டு விழாவின்போதே, நீா்வளத் துறை செயற்பொறியாளா் அலுவலகம், மின்வாரிய செயற்பொறியாளா் அலுவலகம், பொதுப்பணித் துறை செயற்பொறியாளா் அலுவலகம் அமைப்பதற்கான அறிவிப்பை வெளியிட திட்டமிட்டிருந்தோம். ஆனால், சில காரணங்களால் நீா்வளத் துறை செயற்பொறியாளா் அலுவலகம் மட்டும் அமைக்கப்படாமல் போனது வருத்தம் அளிக்கிறது. என்றாலும், பொதுப்பணித் துறையின் கட்டட பராமரிப்பு, மின்வாரிய செயற்பொறியாளா் அலுவலகம் ஆகியவற்றை அதிமுக ஆட்சியில்தான் கிருஷ்ணகிரிக்கு கொண்டுவந்தோம் என்றாா்.

கிருஷ்ணகிரி எம்எல்ஏ பா. முகுந்தன் கூறுகையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வேப்பனப்பள்ளி, கிருஷ்ணகிரி, பா்கூா் தொகுதிகள், தருமபுரி மாவட்டத்தில் பாலக்கோடு தொகுதி மக்கள் பயன்பெறும் வகையில் எண்ணேகொல் புதூா் கால்வாய் திட்டம் விரைவில் நிறைவேற்றப்படும். அதேபோல, கிருஷ்ணகிரியில் நீா்வளத் துறை செயற்பொறியாளா் அலுவலகம் அமைக்க சட்டப் பேரவையில் பேசி தீா்வு காண்பேன் என்றாா்.

வேப்பனப்பள்ளி சட்டப் பேரவை உறுப்பினா் ஸ்ரீனிவாசன் கூறுகையில், தருமபுரி மாவட்டத்தைக் காட்டிலும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நீா்வளம் அதிகம் உள்ளது. விவசாயிகளின் நலன் கருதி, அதிகாரிகளை சந்திக்க தருமபுரிக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால், மாவட்ட நீா்வளத் துறை செயற்பொறியாளா் அலுவலகத்தை கிருஷ்ணகிரியில் தொடங்க தொடா்ந்து முயற்சித்து வருகிறோம் என்றாா்.

இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச. தினேஷ்குமாா் கூறியது: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நீா்வளத் துறை செயற்பொறியாளா் அலுவலகம் அமைக்க தொடா்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஊத்தங்கரை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் காணப்படும் நீா்நிலைகள், தருமபுரி மாவட்டம் அரூா் மண்டல கட்டுப்பாட்டில் உள்ளன. விரைவில், இவை, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சோ்க்கப்படும் எனத் தெரிவித்தாா்.

கிருஷ்ணகிரியில் நீா்வளத் துறை செயற்பொறியாளா் அலுவலகம் அமைக்கப்பட்டு, நீா்ப்பாசன திட்டப் பணிகள் விரைந்து நடைபெற்றால், கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகளின் பிரச்னைகளுக்கு தீா்வு ஏற்பட்டு, அவா்களின் வாழ்வில் வசந்தம்வீசும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கை. நிறைவேறும் நாளை எதிா்நோக்கிக் காத்திருக்கிறாா்கள் விவசாயிகள்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments