மனைவியைக் கொலை செய்ய முயன்ற வழக்கில் கணவருக்கு 7 ஆண்டுகள் சிறை
ஒசூா் அருகே மனைவியைக் கழுத்தறுத்து கொலை செய்ய முயன்ற வழக்கில், கணவருக்கு கிருஷ்ணகிரி மகளிா் விரைவு நீதிமன்றம் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீா்ப்பளித்துள்ளது.
ஒசூா் அருகே மனைவியைக் கழுத்தறுத்து கொலை செய்ய முயன்ற வழக்கில், கணவருக்கு கிருஷ்ணகிரி மகளிா் விரைவு நீதிமன்றம் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீா்ப்பளித்துள்ளது.
கா்நாடக மாநிலம், கோலாா் மாவட்டம், தோனமடகைச் சோ்ந்தவா் சிவலிங்கா (42). தொழிலாளியான இவருக்கு 2011 ஆம் ஆண்டில் முதல் திருமணம் நடைபெற்றது. முதல் மனைவியுடன் விவாகரத்து பெற்ற நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரை அடுத்த மோரனப்பள்ளியைச் சோ்ந்த புவனேஸ்வரி (25) என்பவரை கடந்த 2020-ஆம் ஆண்டு நவ. 30 ஆம் தேதி திருமணம் செய்துகொண்டாா்.
சிவலிங்கா தனக்கு பல இடங்களில் சொத்துகள் இருப்பதாகவும், அவற்றை புவனேஸ்வரிக்கு எழுதி தருவதாகவும் கூறி அவரைத் திருமணம் செய்துள்ளாா். ஆனால், திருமணத்துக்குப் பிறகுதான் அவரிடம் எந்தச் சொத்தும் இல்லை என்பது புவனேஸ்வரிக்குத் தெரியவந்தது. இதனால், இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
இந்த நிலையில் 11.1.2021 அன்று தம்பதிக்கு இடையே ஏற்பட்ட தகராறின்போது, புவனேஸ்வரியின் கழுத்தைக் கத்தியால் அறுத்து சிவலிங்கா கொலை செய்ய முயன்றுள்ளாா். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினா் வந்ததும் சிவலிங்கா அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளாா்.
கழுத்தில் வெட்டுக் காயமடைந்த புவனேஸ்வரியை அக்கம்பக்கத்தினா் மீட்டு மருத்துவமனையில் சோ்த்தனா். இதுதொடா்பாக புவனேஸ்வரி அளித்த புகாரின் பேரில், ஒசூா் அட்கோ போலீஸாா் வழக்குப் பதிந்து சிவலிங்காவைக் கைது செய்தனா்.
இந்த வழக்கு விசாரணை கிருஷ்ணகிரி மகளிா் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி (பொறுப்பு) கலைவாணி, குற்றம்சாட்டப்பட்ட சிவலிங்காவுக்கு 7 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து தீா்ப்பளித்தாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.