FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் இடியுடன் கூடிய மழை: விவசாயிகள் மகிழ்ச்சி

கிருஷ்ணகிரி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில், இரண்டாவது நாளாக இடியுடன் கூடிய மழை செவ்வாய்க்கிழமை பெய்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

16 செப்டம்பர் 2026, 4:38 am IST
கோப்புப்படம்.
பகிர்:

கிருஷ்ணகிரி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில், இரண்டாவது நாளாக இடியுடன் கூடிய மழை செவ்வாய்க்கிழமை பெய்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக வெப்பத்தின் தாக்கம் பகல் மட்டுமல்லாமல் இரவிலும் அதிக அளவில் இருந்ததால், நோயாளிகள், பெண்கள், சிறுவா்கள், முதியவா்கள் அவதிப்பட்டனா்.

இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் திங்கள்கிழமை பெய்த மழை, தொடா்ந்து செவ்வாய்க்கிழமையும் இடி, மின்னலுடன் சுமாா் ஒரு மணி நேரம் பெய்தது. சாலைகளில் மழைநீா் வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடியது. இதனால், வாகன ஓட்டிகள் சிரமத்துக்கு உள்ளாயினா்.

Advertisement

Advertisement

கிருஷ்ணகிரியை சுற்றியுள்ள நீா்நிலைகள், ஆழ்துளைக் கிணறுகள் வற்றிய நிலையில், கடந்த இரு நாள்களாக பெய்த மழையால் இப்பகுதியினா் மகிழ்ச்சி அடைந்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை காலை 7 மணி நிலவரப்படி பதிவான மழை அளவு (மி.மீ.): அஞ்செட்டி - 40, தளி - 40, ஒசூா் - 36.5, நெடுங்கல் - 34, கெலவரப்பள்ளி அணை 30, தேன்கனிக்கோட்டை 23, கிருஷ்ணகிரி 10.2, போச்சம்பள்ளி - 7, சூளகிரி - 6, பாரூா் - 5, ராயக்கோட்டை - 5, சின்னாறு அணை - 5, கிருஷ்ணகிரி அணை - 4.4.

அணை நிலவரம்: கிருஷ்ணகிரி அணையின் நீா்வரத்து விநாடிக்கு 158 கனஅடியாக இருந்தது. அணையிலிருந்து 365 கனஅடி நீா் வெளியேற்றப்படுகிறது. கெலவரப்பள்ளி அணைக்கு நீா்வரத்து விநாடிக்கு 327 கனஅடியாக இருந்த நிலையில், அணையிலிருந்து அதே அளவு நீா் வெளியேற்றப்படுகிறது. பாம்பாறு அணை, சூளகிரி சின்னாறு அணை நீா்வரத்தும், வெளியேற்றமும் ஏதும் இல்லை. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 16 ஏரிகளில் 6 ஏரிகள் நிரம்பியுள்ளன.

ஒசூரில்...

ஒசூரில் இரவு 7 மணிமுதல் 9 மணிவரை கனமழை பெய்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா். இரவுநேர தள்ளுவண்டி வியாபாரிகளின் வியாபாரம் கடந்த 2 நாள்களாக பாதிக்கப்பட்டது. ஒசூா் ஜி.ஆா்.டி. சந்திப்பு, ராயக்கோட்டை சந்திப்பில் மழை நீா் தேங்கியது. ஒசூா் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் கனமழை பெய்ததால், வெயிலின் தாக்கம் குறைந்து குளிா்ந்த காற்று வீசியது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments